Advertisement

விரிவுரையாளர் பணிக்கு விறு விறு வசூல்!

Share

''நாயரே, சூடா சுக்கு காபி குடும்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்த குப்பண்ணா, ''அ.தி.மு.க., பாசம் இன்னும் போகாமலே இருக்கார் ஓய்...'' என, மேட்டருக்கு வந்தார்.

''யாரைச் சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''திருச்சி, எம்.பி.,யா இருக்கற திருநாவுக்கரசரை தான் சொல்றேன்... ஜெயிச்சதும் நடந்த நன்றி அறிவிப்பு கூட்டத்துலயே, 'அ.தி.மு.க.,வினரும் எனக்காக வேலை பார்த்தா'ன்னு கொளுத்தி போட்டார் ஓய்... ''இதை நிரூபிக்கற விதமா, திருச்சி விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினர் பதவிகளை, அ.தி.மு.க., மாநகர மாவட்ட பொருளாளர் மலைக்கோட்டை அய்யப்பன், மாவட்ட துணைச் செயலர் ஜாக்குலின் ஆகியோருக்கு, வாங்கி குடுத்திருக்கார் ஓய்...

''திருச்சி விமான நிலைய ஆலோசனைக் குழுவின் தலைவரா, அரசர் தான் இருக்கார்... 'அரசர் வெற்றிக்காக பாடுபட்ட காங்கிரசார், கூட்டணி கட்சியான, தி.மு.க.,வினருக்கு பதவிகள் வாங்கி தராம, பழைய பாசத்துல, அ.தி.மு.க.,வினருக்கு அள்ளி குடுத்திருக்காரே'ன்னு, அவாள்லாம் புலம்பிண்டு இருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''உள்ளாட்சித் தேர்தல்ல ஜெயிச்சு, எம்.எல்.ஏ., சீட்டை கைப்பத்த திட்டம் போடுதாரு வே...'' என, அடுத்த தகவலுக்கு சென்றார், அண்ணாச்சி.

''எந்தக் கட்சி பிரமுகரைச் சொல்றீங்க...'' எனக் கேட்டோம். ''நீலகிரி மாவட்ட, அ.தி.மு.க., செயலர் புத்திசந்திரனை தான் சொல்லுதேன்... ஆளுங்கட்சிக்குள்ள நிறைய கோஷ்டிப்பூசல் இருக்கிறதால, இங்க சுலபமா ஜெயிச்சுடலாம்னு, தி.மு.க., பிரமுகர்கள் நினைச்சிட்டு இருக்காவ வே... ''அதே நேரம், புத்திசந்திரனோ, உள்ளாட்சித் தேர்தல்ல, அதிகமான இடங்களை ஜெயிச்சு காட்டி, அடுத்து வர்ற சட்டசபை தேர்தல்ல, எம்.எல்.ஏ., சீட் வாங்கிடணும்னு இருக்காரு... இதுக்காகவே, தீபாவளி அன்னைக்கு, கட்சி நிர்வாகிகளுக்கு தடபுடல் விருந்து குடுத்தவர், விருந்து முடிஞ்சதும், நிர்வாகிகளுக்கு மொய் கவரும் குடுத்து அசத்தியிருக்காரு வே...'' என்றார் அண்ணாச்சி.

''பணி நிரந்தரம் பண்றதுக்கு வசூல் வேட்டை நடக்குது பா...'' என, கடைசி மேட்டருக்கு வந்தார், அன்வர்பாய்.

''எந்தத் துறையில வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''அரசுக் கல்லுாரிகள்ல வேலை பார்க்கிற கவுரவ விரிவுரையாளர்கள்ல, 1,146 பேரை, விதிகளை மீறி, பணி நிரந்தரம் செய்றதுக்கான வேலைகள் நடந்துட்டு இருக்கு... இதுக்காக, தலைக்கு, 30 லட்சம் ரூபாய் வசூலிக்கிறாங்க பா... ''செங்கல்பட்டு, ஊட்டி அரசுக் கல்லுாரிகள்ல வேலை பார்க்கிற, சில கவுரவ விரிவுரையாளர்கள் தான், இதுக்கு புரோக்கர்கள் மாதிரி செயல்பட்டு, பணத்தை வசூல் பண்ணி, மேலிடம் வரைக்கும் சேர்க்கிறாங்க... இதுக்காக, போன வாரம், சேலத்துல ஒரு தனியார் மண்டபத்துல, கவுரவ விரிவுரையாளர்கள் ஆலோசனைக் கூட்டமே நடந்திருக்கு பா...

''சீக்கிரமே இதுக்கான அரசாணை வரப்போகுதுன்னு சொல்றாங்க... இது பத்தி, உயர்கல்வி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டா, மழுப்பலா பதில் சொல்லி, போனை வச்சிடுறாங்க பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.

பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • A R J U N - sennai ,இந்தியா

    சம்பாத்தியம் என்றால் கல்வியிலுமா.கவுரவ லெக்ச்சரர்களா,புரோக்கர்களா..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement