Advertisement

'எழு ஞாயிறு' எனக் கூறி ஓட்டு கேட்பாரா ஸ்டாலின்?

Share

டி.ஆர்.ஷியாம் சுந்தர், ஐராவதநல்லுார், மதுரை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தொன்மை வாய்ந்த, திருவள்ளுவரை இழிவுபடுத்தியவர், ஈ.வெ.ரா., தான். 'தமிழும் தமிழரும்' என்ற புத்தகத்தில், 'திருவள்ளுவன், அக்காலத்திற்கு ஏற்ற வகையில், ஆரிய கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் வகையில், பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல், நீதி கூறும் வகையில் எழுதி இருந்தார். தன் மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்' என, எழுதி உள்ளார்.

திருவள்ளுவரை ஒரு ஹிந்துவாக, ஈ.வெ.ரா., பார்த்தார் என்பதற்கு, இதைவிட என்ன ஆதாரம் இருக்கிறது. 'திருவள்ளுவர் சிலை மீது, காவி சாயம் பூசி, பா.ஜ., தமிழ் துரோகம், செய்துவிட்டது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'டுவிட்டரில்' பதிவு செய்துள்ளார். 'பா.ஜ.,வினர் திருக்குறள் படித்தாவது திருந்தட்டும்' என சொல்லி இருக்கிறார்.திருக்குறளில், பல இடங்களில், 'இறை' என்றும் 'மறை' என்றும், திருவள்ளுவர் வலியுறுத்தியுள்ளார்; அவர் நிச்சயம் நாத்திகர் அல்ல!

ஒரு குறளில்,'அடியளந்தான்' என, திருமாலின் அவதாரத்தை குறிப்பிடுகிறார். எதற்கு எடுத்தாலும் அரசியல் செய்யும் ஸ்டாலின், சமஸ்கிருதத்திற்கு, இன்னொரு தீவிர எதிர்ப்பாளராக உள்ளார்; அவருக்கு ஒரு கேள்வி... பா.ஜ.,வின் சின்னம், தாமரை; அ.தி.மு.க.,வின் சின்னம் இரட்டை இலை; தே.மு.தி.க.,வின் சின்னம், முரசு; பா.ம.க.,வின் சின்னம் மாங்கனி. இவை அனைத்திலும் தமிழ் சொல் உள்ளது.

ஆனால், தி.மு.க.வின், உதயசூரியன் சின்னத்தில், சமஸ்கிருதம் மட்டுமே கோலோச்சுகிறது. தி.மு.க.,வின் சமஸ்கிருத அடிமைத்தனத்தை களைந் தெறிய இனி, 'எழு ஞாயிறு' என்ற சொல்லையே பயன்படுத்த வேண்டும். ஸ்டாலின் செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?


***

அ.தி.மு.க.,வுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர்!பி.ஜெயபிரகாஷ், பொள்ளாச்சி, கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'காங்கிரஸ் நிலை, தி.மு.க.,வுக்கு ஏற்பட்டு விடுமா?' என்ற தலைப்பில், வாசகர் ஒருவர், இதே பகுதியில், கடிதம் எழுதி இருந்தார். இதில், தி.மு.க., வை கொச்சைப்படுத்தும் விதமாக, சில கருத்துகளை கூறி இருந்தார்; வாசகருக்கு தகுந்த விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன்...

லோக்சபா தேர்தலில், பெரியகுளம் தொகுதி தவிர, 39 தொகுதிகளையும், தி.மு.க., கூட்டணியிடம் ஆளும் கட்சி பறி கொடுத்ததே... சட்டசபை இடைத்தேர்தலில், 13 அ.தி.மு.க., தொகுதிகளை, தி.மு.க., அப்படியே அள்ளியதே... இந்த இரண்டையும் அவ்வளவு சுலபமாக கருதி விட்டாரா, அந்த வாசகர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், சாணந்தோப்பு கிராமத்தில், அ.தி.மு.க.,வினர், ஒரு ஓட்டுக்கு, 2,000 ரூபாய் கொடுத்ததாக, கிராம பெண்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்; இது, சமூக வலைதளங்களில் வைரலாகி பரவியதே; இதை வாசகர் அறியவில்லையா...

கடந்த, 2016 பொதுத்தேர்தலில், தி.மு.க., வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை, அ.தி.மு.க., வென்றதாக அதிகாரிகளை மிரட்டி அறிவிக்க செய்து, மக்களை முட்டாளாக்கினார். இதற்கு, சிறந்த உதாரணம், ராதாபுரம் தொகுதி. இதன் மறு எண்ணிக்கை முடிவை கூட கூறாமல், மக்களை ஏய்க்கின்றனர். 11 எம்.எல்.ஏ.,க்கள், அ.தி.மு.க.,வுக்கு எதிராக, ஓட்டளித்த வழக்கின் தீர்ப்பை வழங்காமல், இழுத்தடிக்கின்றனர். இன்னும் சொல்லப் போனால், சிறந்த ஆளுமை மிக்க ஜெயலலிதாவை, பர்கூர் சட்டசபை தேர்தலில், தி.மு.க., தோற்கடித்ததே... இதையெல்லாம் வாசகர் மறந்து விட்டாரா...

தி.மு.க., மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே, வாசகர் கடிதம் எழுதியுள்ளார். காங்கிரசோடு, தி.மு.க.,வை ஒப்பிட்டு பேச, அவருக்கு மனம் ஏன் வந்தது என, புரியவில்லை. பூனை கண்ணை மூடிக் கொண்டால், உலகம் இருட்டு என, கூறியது போல், வாசகரின் வாதம் உள்ளது. குடத்தில் இட்ட விளக்கு, இ.பி.எஸ்., - குன்றில் இட்ட விளக்கு ஸ்டாலின் என்பதை, விரைவில் மக்கள் ஓட்டளிப்பதன் வாயிலாக விளக்குவர்!

'ஆட்சிக்காக எதையும் இழக்க தயார்; ஆனால், எதற்காகவும் ஆட்சியை இழக்கத் தயாரில்லை' என, தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க., ஆட்சியாளர்களுக்கு, வரும் பொதுத்தேர்தலில், மக்கள் சரியான பாடம் புகட்டுவர்!


***

பல நகரங்களில் காற்று மாசு பிரச்னை தலைதுாக்கும்!பொன்.கருணாநிதி,பொள்ளாச்சி, கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: பிரபல கிரிக்கெட் வீரரும், லோக்சபா எம்.பி.,யுமான, கவுதம் கம்பீர், 'இந்திய - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டியை, டில்லியை தவிர்த்து, வேறு இடத்தில் நடத்த வேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளார். வாகன புகையை கட்டுப்படுத்த, டில்லி முதல்வர் கெஜ்ரிவால், ஒற்றைப்படை எண் கொண்ட வாகனங்கள், மாதத்தில், 15 நாட்களும், இரட்டைபடை எண்கள் கொண்ட வாகனங்கள் மாதத்தில், 15 நாட்கள் மட்டுமே, ஓட்டக் கூடிய உத்தரவுகள் பிறப்பித்து பார்த்தார்; இருப்பினும், காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

காற்று மாசுபடும் பிரச்னை, டில்லியில் விசுவரூபம் எடுத்துள்ளது. 500 புள்ளிகளை தாண்டி, காற்று மாசுபட்டுள்ளதால், சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாப்பதற்காக, டில்லியில், சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து, இந்த பிரச்னையில் உரிய அக்கறை எடுத்து செயலாற்றி வருகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில், நடைபயிற்சி மேற்கொள்வதை கூட தவிர்க்கும் படி, பொதுமக்களை, டில்லி அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

கட்டடங்கள் பெருகிய அளவிற்கு, டில்லியில் மரங்கள் பெருகவில்லை. காற்று மாசால், பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறில் துவங்கி, எண்ணற்ற வியாதிகள் உருவாக கூடிய அபாயம் உள்ளது. இதற்கு முக்கிய காரணம், தொழிற்சாலை கழிவுகளும், வாகனங்கள் வெளியிடும் புகையுமே! டில்லியில், இன்று ஏற்பட்டுள்ள இந்த நிலை, நாடு முழுவதும் அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு பிரச்னை, டில்லியை அடுத்து, இந்தியாவின் பல நகரங்களுக்கும் வரக்கூடிய சூழ்நிலை உருவாகலாம்.

அனைத்து மாநில அரசுகளும், சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆலைக்கழிவுகள், வாகன புகையான, கார்பன் மோனாக்ஸைடு போன்ற விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மரங்கள் வளர்ப்பதை, மிக முக்கிய கடமையாக கருதி, மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமே, இப்பிரச்னைக்கு சிறந்த தீர்வாக அமையும்!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • karutthu - nainital,இந்தியா

  குடத்தில் இட்ட விளக்கு, இ.பி.எஸ்., -காற்று இல்லாவிட்டால் அணைந்துவிடும் குன்றில் இட்ட விளக்கு ஸ்டாலின் காற்று அதிகம் வீசினால் அணைந்துவிடும் .

 • s.rajagopalan - chennai ,இந்தியா

  'எளு......நாயர் (ரு ) என்று சொல்வார்

 • Bhaskaran - Chennai,இந்தியா

  கேட்டால் இந்த சின்னம் கோவிந்தசாமி கொடுத்தது வாங்கியது அண்ணாதுரை இருவரிடமும்தான் போய் கேட்கணும்னு விதண்டாவாதம் புரிவார்

 • nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா

  சார் நீங்க துண்டுசீட்டு எழுதி கொடுங்க , வீட்டில் பலமுறை சொல்லிப்பழகி வருகிறேன் பின்னர் தான் இந்த வார்த்தை ஏழு ஞாயிறு சொல்ல முடியும் , இது போன்ற தமிழல்லாத வார்த்தையை என்னை சொல்ல சொன்னீர்கள் என்றால் மதுரை தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தில் நடத்தி காட்டினோம் அதனை உங்களுக்கு காட்டி விடுவேன்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement