Advertisement

போதும் அவமரியாதை

Share

எத்தனையோ விஷயங்களை தமிழக மக்கள் முன் அலச வேண்டிய நேரத்தில், திருவள்ளுவர் பற்றிய சர்ச்சை அனாவசியமாக எழுந்திருக்கிறது.

தமிழக, பா.ஜ., டுவிட்டரில் செய்த செயலும், யாரோ ஒருவர் தஞ்சை பிள்ளையார் பட்டியில் அவரது சிலையை சேதப்படுத்தியதும், தமிழ் என்றால் பெருமைமிக்கது என்று கருதும் பலரது மனதையும் சங்கடப்படுத்தும்.திருவள்ளுவருக்கு காவியுடை, நெற்றியில் திருநீறு ஆகியவை, இப்போது அவரை ஒரு மதத்தின் சட்டத்தில் நுழைக்காது. ஏனெனில், திருவள்ளுவர் எந்த உருவில் காணப்பட்டார்; தொல்காப்பியர் எப்படி இருந்தார்; அவருக்கு அடுத்ததாக தமிழ் வளர்த்த நக்கீரன், சினிமா காட்சிகளில் வந்த நக்கீரன் போல காட்சி அளித்தாரா என்பதை விளக்க, எந்த தடயமும் கிடையாது.திருவள்ளுவர் குமரி மாவட்டத்தினரா அல்லது சென்னை மயிலாப்பூர் பகுதியில் இருந்தவரா என்பதும், இன்னமும் விவாதத்திற்கு உரியதே. 'எழுகடலைப் புகட்டும் தன்மை வாய்ந்த ஒண்ணரை அடி வெண்பா குறள்' என்பதும், அதன் தாக்கம், சிலம்பு முதல் கம்பரது ராமாயணம் வரை, அனைத்து இலக்கியங்களிலும் இருந்தது என்பதையும் விளக்க வேண்டியதில்லை.

திருவள்ளுவருக்கு ஒரு உருவம் தேவை என்ற கருத்தில் உருவானதே இன்று நாம் காணும் திருவள்ளுவர் சிலை. பா.ஜ.,வின் தருண் விஜய் என்பவர் கூட, தமிழகத்தில் இருந்து திருக்குறளை வட மாநிலங்களுக்கு துாக்கிச் சென்றதும் தேவையில்லாத விஷயம்.அதிக அளவில் மொழிபெயர்க்கப்பட்டது குறளாகும். தற்போது, தாய்லாந்து மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை, பிரதமர் மோடி, அந்நாட்டின் பாங்காக்கில் உள்ள இந்திய சமுதாயம் பங்கேற்ற கூட்டத்தில் வெளியிட்டது, அங்கு அதிகமாக தமிழர் இருப்பதையும், இருநாடுகளின் பாரம்பரிய தமிழக வர்த்தக தொடர்பையும் காட்டுவதை தவிர, புதிதாக ஒன்றும் இல்லை.

அதே மேடையில், அவர் குருநானக்கையும் புகழ்ந்திருக்கிறார். கீதை அல்லது ராமாயண கருத்துகளை சொல்லும் போது, அது மத வட்டத்திற்குள் வரும் என்பதால், பொதுவான அறக்கருத்தை தாங்கிய திருக்குறள், அரசியல்வாதிகளுக்கு கைகொடுக்கிறது; இதில் தவறேதும் இல்லை. திருக்குறள் என்பது அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பகுதிகளை கொண்டதுடன், அதுவும், 1,330 குறட்பாவுடன் சுருக்கமான பொக்கிஷமாக உள்ளது.கடவுள் வாழ்த்து அதில் உள்ளது. தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல் என்ற சுற்றத்தார் மற்றும் தான் என்ற ஐந்தையும் காப்பது, இல்வாழ்க்கை என்கிறார். அப்படியெனில் இறந்த மூதாதையருக்கு செய்யும் கர்மாக்களை அவர் ஏற்றதின் மூலம், அவர் இந்திய கலாசாரத்தின் மூலத்தை அறிந்தவர் என்பதை பிரதிபலிக்கிறார்.

மற்றவர்களுக்கு உணவு அளிப்பது அவரது மற்றொரு கோட்பாடு. கற்பு என்பது, திண்மை கொண்டது என்பதும் அவர் வாதம்.இவை காலத்தை தாண்டி நிற்பவர் அவர் என்பதுடன், தாடி வளர்ப்பது அல்லது மழுமழுப்பாக முகச்சவரம் ஆகிய இரண்டும் இந்த உடலுக்கு தேவையற்றது. ஆனால் அவரைக் காட்டும் சிலைக்கு, தாடி இருக்கிறது. ஆகவே காலம் காலமாக வாழும் தத்துவ கோட்பாட்டால், மனிதன் நாகரிகம் வளர வழிகாட்டிய அவரை, அரசியல் வட்டத்திற்குள், இந்த, 70 ஆண்டுகளில் அடக்கியது நமது செயல். அவர் வலியுறுத்திய கருத்துகளை பிரதிபலிக்காத நிலையையும், தோற்றுவித்தது என்பதே உண்மை.ஏனெனில், தனக்கு நஞ்சை அளித்த போதும், அதை விரும்பி மனம் கோணாமல் நஞ்சை உண்பவர், 'நயத்தகு நாகரிகம் கொண்டவர்' என்ற கருத்தை, இன்று எவரும் ஏற்கமாட்டார்கள். அதனால் நாகரிகம் அற்ற கயவர்களை விற்று விடலாம் என்றார். அந்த அளவுக்கு மனித மாண்பை உயர்த்திய அவர், தனது முப்பால் மூலம், வாழ்க்கை நெறியை காட்டியதால், அவரைப் பொறுத்தளவில், எல்லாப் பிறப்பும் ஒன்றே. அதே நேரத்தில் அதே குறளில், 'சிறப்பொக்கும் செய்தொழில் வேற்றுமையால்...' என்பதை, இன்று விவாதித்தால் தெளிவு வரும்.அரசியலில் அதிக சொந்தபந்த ஆதிக்கம், வாரிசுகள் வாழ பணம் சேர்ப்போர், தமிழை விட ஆங்கிலத்தின் ஆதிக்கம் அதிகம் கொண்டோர், அதிக கல்வியறிவு பெறாமல் அல்லது அவர் கூறிய, 'உலகத்தோடு இயைந்த வாழ்க்கை முறை' இல்லாத பலரும் இன்று, திருவள்ளுவரை ஆதரித்து பேசுவது பரிதாபம்.சில பள்ளிகள் மட்டும் இன்றும், முதல், 39 அதிகாரங்களில் உள்ள, ஒழுக்கம், கல்வி போன்ற அதிகாரங்களில் உள்ள ஒருசில குறளை கற்றுத் தருகின்றன. அப்படியிருக்க, அவர் சிலைக்கு அவமரியாதை அல்லது காவியுடை ஆகிய இரண்டும், அர்த்தமற்றவை. இன்று அவரை வைத்து அரசியல் பண்ணும் முயற்சி, தமிழின் மாண்புக்கு கிடைத்த அவமரியாதை என்றால் மிகையில்லை.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • A.Gomathinayagam - chennai,இந்தியா

    அனைத்து பிரிவு மக்களுக்காக உழைத்த தன்னலம் ,வேற்றுமை பாராத தலைவர்களை மிகவும் குறுகிய சாதி , மற்றும் மத வட்டத்தில் இணைக்கும் போக்கு தமிழகத்தில் தான் இருக்கிறது .இது ,இன்று கலை, அறிவியல் என எல்லா துறையிலும் தொடர்வது வேதனைக்கு உரியது .தங்கள் தலையங்கம் இன்று தேவையான ஒன்று

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement