Advertisement

ஆந்திர அரசை தமிழகமும் பின்பற்றலாமே!

Share

வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: வேறு எந்த வேலைக்கும் செல்ல முடியாதபடி, பகுதி நேர ஆசிரியர்கள் கட்டிப் போடப்பட்டுள்ளனர். குறைந்தது, இவர்களுக்கு, மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க, தமிழக அரசு முன் வர வேண்டும்.

தமிழக பள்ளி கல்வித்துறையில், 2012ல் பணிக்கு சேர்ந்த, பகுதி நேர ஆசிரியர்கள், இன்று மாதம், 7,700 ரூபாய் மட்டுமே, சம்பளமாக பெற்று வருகின்றனர். இவ்வாறு நிலைமை இருக்க, காலமுறை ஊதியம் பெற்று வரும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு மூன்று முறை ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. இதுதவிர, விடுப்பு ஒப்படைப்பு, மகப்பேறு விடுப்பு, மருத்துவ விடுப்பு, அரை சம்பளம் விடுப்பு என, பட்டியல் நீள்கிறது; கூடுதல் கல்வித் தகுதிக்கும், கூடுதலாக சம்பளம் வழங்கப்படுகிறது.

ஆனால், 'வாரத்தின் மூன்று நாள் மட்டும் வேலை' என, பணி அமர்த்தப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களுக்கு, விடுமுறை மாதத்தில் சம்பளம் கிடையாது; பிற எந்த சலுகைகளும் கிடையாது. தங்கள் வாழ்க்கையை, ஒரு குறுகிய வட்டத்துக்குள் வெறும், 7,700 ரூபாய் அடிப்படையில், அதிருப்தி காண்கின்றனர். தகுதி உள்ள பகுதி நேர ஆசிரியர்களை, மாணவர்கள் எண்ணிக்கை, 20க்கும் குறைவாக உள்ள பள்ளிகளுக்கு, கூடுதல் ஊதியத்துடன், ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். குறிப்பிட்ட பள்ளியை, இவர்களிடம் ஒப்படைத்து, மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கலாம்.

ஊதியம் அதிகம் வழங்கும் போது, பகுதி நேர ஆசிரியர்கள், வாரம் முழுவதும் பள்ளியில் பணிபுரிய ஆர்வம் காட்டுவர். இவர்களுக்கும், காலமுறை ஊதியம் பெறும் ஆசிரியர்களின் சலுகைகளில், சிலவற்றையாவது வழங்க, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களின் கூடுதல் கல்வி தகுதியை கவனத்தில் எடுத்து, சிறப்பு தேர்வு நடத்தி, அரசு பள்ளிகளில் காலமுறை ஊதிய அடிப்படையில், நியமனம் செய்ய வேண்டும்.

காலமுறை ஊதியம் பெறும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு, மாற்றாக மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளை, இவர்களிடம் ஒப்படைக்கலாம். ஆந்திர மாநிலத்தில், பகுதி நேர ஆசிரியர்களுக்கே, 14 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் மாணவர்கள் இல்லா பள்ளிகளுக்கு, ஒரு தலைமை ஆசிரியர், ஓர் உதவி ஆசிரியர் என, நியமித்து, தமிழக அரசு வீண் செலவு செய்து வருகிறது; இதை எல்லாம் தவிர்க்கலாமே... பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வில் வலியை போக்கி, நல்வழியை காட்ட, தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும்.


***

மனித இனத்திற்கு இறைவன் தந்த வரம் இது தான்!கே.சிங்காரம், வெண்ணந்துார், நாமக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:'வாய் விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்' என்பது, முன்னோர் நமக்களித்த பொன்மொழி. அதை, கடைப்பிடித்து, நோயற்ற வாழ்வுக்கு, அடித்தளம் அமைக்க வேண்டும். இப்பொதெல்லாம், ௩௦ வயது கடந்தவர், ௬௦ வயதானவர் போல காட்சியளிப்பதை காண முடிகிறது. இதுபோன்ற நிலைகளுக்கு காரணமாக இருப்பது, போதை பழக்கம் தான். நரம்பு மண்டலம் பழுதடைந்து, முதுமையாக சிலர் காட்சியளிக்கின்றனர்.

நோயும், ஆரோக்கியமும் ஏற்பட, மனிதர்களின் செயல்பாடுகளில் தான் உள்ளன. சரியான உணவு முறையும், ஒழுக்க நெறியும், எல்லாரிடமும் சிரித்து பேசும், பண்பும் நிறைந்தவர்கள், இளமையுடன் இருக்கின்றனர். சிறந்த பண்புகளோடும், பயனுள்ள வார்த்தைகளோடும் இருக்கும் போது, ஒரு மனிதன், சான்றோர்களால் பாராட்டப்படுகிறார். செல்வம், புகழை விட, சிரித்து மனம் விட்டு பேசும், சிறந்த பண்புக்கு முதலிடம் கிடைக்கிறது.

மனிதர்களில் சிலர், தெரிந்தும், தெரியாமலும், ஏதாவது ஒரு வகையில், குற்றச் செயல்கள் புரிந்து வருகின்றனர். அதற்காக, அவர்கள் கவலைப்படுவதுமில்லை; வருத்தப்படுவதுமில்லை. மாறாக, பிறர் செய்யும் தவறுகளை, அடுத்தவர்களிடம் விமர்சனம் செய்வதும், நகையாடுவதும், பொழுதுபோக்காக கொண்டுள்ளனர். தன் நிலைபாட்டை மறந்து, அடுத்தவரை புறம் கூறுவது சரியல்ல! மற்றவர்களின் நல்ல செயல்களை புகழ்ந்து, பாராட்டி சொல்லத் தெரிந்தவன், வாழ்த்துகளுக்கும் உரியவன் ஆகிறான்.

ஒருவரை பற்றி, நேருக்கு நேர் பாராட்டலாம்; அதேபோல், குறைகள் இருந்தால், சுட்டிக்காட்டலாம். அதை விடுத்து, உள் ஒன்று வைத்து, புறமொன்று பேசுவது சரியல்ல. எனவே, மஹாத்மா காந்தியடிகள் கூறியது போல், நல்லதை பேசுவோம்; கேட்போம்; பார்ப்போம். சிரிப்பு என்பது, மனித இனத்திற்கு மட்டும், இறைவன் வழங்கி இருக்கும் வரப்பிரசாதம்!

***

அமைச்சர்களுக்கு வழிகாட்டியாக மாறும் உதயகுமார்!பி.மோகன்ராம், திருமங்கலம், மதுரை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: மதுரை மாவட்டம், திருமங்கலம் நகருக்குள், அனைத்து சாலைகளும், 'பிளேவர் பிளாக்' கற்கள் பதிக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டுள்ளது; கோடை காலத்தில், தண்ணீர் பஞ்சமே ஏற்படாமல் காக்கப்பட்டுள்ளது. வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளில், உடனடியாக மக்களிடம் கேட்காமலேயே, 'டேங்கர்' லாரிகள் வாயிலாக, தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

திருமங்கலம் தொகுதியில், இதுவரை பணியாற்றிய பல எம்.எல்.ஏ.,க்களை விட, மக்கள் மத்தியில், அதிக அளவில் நற்பெயர் பெற்றவர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்; இவர் தான், இந்த தொகுதி, எம்.எல்.ஏ.,வாக இருப்பவர். மதுரை மாவட்டத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவமனையை, திருமங்கலம் தொகுதிக்குள் கொண்டு வருவதில் வெற்றி பெற்றுள்ளார். அதன் அருகிலேயே, பஸ் ஸ்டாண்ட் முனையம் அமைக்க, அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது.

தொகுதி மக்களின், நீண்ட கால பிரச்னையாக இருந்த வெளியூர் பஸ் ஸ்டாண்டையும் அமைக்க, அனைத்து பணிகளையும் முடுக்கி விட்டுள்ளார். வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செல்லாத கிராமங்களே கிடையாது. மக்களை நேரில் சந்தித்து, குறைகளை கேட்டறிந்து, உடனடியாக சரி செய்கிறார். அவர் உத்தரவுப்படி, கிராமங்கள் தோறும், 10 அடி, 12 அடி சாலைகள் எல்லாம், தற்போது, 20 அடி அகலத்திற்கு அமைக்கப்பட்டுள்ளன.

புதிதாக பல சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. கிராமப்புற பள்ளிக்கூடங்கள் புதிய தரத்துடன் புனரமைக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில், ஆர்.பி.உதயகுமார் சுயேட்சையாக நின்றாலே, ஒரு லட்சத்திற்கும் மேலான ஓட்டுக்களை பெறுவார்; இது பொய்யல்ல. ஒருவரின் எளிமை மற்றும் செயல்பாடுகள் வைத்து தான் மக்கள் மதிப்பிடுகின்றனர். அமைச்சர் உதயகுமார் போல, அனைத்து அரசியல்வாதிகளும், 'பந்தா' இல்லாமல் எளிமையாக நடந்து கொண்டால், தமிழகம் சொர்க்க பூமி தான்!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Krish - Chennai ,இந்தியா

    திரு உதயகுமார் பற்றி மோகன்ராம் கருத்துக்கள் சரியானால் , மிக மிக சந்தோசம் , பாராட்டுக்கள் . தினமலர் எல்லா தொகுதிகளையும் சுற்றிவந்து ஒரு நல்ல நேர்மையான அறிக்கை தரலாம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement