Advertisement

தி.மு.க., - எம்.பி., உதவியாளரின் தனி ஆவர்த்தனம்!

Share

''நாம பேசினதைக் கேட்டு, நடவடிக்கை எடுத்துட்டாரு வே...'' என, துண்டால் பெஞ்சை தட்டியபடியே அமர்ந்தார், பெரியசாமி அண்ணாச்சி.

''யாரைச் சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''திருச்சி மாவட்டம், துறையூர் தாசில்தாரா இருந்தவர், சத்தியநாராயணன்... 'இவர், டூட்டி நேரத்துல கூட மப்புல இருக்கார்... பெண் ஊழியர்களிடம் தப்பு தப்பா பேசுதாரு... வசூல் வேட்டையிலயும் தீவிரமா இருக்கார்'னு கொஞ்ச நாளைக்கு முன்னாடி பேசினோமுல்லா... ''இதைப் பார்த்த, கலெக்டர் சிவராஜு, தாசில்தார் பத்தி விசாரிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டாரு... விசாரணையில, புகார்கள் எல்லாம் உண்மைன்னு தெரிஞ்சு போச்சு வே...

''இதனால, சமீபத்துல சத்தியநாராயணனை, சிப்காட் தாசில்தாரா மாத்திட்டாரு... பொதுவா, ரெகுலர் தாசில்தார் பதவிக்கு வந்தவங்களை, ஒரு வருஷம் கழிச்சு தான், வேற இடத்துக்கு மாத்துவாவ... ''ஆனா, புகார்ல சிக்குனதால, மூணே மாசத்துல, சத்தியநாராயணனை கலெக்டர் மாத்திட்டாரு வே...'' என்றார் அண்ணாச்சி.

''வாகனமும் இல்லாம, பெட்ரோல் அலவன்சும் இல்லாம, கடுமையா பாதிக்கப்படுறாங்க...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.

''யாரு பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''இன்ஸ்பெக்டர்களுக்கு, அரசு சார்புல, மாசா மாசம், பெட்ரோல் அலவன்ஸ் குடுப்பாங்க... பல மாவட்டங்கள்ல, அலவன்ஸ் ஒதுக்கீடு பண்ணாம, மாசக்கணக்குல தாமதம் செய்யறதா, இன்ஸ்பெக்டர்கள் புலம்புறாங்க... ''இதனால, சொந்தப் பணத்தை செலவழிச்சு, வழக்கு விசாரணைக்கு போக வேண்டியிருக்கு... பல நேரங்கள்ல, புகார் குடுத்தவங்களையே, வாகனம் ஏற்பாடு செய்து தரும்படி கேட்கிறாங்க...

''இது போக, மாவட்ட வாரியா, தடயவியல் பிரிவு போலீஸ் உயரதிகாரிகளுக்கு, பிரத்யேக வாகனம் இல்லையாம்... இதனால, ஊரகப் பகுதிகள்ல நடக்குற திருட்டு, கொள்ளை சம்பவத்துல, விரல் ரேகை பதிவு செய்யற பணிகளும் தாமதம் ஆகுதுன்னு போலீசார் புலம்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''சாட்ஷாத், எம்.பி., மாதிரியே வலம் வரார் ஓய்...'' என, கடைசி தகவலை கையில் எடுத்தார், குப்பண்ணா.

''எந்தக் கட்சி விவகாரம் பா...'' என, விசாரித்தார் அன்வர்பாய்.

''தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., ஒருத்தர், தொகுதி மேம்பாட்டு நிதிக்கான பணிகளை, கட்சிக்காராளா பார்த்து தான் குடுப்பார்... ஆனா, எம்.பி.,யின் உதவியாளரோ, தனக்கு வேண்டியவாளுக்கு, பணிகளை கொடுங்கோன்னு பரிந்துரை பண்றார் ஓய்... ''அதே மாதிரி, எம்.பி., ஊர்ல இல்லாத நேரத்துல, அறிவாலயத்துல, எம்.பி., மாதிரியே செயல்படற அளவுக்கு, உதவியாளருக்கு துணிச்சல் வந்துடுத்து... உதவியாளரின் இந்த நடவடிக்கையால, அறிவாலய ஊழியர்களும் கடும் அதிருப்தியில இருக்கா... 'அறிவாலயம் பக்கம், உதவியாளரை வர விடாம, எம்.பி., பார்த்துண்டாலே, பெரிய புண்ணியமா போகும்'னு புலம்பறா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.

''பாக்கியராஜ், இந்த பேப்பரை அப்படி வச்சிடுங்க...'' என, நண்பரிடம் கூறியபடியே, அந்தோணிசாமி கிளம்ப, மற்றவர்களும் எழுந்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • S.V.SRINIVASAN - Chennai,இந்தியா

    காவல் துறையை கையில் வைத்திருக்கும் EPS அவர்களே டி கடை பெஞ்ச் விவாதம் காதில் விழுந்ததா ? உடனடியாக நடவடிக்கை எடுத்து வேண்டியதை செயுங்கள். இல்லாவிட்டால் தமிழ் நாட்டில் நடக்கும் சட்ட விரோத செயல்களுக்கு காவல் துறையை குற்றம் சொல்ல முடியாது.

  • A R J U N - sennai ,இந்தியா

    இங்க மட்டும் என்ன வாழ்த்து, செயலகம் போய் பாருங்கள், அமைச்சர் காரில் இந்த PA கள் தான் உட்கார்ந்து இருப்பார்கள், பந்தாப்பண்ணிக்கொண்டு.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement