Advertisement

வெங்காயம் வெறும் வெங்காயம் அல்ல!

Share

அரசியலில் காய் நகர்த்தல் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் காய் ஒன்று அரசியலை காலங்காலமாக நகர்த்திக் கொண்டிருக்கிறது. அந்தக் காய் வெங்காயம் என்பது சொல்லாமலே புரியும். ''எதற்காக திடீரென்று வெங்காயத்தின் ஏற்றுமதியை இந்தியா நிறுத்தியது என எனக்குத் தெரியவில்லை. ஆனால் எங்களுக்கு கடினமாக இருக்கிறது.

எதிர்காலத்தில் இதுபோன்ற முடிவுகளை எடுக்கும் முன் எங்களுக்கு முன்கூட்டியே தெரிவித்தால் உதவியாக இருக்கும். நான் என்னுடைய சமையல்காரரை அழைத்து, அனுமதியில்லாமல் உணவில் வெங்காயத்தை சேர்க்கக் கூடாது என்று சொல்லிவிட்டேன்'' என வெங்காயத்துக்காக ஆதங்கப்பட்டிருக்கிறார் டில்லி வந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா.வெங்காயத்தின் விலை அண்மையில் 80 ஐ தொட்டது. மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது. விலை குறைந்தது. தற்போது மீண்டும் விலை ஏறியிருக்கிறது. இன்னும் விலையேறும் என்கிறார்கள் வியாபாரிகள்.'மகாராஷ்டிர மாநிலத்தில் கோடை காலத்தில் பயிரிடப்பட்ட வெங்காய இருப்பு தான் இதுவரை விற்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள லாசல்கான் வெங்காய சந்தையில் கிலோ ரூ.45 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இனிமேல் அறுவடை செய்யப்படும் புதிய வெங்காயம் வந்தால்தான் விலை குறையும்' என்கிறார்கள் வியாபாரிகள்.

அரசியல் காய்வெங்காய விலை அதிகரித்தால் ஆட்சியாளர்களுக்கு உதறல் எடுத்து விடும். காரணம், பல தலைவர்களை ஆட்சியில் இருந்து அகற்றிய 'பெருமையும்' இந்த வெங்காயத்துக்கு உண்டு. எப்படி என்கிறீர்களா? கடந்த கால தேர்தல் அனுபவங்களைப் பார்த்தால் தெரியும்.இந்திரா பிரதமராக இருந்தபோது கொண்டு வந்த நெருக்கடி நிலையையடுத்து வந்த 1977 தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். மத்தியில் ஜனதா கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தது. ஒற்றுமையின்மையால் ஆட்சி கவிழ்ந்தது. தேர்தலை சந்திக்க ரெடியானார் இந்திரா. சுமார் மூன்றாண்டுகள் ஜனதா ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டு ஏதும் சொல்ல முடியவில்லை. எந்த பிரச்சனையை முன்னெடுக்கலாம் என யோசித்த இந்திரா முன்பாகச் சட்டென வந்து நின்றது வெங்காயம். அப்போது வெங்காயம் ஒரு கிலோ ரூ.5 என்ற உச்சத்தில் இருந்தது. ''கூட்டணி அரசின் தோல்வியால் வெங்காயத்தின் விலை உயர்ந்துவிட்டது'' என்று இந்திரா முன்னெடுத்த பிரசாரத்தில் வெற்றி பெற்றார். 1980 லோக்சபா தேர்தலில் பிரதமர் சரண்சிங்கை வீழ்த்தி இந்திரா பிரதமரானார்.

வெங்காயம் வீச்சு1998ல் மத்தியில் பா.ஜ., ஆட்சியில் இருந்தபோது அப்போது நடந்த தேர்தலில் டில்லி மாநில பா.ஜ., அரசை வீட்டுக்கு அனுப்பியதும், காங்கிரஸ் மூத்த தலைவர் ஷீலா தீட்சித்தை முதல்வர் ஆக்கியதும் வெங்காய விலை உயர்வுதான். அதே ஆண்டு பிற்பகுதியில் ராஜஸ்தானில் 200-க்கு 153 என்ற அமோக வெற்றியை காங்கிரசுக்குப் பரிசளித்ததும் வெங்காய விலை உயர்வை முன்னிறுத்திய பிரசாரம்தான். அந்த வெங்காய அலையில் அசோக் கெலாட் அப்போது முதல் முறையாக ராஜஸ்தான் முதல்வர் ஆனார்.மகாராஷ்டிராவின் முன்னணி அரசியல் தலைவராக இருந்த சரத் பவார் 2006ல் மத்திய வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்தார். அவர் மீது கோபம் கொண்ட விவசாயிகள், நாசிக் பொதுக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது வெங்காயத்தை வீசினர். 2010ல் டில்லியில் பா.ஜ., பெரிய போராட்டம் நடத்தும் அளவுக்கு வெங்காயத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டது. வெங்காயம் ஏற்றுமதிக்குத் தடை, இறக்குமதி வரி குறைப்பு போன்ற நடவடிக்கைகளை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் எடுத்தார்.2013ல் வெங்காயத்தின் விலை எகிறியது. வெங்காயம் ஏற்றி வந்த லாரியைக் கடத்தியவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். வெங்காயத்தை வங்கியில் டெபாசிட் செய்யும் நுாதனப் போராட்டம் நடைபெற்ற ஒரே நாடு இந்தியாதான்!

விவசாயிகள் வேதனைகடந்த 2015ல் டில்லியில் வெங்காய விலை கிலோ ரூ.80 ஐ எட்டியபோது, பாகிஸ்தானில் இருந்து கிலோ ரூ.40 க்கு இறக்குமதி செய்ய முடிவெடுத்தார் பிரதமர் நரேந்திர மோடி. குறுகிய காலத்தில் விளையும், குறைந்த தண்ணீர் வசதி உள்ள பகுதிகளில் விளையக் கூடிய, பணப் பயிராக வெங்காயத்தை விவசாயிகள் பார்க்கின்றனர். எனவே விவசாயிகளுக்கு ஒரு வகையில் வருமானத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் பயிராக அது பார்க்கப்படுகிறது. என்றாலும் 2017--18ல் நாசிக் மாவட்டத்தில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.2 எனச் சரிந்து விவசாயிகள் வேதனையால் விம்மியதும் உண்டு.இந்தியர்களின் உணவில் தவிர்க்க முடியாத காய்கறியாக வெங்காயம் உள்ளது. மக்கள் தொகையில் 55 சதவிகிதம் பேர் வெங்காயத்தைச் சார்ந்துள்ளனர். இந்த அளவீடு ஆண்டுக்கு 2.5 சதவிகிதம் என்ற அளவில் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. ''வெங்காயம் என்பது வெறும் காய்கறி வகையைச் சேர்ந்தது மட்டுமல்ல, மக்களின் கலாசாரத்தில் முக்கியமான அங்கம் வகிப்பதாகவும் உள்ளது'' என உணவு வரலாற்றாளர் டாக்டர் மோஹ்சீனா முகடம் கூறுகிறார்.

சீனா முதலிடம்உலகில் வெங்காய உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருப்பது நமது நாடுதான். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெங்காய பயன்பாடு இருந்தாலும், உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் (30 சதவிகிதம்) உள்ளது. தொடர்ந்து மத்திய பிரதேசம் (16), கர்நாடகா (11), குஜராத் (6), பீகார் (5.7), தமிழ்நாடு (1.2) ஆகியவை உள்ளன. பிற மாநிலங்கள் 36.1 சதவிகித வெங்காயத்தை உற்பத்தி செய்கின்றன.நாட்டில் வெங்காயம் உற்பத்தி பரப்பு 14 லட்சம் எக்டேர். கடந்த 11 ஆண்டுகளில் வெங்காய உற்பத்தி 69 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. வெங்காய உற்பத்தி 2.24 கோடி டன்னாக உள்ளது. ஏற்றுமதி 24.16 லட்சம் டன். கடந்த ஆண்டு இது 14 லட்சம் டன்னாகச் சரிந்தது. இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, வங்கதேசம் ஆகியவை அதிக அளவு வெங்காயத்தை இறக்குமதி செய்கின்றன. வெங்காய விற்பனை மூலமான கிடைக்கும் ஆண்டு வருமானம் 15 ஆயிரம் கோடி ரூபாய்.சரியான விலை, சரியான உற்பத்தி முறை, சரியான இருப்பு முறைகள் இல்லாததால் 30 சதவிகித வெங்காயம் குப்பைக்குப் போகிறது. வெங்காய உற்பத்தியில் உலகில் இரண்டாவது இடம் என்றாலும் எக்டேருக்கு கிடைக்கும் மகசூல் குறைவு. அமெரிக்காவில் ஒரு ஹெக்டேருக்கு 66.82 டன் உற்பத்தி செய்யப்படுகிறது. தென் கொரியாவில் 65.68 டன். சீனாவில் 22.08 டன். இந்தியாவில் 17.17 டன் தான்.

ஏன் அரசியலாக்கப்படுகிறதுவெங்காயம் பல்வேறு உணவு வகைகளுக்கு தனித்துவமான ருசியைத் தருகிறது. அத்துடன் விலை குறைவு என்பதால் பெருவாரியான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. தங்கம் விலை உயர்ந்தால் அது ஒட்டுமொத்த மக்களைப் பாதிப்பதில்லை. விவாதமும் பெரிதாக எழுவதில்லை. ஆனால் வெங்காயம் அப்படியல்ல. எளிய மக்களை எட்டுகிறது. அதனால் தான் வெங்காயத்தின் விலை உயர்வு பணவீக்கத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. எனவே தான் அதுகுறித்து நிறைய விவாதங்கள் நடக்கின்றன.அதிக அளவில் வெங்காயம் உற்பத்தி செய்யும் மகாராஷ்டிராவில் மட்டுமல்லாமல் கர்நாடகா, குஜராத் மாநிலங்களிலும் இந்த ஆண்டு கடும் மழை. மழை காரணமாக வெங்காயப் பயிர்கள் பாதிக்கப்பட்டன. உற்பத்தி அளவில் சிறிய மாறுபாடு ஏற்பட்டாலும் வெங்காயத்தின் விலையில் பெரிய அளவில் ஏற்ற, இறக்கம் ஏற்படும்.

விலை குறைந்தால்..வெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடைந்தால் வெங்காயம் உற்பத்தி செய்யும் மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் மாநில விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். 'வெங்காயத்தின் விலை அதிகம் உயரும்போது அரசு வேகமாக நடவடிக்கை எடுக்கிறது. சரியும்போது, அதே வேகத்தில் அரசு ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை? எங்களுக்கு நியாயமான விலை கிடைக்கச் செய்ய வேண்டும். ஒரு குவிண்டாலை குறைந்தபட்சம் ரூ.1500க்கு வாங்கிக் கொள்ள வேண்டும்' என்கிறார்கள் விவசாயிகள்.அடிப்படை நிலையில் திட்டமிடல், சேமித்து வைக்க நல்ல வசதிகள், உணவுப் பதப்படுத்தல் வசதிகள் மூலம் விலை உயர்வு பிரச்சனையைத் தவிர்த்து.. வெங்காய விலை உயர்வால் கண்ணைக் கசக்குவதைத் தவிர்க்கலாம்.-
- ப.திருமலைபத்திரிகையாளர்மதுரைthirugeetha@gmail.com

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement