Advertisement

இது உங்கள் இடம்

Share

அரசுக்கு நன்றி கடன் பட்டவராக இருப்போம்!
இ.ச.வெங்கடேஷ்குமார், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: கடந்த மாதம் நடைபெற்ற, டி.ஆர்.பி., முதுநிலை ஆசிரியர் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மிக விரைவாக வெளியிட்டமைக்கு, அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால், தேர்வில் வெற்றி பெற்றவர் பட்டியல் வெளியிடுவதற்கு முன், அரசு இதை எண்ணிப் பார்க்க வேண்டும். என்னை போன்ற, 45 வயதிற்கும் மேற்பட்ட எத்தனையோ முதுநிலை
பட்டதாரிகள் மன, உடல் நலமின்மை, குமுறும் குடும்ப சூழல், அரசு வேலைவாய்ப்பு பதிவு மூப்பின்மை, போதுமான ஊதியமின்மை போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு இடையில் சிக்கி தவிக்கிறோம். இதற்கிடையே, சத்திய மங்கலம் போன்ற தொலை துாரப்பகுதிகளுக்கு சென்று
கஷ்டப்பட்டு, டி.ஆர்.பி., தேர்வை முடித்தோம்.

எனவே, எங்களை போன்ற, மூத்தோர்களுக்கு வாழ்க்கையில் ஒளிவிளக்கை ஏற்றிடும் வண்ணம், 'கட் ஆப்' மதிப்பெண்ணை தளர்த்தி, அரசுப்பணி வாய்ப்பை ஏற்படுத்தி தந்தால், ஆளும் அரசுக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக, எப்போதும் இருப்போம்!

ரயில்வே துறையை தனியார் வசமாக்காதீர்!
பா.பாலசுப்ரமணியன், புதுச்சேரியிலிருந்து எழுதுகிறார்: சாலை போக்குவரத்தில், ஒரு சில வழித் தடங்களை, தனியாருக்கு தாரை வார்த்ததால், மக்கள் படும் துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல! புளி மூட்டை போல, அளவுக்கு அதிகமாக பயணியரை ஏற்றுவது, ஒதுக்கப்பட்ட நேரம், பாதை இவற்றை தங்கள் வசதிற்கேற்ப மாற்றிக் கொள்வது என தீர்மானிக்கின்றனர்.
தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலங்களில், டிக்கெட் விலையை இஷ்டம் போல் உயர்த்தி கொள்கின்றனர்.


தனியார் பஸ் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு விலைவாசிப் புள்ளிகளுக்கு ஏற்ற சம்பளம், பணி பாதுகாப்பு, மருத்துவ வசதி, ஓய்வூதியம் போன்ற எதுவுமே கிடையாது. அதனால் தான், தனியாரால் லாபம் ஈட்ட முடிகிறது; அது, வியாபார முறைப்படியான லாபம் அல்ல; ஏழைகளின் உழைப்பை சுரண்டி அடிக்கும் பகல் கொள்ளை. அரசு துறைகளை தனியார் மயமாக்கினால்,
அது, பொதுமக்களின் வாங்கும் சக்தியை வெகுவாக குறைத்து, வியாபார மந்த நிலைக்கு வழி வகுக்கும். நாட்டில் எந்த தொழிலை எடுத்துக் கொண்டாலும், அது, தனியார் துறையாக இருந்தால், லாபத்திலும், அரசு துறையாக இருந்தால், நஷ்டத்திலும் இயங்குகின்றன.

அரசு துறையில், அந்த தொழிலின் நிர்வாகத்தில் அரசியல்வாதிகளின் ஆதிக்கமும், ஊழலும் தழைத்தோங்கும். ஊழலுக்கு துணைபோகாத அதிகாரிகள் பழி வாங்கப்படுகின்றனர் அல்லது
பந்தாடப்படுகின்றனர். அரசியல்வாதிகளால் சீரழிக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களான, எச்.எம்.டி., - பி.எஸ்.என்.எல்., - ஏர் இந்தியா, இந்துஸ்தான் போட்டோ பிளம்ஸ் என, பட்டியலில்
தற்போது, ரயில்வே துறையும் சேர்ந்துள்ளது. ஆனால், மற்றவற்றை போல, ரயில்வே துறையை கருதக் கூடாது. பாரத மாதாவின் நரம்பு மண்டலமாக திகழும், இந்த துறை, ஒவ்வொரு குடிமகனோடும், மிக நெருங்கிய தொடர்பு கொண்ட, மிக அத்தியாவசிய போக்குவரத்து சாதனம்.

இதை தனியார் வசமாக்கினால், இஷ்டத்திற்கு கட்டண உயர்வு இருக்கும்; பண்டிகை காலங்களில் தனியார் வைத்தது தான் சட்டம். தயவு செய்து ரயில்வே துறையை, தனியார்
வசமாக்காதீர்!

தமிழக வரலாற்றில் ரஜினியும் முதல்வராவார்!
கு.அருணாசலம், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 1967க்கு பின், தமிழகத்தில் காங்கிரசை வீழ்த்தி, இன்று வரை, திராவிட கட்சிகளின் ஆட்சி தான் நடக்கிறது. அன்று, முதல்வராக இருந்த, அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா என அனைவருமே, திரையுலகில் காலடி வைத்தவர்கள் தான். தமிழக அரசியலில், சினிமா நட்சத்திரங்களுக்கு, எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. அண்ணாதுரை ஒருமுறை, 'எம்.ஜி.ஆர்., முகத்தை காட்டினால் போதும்; ஓட்டுகள் தானாக வந்து விழும்' என்றார்.

சினிமா மோகத்தாலும், முதல்வர் பதவி ஆசையாலும், அரசியலில் குதித்து காணாமல் போனவர்கள் ஏராளம். அதில், எதிர்க் கட்சி தலைவராக உயர்ந்து சாதனை படைத்தவர், நடிகர் விஜயகாந்த்; தற்போது, உடல் நலக்குறைவால், அவரும், அவரின் கட்சியும் சோர்ந்து போய் விட்டது.
நடிகர்கள் சரத்குமார், சீமான், கமல்ஹாசன் என வரிசையாக பலர், அரசியலுக்குள் நுழைந்துள்ளனர். அவர்களால், அவ்வளவு எளிதாக வெற்றி பெற முடியவில்லை. தமிழகத்தில், காங்கிரசை வீழ்த்தியதற்கு, அண்ணாதுரை, கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆர்., என்ற மும்மூர்த்திகள் தான் காரணம். இப்போது, திரையுலகை சாராத, இ.பி.எஸ்., முதல்வராக இருக்கிறார்.

இவர்கள் மத்தியில், நடிகர் ரஜினிகாந்த், 23 ஆண்டுகளாக அரசியலில் நுழையாவிட்டாலும், 'வாய்ஸ்' வாயிலாக, பலரை ஆட்சியில் அமர்த்தியுள்ளார். ரஜினிக்கு, எப்போதும் பா.ஜ., மீதும், பிரதமர் மோடி மீதும், நட்பும், பாசமும் உண்டு. ரஜினியை, எப்படியாவது தங்கள் வலையில் சிக்க வைக்க, தொடர்ந்து துாண்டில் போடுகிறது. பா.ஜ., இதற்காக தான், ரஜினிக்கு, 'இந்திய சினிமா துறையின் சாதனையாளர் விருது' மத்திய அரசு அறிவித்துள்ளது. பா.ஜ., துாண்டிலில், ரஜினி சிக்கவே கூடாது. அப்படி சிக்கி, சமீபத்தில் காணாமல் போனவர் தான், நடிகர்
விஜயகாந்த். அவரது அரசியல் வாழ்க்கையை, ரஜினி பாடமாக எடுத்து, 'என் வழி, தனி வழி' என, துணிச்சலாக களம் காண வேண்டும்.

எம்.ஜி.ஆரை போல, உடனடியாக வெற்றி அடையாவிட்டாலும், 'ஊழல் கட்சிகள் மற்றும் ஜாதிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது' என்ற முடிவுடன், கட்சியை துவக்கி, பயணித்தால், தமிழக வரலாற்றில், ரஜினியும் முதல்வரே!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • g.s,rajan - chennai ,இந்தியா

    Private buses are owned by benamis..

  • Siva - Aruvankadu,இந்தியா

    வி. காந்த் உடல் நலம் குன்றி காணாமல் போனார்... பாஜக வால் அல்ல...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement