dinamalar telegram
Advertisement

போட்டிக்குத் தயாராவோம்!

Share

பதினாறு நாடுகள் மேற்கொண்ட, 'பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம்' எனும் ஆர்.சி.இ.பி. ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து போடாததற்கான நியாயமான காரணங்களை நேற்று பார்த்தோம்.'நாம் கையெழுத்திடாமல் விலகியது சரியல்ல, நாம் நல்லதொரு வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டோம்' என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

இதன் பின்னேயுள்ள நியாயத்தைப் புரிந்துகொள்வது, இந்தியாவின் வளர்ச்சிக்கு அவசியமானதாகும்.இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தால், வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக சீனாவில் இருந்து ஏராளமான பொருட்கள் இந்திய சந்தைக்கு வந்து, மூழ்கடித்து இருக்கும் என்பதுதான் முதல் கரிசனம். கூடவே அவை விலை மலிவாக இருக்கும். அந்தப் போட்டியை நம்முடைய உள்ளூர் உற்பத்தியாளர்களாலும், வணிகர்களாலும் எதிர்கொண்டிருக்க முடியாது.

இந்த வாதத்துக்கு ஒரு மறுபக்கம் இருக்கிறது. ஒரு உதாரணத்தோடு பார்ப்போம். கொசுவைக் கொல்லும் பேட், தமிழகத்தில், 150 ரூபாய்க்கு கிடைக்கிறது. இது பெரும்பாலும், சீனத் தயாரிப்புதான்.அதாவது அதன் நிகர உற்பத்தி விலை, 50 ரூபாய்க்குள் தான் இருக்கும். அதை அங்கிருந்து இங்கே கொண்டுவருவதற்கான செலவு, இரண்டு மூன்று நிலையில் ஸ்டாகிஸ்டுகளின் கமிஷன்கள், கடைசியாக விற்பனை செய்யும் கடைக்காரரின் லாபம் என்றெல்லாம் சேர்த்துதான், வாடிக்கையாளர்களுக்கு, 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதே விலைக்கு, இதே கொசு பேட்டை ஏன் நம்மால் தயாரிக்க முடியவில்லை? வெளிநாடு ஒன்றினால் தயாரிக்க முடியும்போது, நாமும் அதைச் செய்வதற்கான தொழிற்திறனையும் வாய்ப்புகளையும் பெற்றிருக்க வேண்டுமல்லவா? அதுதானே போட்டிபோடும் திறன் என்பது.போட்டித் திறனே வேண்டாம் என்று ஒதுங்கிக்கொண்டு, எனக்கான சந்தை இது, நான் வைப்பதுதான் சட்டம் என்று சொல்வது என்ன நியாயம்? இது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது போன்றதுதானே?திஇன்னொரு அம்சத்தை யோசித்துப் பாருங்கள். வெளிநாட்டுப் பொருட்கள் இந்தியச் சந்தையை மொய்க்கும்போது, அதன் விலை மலிவாக கிடைக்கும். அதனால், பயனடையப் போவது நமது ஏழை எளியவர்கள்தானே? கூடுதல் விலை கொடுக்க வேண்டும் என்பது தலையெழுத்தா என்ன?உண்மையில், மக்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பை இங்குள்ள தொழில்துறை அமைப்புகளும் நிறுவனங்களின் லாபியும் தான் தடுக்கின்றன என்ற குற்றச்சாட்டில் நியாயம் இல்லாமல் இல்லை.இதன் பின்னே இருக்கும் வணிக நோக்கைப் பாருங்கள். பல பெரிய நிறுவனங்கள், தங்களுக்கான பொருட்களை, சீனாவிடம் இருந்துதான் இறக்குமதி செய்கின்றன.தொலைத்தொடர்புத் துறையில் நீங்கள் பயன்படுத்தும் இணையத்துக்கான,
'ரவுட்டர்கள்' சீன தயாரிப்பு. தொலைக்காட்சிப் பெட்டிகளின் உள்ளே இருக்கும், 'பிக்சர் டியூபுகள்' சீன தயாரிப்பு. பல்வேறு கட்டுமான நிறுவனங்களில் பயன்படும் பெரியபெரிய கருவிகள் அனைத்தும் சீனத் தயாரிப்பு.

அவ்வளவு ஏன்? தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, 'விலையில்லா மிக்ஸி, கிரைண்டர்' அறிவித்தாரே, ஞாபகம் இருக்கிறதா? அரசு வெளியிட்ட ஒப்பந்தப் புள்ளியில் மூன்று நிறுவனங்கள் தேர்வாயின. அவை, மூன்றும், கிரைண்டர் மோட்டார்களை சீனாவில் இருந்து தருவித்தன. எனக்குக் கிடைத்த தகவல் சரியாக இருக்குமானால், ஒரே சீன நிறுவனத்திடம் இருந்துதான், இம்மூன்று நிறுவனங்களும் தங்களுக்கான மோட்டார்களை ஆர்டர் செய்து பெற்றன.ஏன் இங்கேயே இந்த மோட்டார்களை உற்பத்தி செய்ய முடியவில்லை? காரணம், அரசாங்கம் கோரிய விலையில், இவர்களால் மோட்டார்களை உற்பத்தி செய்து, கிரைண்டர்களில் பொருத்த முடியவில்லை.

பால் பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள். ஆஸ்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் பெரும் நிலப்பரப்பு இருக்கிறது.ஏராளமான மாடுகளை வளர்க்க முடியும். அங்கே உற்பத்தியாகும் அபரிமிதமான பால் பொருட்களை, அவர்கள் இந்திய சந்தையில் கொண்டு வந்து இறக்க தயாராக இருக்கின்றனர்; அதுவும் விலை மலிவாக.நாம் நம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காக, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட மறுத்துவிட்டோம். இதனால் விவசாயிகள் தற்போது பலன் அடைந்திருக்கலாம். ஆனால், குறைந்த விலையில் கிடைக்கும் ஒன்றை, எதற்கு கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டும்?இதே தர்க்கம் தான் தொழில் துறையினருக்கும்.

சோலார் தகடுகளை எடுத்துக்கொள்ளுங்கள். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தகடுகளின் விலை அதிகம். சீன தயாரிப்புகளின் விலையோ மலிவு. விளைவு, அங்கே இருந்து தகடுகளை வாங்கி வந்து, இங்குள்ள நிறுவனங்கள் கொள்ளை லாபத்தில், நம் மக்களுக்கு விற்பனை செய்கின்றன.இதன் பலன் யாருக்கு? நடுவில் கொள்ளை லாபம் பார்க்கும் தொழில் நிறுவனங்களுக்குத்தானே? அதனால் தான், இத்தகைய தொழில் துறை அமைப்புகள், ஆர்.சி.இ.பி.யில் நாம் கையெழுத்திட்டுவிடக் கூடாது என்று கோரிக்கை வைத்தன. ஏழை எளியவர்கள் பாதிக்கப்படுவர், வேலைவாய்ப்புகள் பறிபோய்விடும் என்ற தர்க்கத்தை முன்வைத்து, இவர்கள் தங்கள் கொள்ளை லாபத் தொழிலைக் காப்பாற்றிக் கொண்டனர் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.திஇத்தகைய பின்னணியில் தான், நமக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பை நழுவவிட்டுவிட்டோம் என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது.

அதாவது, இங்கே பல்வேறு நிறுவனங்கள் வந்து குவியட்டும். நாம் எந்தவிதமான 'பாதுகாப்பையும்' வழங்கவேண்டாம். அல்லது, விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் போன்ற ஒருசிலருக்கு மட்டும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, பிற துறைகளில் அனுமதித்திருக்கலாம்.விலை மலிவான பொருட்கள் வந்து குவிந்திருக்கும். அவற்றோடு போட்டி போட உள்நாட்டுத் தயாரிப்பாளர்களும் பல்வேறு புதிய உத்திகளைக் கண்டுபிடித்திருப்பர்.சந்தை புதிய திசையில் பயணம் செய்திருக்கும். புதிய வாசல்கள் திறந்துகொண்டிருக்கலாம். தொழில்நுட்பங்கள் மேம்பாட்டிருக்கலாம்; அதற்கான வாய்ப்புகள் தற்போது மறுக்கப்பட்டிருக்கின்றன.கொஞ்சம், 1991ஐ திரும்பிப் பாருங்கள். அதற்கு முன், லைசென்ஸ், கோட்டா ராஜ் தான் கோலோச்சியது. எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தையே சார்ந்திருந்த நிலை இருந்தது. அரசாங்கத்திடம் நல்ல தொடர்பும், அணுக்கமும் இருந்த நிறுவனங்கள் தழைத்தோங்கின. ஆனால், அவை பெரிய அளவில் வேலைவாய்ப்புகளையோ, தொழில் புதுமைகளையோ, வளர்ச்சியையோ ஏற்படுத்தவே இல்லை. அரசாங்கத்தின் செல்லப் பிள்ளைகளாக மட்டுமே இருந்தன.கடந்த, 1991ல், புதிய பொருளாதாரக் கொள்கை பிறந்தது. எ
ன்ன ஆயிற்று? கொஞ்சம் மும்பை பங்குச் சந்தையில் இடம்பெற்றிருந்த 30 நிறுவனங்களின் பட்டியிலை இப்போது எடுத்துப் பாருங்கள். அதில் பல நிறுவனங்கள் இன்று இல்லவே இல்லை. காணாமல் போய்விட்டன. போட்டி மிகுந்த சந்தையில் முட்டி மோதி முன்னுக்கு வந்த பல்வேறு துணிச்சலான நிறுவனங்களே இன்றைய சென்செக்சில் இடம்பெற்றுள்ளன. இவைதான் இன்றைய இந்தியாவின் முகமாக மாறியுள்ளன.ஆக, பாடம் ஒன்றே ஒன்றுதான்... நாம் போட்டிக்குத் தயாராக இருக்க வேண்டும். அதற்கு என்னென்ன வசதிகள் செய்துதரப்பட வேண்டும் என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டியது. உதாரணமாக, போதுமான விசாலமான நிலம் இல்லை. தொழிலாளர் சட்டங்கள் இணக்கமாக இல்லை. ஏற்றுமதிக்கான கட்டணங்கள் குறைக்கப்படவில்லை. வரிச் சலுகைகள் போதுமான அளவு இல்லை. தொழில்நுட்பங்கள் இல்லை என்றெல்லாம் பல கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

இவையெல்லாம் தான் பிற நாடுகள் மேம்பாடு அடைய காரணம் என்றால், அவற்றை நாமும் பெற்றே ஆகவேண்டும். நமது அரசுகள் இந்தத் திசையில் யோசித்து சீர்திருத்தங்களை விரைந்து மேற்கொண்டாக வேண்டும்.இனிமேலும், தொடர்ச்சியாக நம்முடைய கதவுகளைச் சாத்திக்கொண்டு, உள்ளுக்குள்ளே உட்கார்ந்துகொண்டிருக்க முடியாது. இப்படியே இருந்தோமானால், உலகம் நம்மைத் தனிமைப்படுத்திவிடும்.ஆர்.சி.இ.பி. ஒப்பந்தத்தில் நாம் தற்போது கையெழுத்திட மறுத்திருப்பது ஒரு தாற்காலிக நடவடிக்கையே. உண்மையில் நாம் நம்மை போட்டிக்குத் தகுதிப்படுத்திக்கொள்ள முயற்சி மேற்கொள்வதே, எதிர்கால இந்தியாவுக்கு நல்லது.pattamvenkatesh@gmail.com98410 53881- ஆர்.வெங்கடேஷ்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement