Advertisement

'டவுட்' தனபாலு

துணை முதல்வர் பன்னீர்செல்வம்: ஆண்டிப்பட்டி தொகுதியில், ஜெ., வெற்றி பெற்ற போது, அந்தத் தொகுதியை சொர்க்க பூமியாக மாற்றிக் காட்டுவோம் என்றார். அதுபோல, நாங்களும், நாங்குநேரி தொகுதியை, சொர்க்கபுரியாக மாற்றுவோம். எங்கள் சாதனை திட்டங்கள் மூலம், இந்த தொகுதி மக்களுக்கு நன்றியை தெரிவிப்போம்.

'டவுட்' தனபாலு: உதாரணம் சரியில்லையே... ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா வெற்றி பெற்றது, 2002ல்; அவர் மறைந்தது, 2016ல். இடைப்பட்ட, 14 ஆண்டுகளில், அந்த தொகுதி, அப்படியேத் தான் இருந்தது; இப்போதும் இருக்கிறது. அது போலவே, நாங்குநேரியையும், அப்படியே வைத்திருப்போம் என்பதை மறைமுகமாக கூறுகிறீர்களோ என்பதே என், 'டவுட்!'

தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேரு: தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பற்றி, ஆளும் கட்சியினரும், பா.ஜ.,வினரும் வாய்க்கு வந்தபடி பேசுகின்றனர். 'ஸ்டாலின் உளறிக் கொட்டுகிறார்; தப்பு தப்பாக பேசுகிறார்; தவறான புள்ளிவிபரங்களை சொல்கிறார்' என, கூறுகின்றனர். அந்த கட்சித் தலைவர்கள், வாய் உளறி, தவறாக பேசியதில்லையா?

'டவுட்' தனபாலு: ஸ்டாலின் தப்பு தப்பாக பேசுகிறார் என்ற தகவல், சமூக வலைதளங்கள் என்ற குறுகிய வட்டத்திற்குள் தான் இருந்தது. அதை மேடை போட்டு, பகிரங்கப்படுத்தி விட்டீர்களே... எத்தனை நாட்களாக இப்படி, ஸ்டாலினை, 'வார' வேண்டும் என எண்ணியிருந்தீர்களோ... உங்களைப் போன்ற, 'மாஜி'க்களை அவர் புறக்கணிப்பதால் எழுந்த கோபமோ என்பதே என், 'டவுட்!'

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி: புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாத சர்வாதிகாரி. கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளைப் பற்றி கவலைப்படாமல், என் அரசை குறை கூறுவதையே தொழிலாகக் கொண்டுள்ளார். 'சமூக வலைதளங்களை, அரசு பணிக்கு பயன்படுத்தக் கூடாது' என்ற விதி உள்ளது. ஆனால், அதில் தான் என்னைப் பற்றி குறை கூறி வருகிறார்.

'டவுட்' தனபாலு: நீங்களும் தான் அவரை, பேய் என்றும் விளம்பரப் பிரியை என்றும், வாய்க்கு வந்தபடி எல்லாம் சொல்லிப் பார்த்துட்டீங்க. உங்க அகராதியில் வார்த்தை பற்றாக்குறை ஏற்பட்டு, சர்வாதிகாரி என, இப்போது கூறியுள்ளீர்கள். சமூக வலைதளங்களில் உங்களை அவர் குறை கூறினால், அவர் கூறியது தவறு என, அதே ஊடகத்தில் நீங்கள் பதில் சொல்ல வேண்டியது தானே... குறைகள் இருப்பதால் தானே, அவர் கூறுகிறார்... இந்த, 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • S.V.SRINIVASAN - Chennai,இந்தியா

    துணை முதல்வர் பன்னீர் செல்வம் கூறிய நாங்குநேரி பற்றிய விஷயத்திற்கு டவுட் தனபாலுவின் சந்தேகம் நூற்றுக்கு நூறு உண்மை. மைக்கும் மேடையும் கிடைத்து விட்டால் அரசியல் வாதிகள் என்ன பேசுகிறோம் என்பதையே மறந்து விடுகிறார்கள். ஆண்டி பட்டியில் ஜெயலலிதா வென்று 14 ஆண்டுகளில் என்ன நலத்திட்ட கொண்டு வந்தார் என்பதை பன்னீர் பட்டியலிடுவாரா. ஜெயலலிதா ஆண்டிபட்டியை சொர்க பூமியை மாற்றுவோம் என்று சொன்னதுடன் சரி.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement