Advertisement

மாநகராட்சி மண்டபம், ஆளுங்கட்சியினருக்கு இலவசம்!

Share

''அடம் பிடிச்சு பார்த்துட்டு வந்துட்டாங்க...'' என, முதல் தகவலை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.

''யாரை, யாருவே பார்த்தது...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''உள்ளாட்சி தேர்தலுக்கான வேலைகள் தீவிரமா நடந்துட்டு இருக்கே... இது சம்பந்தமா, சில புகார்களை தெரிவிக்க, சென்னையில இருக்கிற, மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,யான ஆர்.எஸ். பாரதி தலைமையில, நிர்வாகிகள் சமீபத்துல போனாங்க... ''அவங்களை தட்டிக் கழிக்க, 'தேர்தல் ஆணையர் மீட்டிங்ல இருக்கார்'னு அதிகாரிகள் சொல்லியிருக்காங்க... ஆனா, 'அவரை பார்க்காம போக மாட்டோம்'னு சொல்லி, தி.மு.க., நிர்வாகிகள் அங்கயே உட்கார்ந்துட்டாங்க... ''வேற வழியில்லாம, தானும் வீட்டுக்கு போகணுமேன்னு, தேர்தல் ஆணையர், தி.மு.க., நிர்வாகிகளை பார்த்து அனுப்பினாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''டில்லியோட தொடர்புலயே இருந்ததால, வாய்ப்பு குடுத்திருக்கா ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு வந்தார், குப்பண்ணா.

''டில்லின்னா, கண்டிப்பா தேசியக் கட்சி தகவலா தான் இருக்கணும்... சட்டுபுட்டுன்னு சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''மத்திய, பா.ஜ., அரசுக்கு எதிரா, காங்கிரஸ் சார்புல, நாடு தழுவிய அளவுல போராட்டங்கள் நடத்த, சோனியா உத்தரவு போட்டிருக்காங்களே... ஆந்திரா மாநிலத்துல நடக்கிற போராட்டங்களை ஒருங்கிணைக்க, காஞ்சிபுரம் முன்னாள், எம்.பி.,யான விஸ்வநாதனை, ஆந்திரா மாநில பார்வையாளரா நியமிச்சிருக்காங்க ஓய்... ''இவர், பதவியில இல்லாட்டியும், ராகுலோட தொடர்புலயே இருக்காராம்... 'அதனால தான், கேரளாவின் வயநாடு தொகுதியில ராகுல் போட்டியிட்டப்ப, விஸ்வநாதனை, தேர்தல் பொறுப்பாளரா போட்டார்... இப்பவும், வாய்ப்பு குடுத்திருக்கார்'னு சான்ஸ் கிடைக்காத காங்கிரசார் புழுங்கிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''ஆளுங்கட்சியில இருந்தா, அரசு சொத்தை ஏகபோகமா அனுபவிக்கலாம் பா...'' என, சலித்துக் கொண்டார், அன்வர்பாய்.

''அனுபவிச்சது யார்னு தெளிவா சொல்லும்...'' என்றார் அண்ணாச்சி.

''சென்னை ராயப்பேட்டை, சீனிவாச பெருமாள் முதல் தெருவுல, மாநகராட்சிக்கு சொந்தமான சமூக நலக் கூடம் இருக்குது... இங்க, திருமணம், பிறந்த நாள் மாதிரி நிகழ்ச்சிகளை, வாடகை கட்டி, நடத்திக்கலாம் பா... ''சமீபத்துல, இந்த சமூக நலக் கூடத்துல, அந்தப் பகுதியைச் சேர்ந்த, ஆளுங்கட்சி நிர்வாகி ஒருத்தரின் ஆசியோட, பக்கத்து வார்டைச் சேர்ந்த ஆளுங்கட்சி நிர்வாகி, தன் பிறந்தநாள் விழாவை, தடபுடலா கொண்டாடினார்... இதுல எந்த தப்பும் இல்லை பா...

''ஆனா, இதுக்காக, மாநகராட்சிக்கு எந்த வாடகையும் கட்டலை... ஆளுங்கட்சிங்கிறதால, அதிகாரிகளும் இதை கண்டுக்கலை... சாதாரண மக்கள்னா சும்மா விடுவாங்களா பா...'' என முடித்த அன்வர்பாய் கிளம்பினார்.

எதிரில் வந்த நண்பர்களை பார்த்த அண்ணாச்சி, ''பாபு, இளமாறன் நல்லாயிருக்கீயளா... பார்த்து, ரொம்ப நாளாச்சுல்லா...'' என கதை பேச, மற்றவர்கள் கிளம்பினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    பொதுச்சொத்துக்களெல்லாம் இப்படி ஆளும் கட்சியினருக்கு விடப்படுவதால்தான் நஷ்டம், பிரசினைகள் கிளம்புகின்றன டீக்கடையில் டீ, வடை ஓசியில் தின்பதில் ஆரம்பித்து, கல்யாண மண்டபம், கார், வான் பயணம் என்று காசை விடாமல் அனுபவித்துவிட்டு, நஷ்டம் ஆனால் மக்கள் தலையில் கட்டவேண்டியது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement