Advertisement

மழையை மகிழ்ச்சியாக எதிர்கொள்வோம்

கடந்த பல மாதங்களாகத் தமிழகமெங்கும் குடிநீருக்கு தட்டுப்பாடு இருந்தது. வான் மழை எப்போது பொழியும் எனக் காத்திருந்தோம். இப்போது பருவமழை தொடங்கி விட்டது. கூடவே அது சில நோய்களை கொண்டு வந்திருக்கிறது. அந்த மழைக்கால நோய்களை நாம் அச்சமின்றி எதிர் கொள்ள வேண்டுமானால் சில முன்னெச்சரிக்கை களைக் கையாள வேண்டும்.மழைக்கால கிருமிகள் வளர ஈரப்பதம் உள்ளதாலும் மக்கள் மழையில் நனையும் போது அவை பரவுவதற்கு உதவுவதாலும் நோய்கள் பரவலாகின்றன. முக்கியமாக குழந்தைகள், ஊட்டச்சத்து குறைந்தவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், முதியவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். வைரஸ்காய்ச்சல் மழைக் காலத்தில் பரவும் நோய்களில் முதன்மையானது.புளு காய்ச்சல்இது வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. இந்தக் கிருமிகள் நோயாளி தும்மும் போது, இருமும் போது, மூக்கைச் சிந்தும் போது சளியோடு வெளியேறி, அடுத்தவர்களுக்கு பரவும்.கடும் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, கை, கால் வலி,தும்மல், மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, சளி, இருமல், தொண்டைவலி போன்றவை இதன் அறிகுறிகள். இந்தக் காய்ச்சலுக்கு எந்த ஒரு சிறப்புச் சிகிச்சையும் இல்லை. இதன் அறிகுறிகளைக் குறைப்பதற்கே சிகிச்சை அளிக்கப்படுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சரியாக இருந்தால், ஒருவாரத்தில் இது தானாக சரியாகும்.புளு காய்ச்சல் வகையைச் சேர்ந்தது தான் பன்றிக்காய்ச்சலும். மேலே சொன்ன அறிகுறிகளுடன் மூச்சு விடுவதில் சிரமம், சளியில் ரத்தம், வாந்தி, வயிற்றுப் போக்கு, நெஞ்சுவலி, மயக்கம் போன்றவை இருந்தால் இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறவேண்டும்.நியூ மோக்காக்கஸ் பாக்டீரியாக்கள் அல்லது சில வைரஸ்கள் நுரையீரலைப் பாதிப்பதால் வரக்கூடிய நோய் இது. பெரும்பாலும் குழந்தைகளையும் முதியவர்களையும் தான் இது அதிகம் பாதிக்கும். இந்த நோயுள்ளவர்களுக்கு கடும் காய்ச்சல், இருமல், சளி, வேகமாக மூச்சுவிடுதல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தோன்றும். இருமும் போது நெஞ்சு வலிக்கும். இந்த நோயைக் கவனிக்கத் தவறினால், இந்தக் கிருமிகள் நுரையீரலையும் கடந்து, ரத்தத்தில் கலந்து, உடல் முழுவதும் பரவக்கூடிய ஆபத்து உள்ளது. நிமோனியா கடுமையாக தாக்கினால், நுண்ணுயிர்க் கொல்லிகள் மற்றும் குளுக்கோஸ் சலைனை ரத்தக் குழாயில் செலுத்தியும், மூக்கு வழியாக ஆக்ஸிஜனைச் செலுத்தியும் சிகிச்சை தரப்படும்.டெங்கு மழைக்காலத்தில் தெருவில் தண்ணீர் தேங்குவதால் கொசுக்களின் ஆதிக்கம் அதிகரிக்கிறது.அப்போது டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. விட்டு விட்டு குளிர் காய்ச்சல் வந்தால் அது மலேரியாவாக இருக்கலாம். மூட்டுவலி அதிகமாக இருந்தால் அது சிக்குன்குனியா. கடுமையான உடல் வலியுடன் கண்ணுக்குப் பின் வலி இருந்தால், வாந்தியும் வயிற்று வலியும், உடலில் ரத்தக்கசிவும் காணப்பட்டால் அது டெங்கு காய்ச்சல். நிலவேம்புக் குடிநீர் மட்டுமே டெங்குவுக்குத் தீர்வு இல்லை. அது ஒரு தற்காப்பு மட்டுமே. ஆகவே, உடனடியாக மருத்துவரிடம் சென்றுவிட வேண்டும்.டைபாய்டு இதுவும் ஒரு பாக்டீரியா நோய் தான்.டைபாய்டு கிருமிகளும் மாசடைந்த குடிநீர் மற்றும் உணவு மூலம் மற்றவர்களுக்கு பரவும். முதலில் காய்ச்சல், தலைவலி, உடல்வலியுடன் நோய் தொடங்கும். ஒவ்வொரு நாளும் காய்ச்சல் அதிகரிக்கும். இரவில் காய்ச்சல் கூடும். பசி குறையும். குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, சோர்வு என பல தொல்லைகள் துணைக்கு வரும். இதைக் குணப்படுத்த நவீன மருந்துகள் நிறைய உள்ளன.நோயின் ஆரம்பத்திலேயே சிகிச்சை பெற்றுக் கொண்டால் விரைவில் குணமாகும். வாந்தி, வயிற்றுப்போக்கு பாக்டீரியா அல்லது ரோட்டா வைரஸ் கிருமிகள் மாசடைந்த குடிநீர் மற்றும் உணவு மூலம் நமக்குப் பரவுவதால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படுகின்றன.ஈக்களும் எறும்புகளும் இந்தக் கிருமிகளை நமக்குப் பரப்புகின்றன. நோயாளியின் உடல் இழந்த தண்ணீரின் அளவைச் சரிசெய்வதே இதற்கான சிகிச்சையின் முக்கிய நோக்கம். எனவே, பாதிக்கப்பட்ட நபருக்குச் சுத்தமான குடிநீரை அடிக்கடி குடிக்கத் தர வேண்டும். உப்பும் சர்க்கரையும் கலந்த தண்ணீரையும் தரலாம். அல்லது 'எலெக்ட்ரால்' பவுடர்களில் ஒன்றைத் தரலாம். இதில் நோய் கட்டுப்படவில்லை என்றால், அந்த நபரை மருத்துவமனையில் அனுமதித்து சலைன் ஏற்றிக் கொள்ள வேண்டும்.தடுக்கும் வழிகள் என்னவெளியில் செல்லும் போது குடை, ரெய்ன் கோட், எடுத்துச் செல்லுங்கள்.வீட்டுக்கு வந்ததும் வெது வெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். கை, கால்களை சோப்புப் போட்டுக் கழுவி எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரை பத்து நிமிடங்கள் கொதிக்க வைத்து ஆற வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும். அடிக்கடி தலைக்குக் குளிப்பதையும் குளிர்பானங்கள் குடிப்பதையும் ஐஸ்கிரீம் சாப்பிடுவதையும் தவிர்க்கவும். மூடிப் பாதுகாக்காத உணவுகளையும், ஈக்கள் மொய்த்த உணவுகளையும் சாப்பிட வேண்டாம். சமைத்த உணவுகளையும், குடிநீர்ப் பாத்திரங்களையும் எப்போதும் மூடி பாதுகாக்கவும்.வெளியிடங்களில் உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கவும். அவ்வப் போது சமைத்தச் சூடான உணவுகளைச் சாப்பிடவும். இருமும் போதும் தும்மும் போதும் கைக்குட்டையால் முகத்தை மறைத்துக் கொள்ளுங்கள்; தெருக்களிலும் பொது இடங்களிலும் எச்சில், சளியை துப்பாதீர்கள். சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். கொசுக் கடியிலிருந்து தப்பிக்க இரவில் மட்டுமல்லாமல் பகலிலும் கொசுவலையை பயன்படுத்துங்கள். உடல் முழுவதும் மறைக்கும் ஆடைகளை அணியுங்கள்; கொசுக்களை விரட்டும் புகைக் கருவிகளையும் களிம்புகளையும் பயன்படுத்துங்கள்.ஆவியில் அவித்த உணவுவீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டுச் சுவர்களில் டி.டி.டி மருந்து தெளித்தால் கொசுக்கள் ஒழியும்.எலிக் காய்ச்சலைத் தவிர்க்க அவசியம் செருப்பு அணிந்து தான் தெருக்களில் நடக்க வேண்டும். எண்ணெய்ப் பண்டங்களையும் அசைவ உணவுகளையும் குறைத்துக் கொண்டு ஆவியில் அவித்த உணவுகளை அதிகரித்துக் கொண்டால் செரிமானப் பிரச்னைகள் வராது. காய்கறிகளையும் பழங்களையும் நன்றாகக் கழுவிச் சாப்பிடுங்கள். பால், மோர், பழரசம், சூப்புகளைச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கைத் தடுக்க ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்தும், நிமோனியா, டைபாய்டு காய்ச்சல், மஞ்சள் காமாலை தடுப்பூசியும் போட வேண்டும். முதியவர்கள் பன்றிக் காய்ச்சலுக்கும் நிமோனியாவுக்கும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.மழைக் காலத்தில் அச்சமும் வேண்டாம், அலட்சியமும் வேண்டாம். நாம் வாழ மழை அவசியம்; அதை மகிழ்ச்சியாக எதிர் கொள்ளப் பழகிக் கொள்வதும் அவசியமே.-
டாக்டர்.கு.கணேசன்

மருத்துவ இதழியலாளர் , ராஜபாளையம் gganesan95@gmail.com

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement