Advertisement

பிரச்னைகள் இனி பிரச்னைகள் அல்ல

Share

பிரச்னைகள் இல்லாத வாழ்க்கையில்லை. ஆனால் அவற்றை எதிர்கொண்டு வெற்றி கொள்வதுதான் வாழ்க்கை. அதற்கு நம்மிடம் நிதானமும் புத்திசாலித்தனமும் வேண்டும். சில சுவையான சம்பவங்களை பார்ப்போம்.ஒருவர் தனது நண்பருக்கு முப்பதாயிரம் ரூபாய் கடன் கொடுத்திருந்தார். வாய்மொழி உத்தரவாதம்தான். குறித்த காலத்தில் திருப்பித் தரவில்லை. இப்போதைக்கு ஒரு செக்காவது கொடு என்று கேட்டு வாங்கிக் கொண்டார். இரண்டு பேரும் ஒரே வங்கியில் தான் கணக்கு வைத்திருந்தார்கள்.செக்கை கிளியரன்சுக்குப் போட்டால் போதுமான பணம் இருக்கிறதா? என்று தெரிந்து கொள்ள விரும்பினார். வங்கி மேனேஜர் தெரிந்தவர் என்பதால் விவரத்தைச் சொல்லி நண்பன் பேங்க் பேலன்ஸ் எவ்வளவு என்று தெரிந்து கொள்ள விரும்பி கேட்டார். வங்கி பேலன்ஸ் 28 ஆயிரம்தான் இருந்தது. நண்பரின் சதிவேலையைப் புரிந்துகொண்ட இவர் ஒரு காரியம் செய்தார். நண்பரின் அக்கவுண்டில் மூன்றாயிரம் ரூபாயைப் போட்டார். இப்போது 31ஆயிரம் ரூபாய் இருந்தது. முப்பதாயிரம் ரூபாய் செக்கை வசூலிக்கப் போட்டார். கிராஸ் பண்ணாத செக்காயிருந்ததால் உடனே பணம் கிடைத்துவிட்டது. நஷ்டம் மூன்றாயிரம் ரூபாயோடு முடிந்து விட்டது. கிடைத்தவரை லாபம் என்று வேலையை முடித்துவிட்டார் இவர்.

தாயா மனைவியா?இளம்பிராயத்தில் தந்தையை இழந்த அவன், தாயின் அரவணைப்பில் வளர்ந்தான். படித்து முடித்ததும் வேலைக்குச் சேர்ந்தான். மாதம் முடிவில் சம்பளம் வாங்கியதும் அந்தக் கவரை அம்மா கையில்தான் கொடுப்பான். சில ஆண்டுகளில் அவனுக்குத் திருமணம் ஆனது. திருமண தடபுடல் முடிந்து வேலைக்குச் சென்ற அவன், அந்த மாதச் சம்பளத்தை வாங்கி வந்தான். என்னதான் திருமணம் ஆனாலும் இந்த மாதமும் சம்பளக் கவரைத் தன்னிடம்தான் தருவான் என்று தாய் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். இத்தனை நாளும் தாயிடம் சம்பளத்தைக் கொடுத்த அவர், இந்த முறை தன்னிடம்தான் கொடுப்பார் என்று மனைவி எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் வீட்டுக்குள் நுழைந்ததும் இருவரும் அவனை ஆவலோடு பார்த்தார்கள். தாயிடம் கொடுத்தால் மனைவிக்கு வருத்தம். மனைவியிடம் கொடுத்தால் தாய்க்கு வருத்தம். பிரச்னை முளைத்துவிட்டது. இதை எப்படிச் சமாளிப்பது என்று அவன் திட்டமிட்டிருந்தான். நிறைய மல்லிகைப் பூவை இலையில் கட்டி வாங்கி வந்திருந்தான்.அதை அம்மாவிடம் கொடுத்து மருமகள் தலையில் வைத்துவிடச் சொன்னான். அதை வைக்கும்போது மாமியார் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. மருமகளுக்கும் பெருமையாக இருந்தது. இந்தச் சுமுகமான சூழ்நிலையில் சம்பளக்கவரை மனைவியிடம் கொடுத்து, அம்மாவிடம் கொடு என்றான். முதலில் கவர் தன் கைக்கு வந்ததில் மனைவிக்கு மகிழ்ச்சி. இறுதியில் தன்னிடமே வந்துவிட்டதே என்று அம்மாவுக்கு மகிழ்ச்சி. நெகிழ்ந்து போன அம்மா, தனக்குரிய மரியாதையை மகன் கொடுத்துவிட்டான் என நினைத்து மருமகளைப் பார்த்து, இத்தனை நாளும் குடும்ப பொறுப்பை நான் சுமந்தேன். இனிமேல் நீயே கவனி என்று சொல்லி சம்பளக் கவரை மருமகளிடம் கொடுத்துவிட்டாள். பிரச்னையைத் தீர்த்த மகிழ்ச்சியில் மகன் துள்ளிக் குதித்தான்.

கோபக்கார அரசன்அந்த நாட்டின் அரசன் கோபக்காரன். பணியாளர்கள் சிறு தவறு செய்தாலும் பெரிய தண்டனை கொடுத்து விடுவார். அதனால் எல்லோரும் நடுங்குவார்கள். ஒருநாள் அரசன் உணவருந்தும்போது, குழம்பில் சில துளிகள் மகாராஜாவின் உடையில் படும்படி பரிமாறியவர் ஊற்றிவிட்டார். மன்னருக்குக் கோபம் வந்துவிட்டது. சுற்றி நின்றவர்கள் பதறிப் போனார்கள். பெரிய தண்டனை கிடைக்கப்போகிறது என்று பணியாளரும் நடுங்கினார். யாரும் எதிர்பாராத வகையில் குழம்பு இருந்த வாளியை முழுவதும் அரசர் மீது கவிழ்த்துவிட்டார்.மற்றவர்கள் அதைத் துடைத்துவிட்ட பிறகு, கோபத்தின் உச்சிக்கே சென்று, ஏன் இப்படிச் செய்தாய்? என்று உறுமினார். தவறு செய்தவர் நிதானமாகப் பேசினார். “அரசே மன்னித்துவிடுங்கள். குழம்பில் சில துளிகள் உங்கள் உடைமேல் விழுந்ததற்கு எப்படியும் பெரிய தண்டனை கொடுக்கப் போகிறீர்கள். இதற்குப் போய் அரசர் இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்துவிட்டாரே என்ற பழி உங்களுக்கு வரக்கூடும். இப்போது பெரிய தவறு செய்துவிட்டேன். நீங்கள் எவ்வளவு பெரிய தண்டனை கொடுத்தாலும் அது சரிதான் என்று மக்கள் பேசுவார்கள். உங்களுக்குப் பழி வரக்கூடாது என்பதற்காக நான் பழியை ஏற்றுக்கொண்டேன். என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள்,” என்றார். அவரது வாதத்தில் இருந்த நுட்பத்தை அறிந்த அரசர் அவரை மன்னித்துவிட்டார்.

பகிர்தல் பிரச்னைஅரபு நாடு ஒன்றில் நடந்த நிகழ்ச்சி. ஒருவருக்கு மூன்று ஆண் மக்கள். அவரிடம் 17 ஒட்டகங்கள் இருந்தன. மரணத் தருவாயில் மூன்று பேரும் ஒட்டகங்களைப் பங்கிட்டு எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார். 17 ஒட்டகங்களை மூன்று பேர் எப்படி சமமாகப் பங்கிட்டுக் கொள்ள முடியும்? பிரச்னை ஏற்பட்டது. சகோதரர்களுக்குள் மோதல் ஏற்படும் நிலை. அப்போது ஒருவர் ஒரு ஒட்டகத்தை கொண்டு வந்தார். உங்கள் தந்தை எனக்கு நண்பர். நான் இந்த ஒட்டகத்தைத் தருகிறேன். 18 ஒட்டகங்கள் ஆகிவிடும். இப்போது நீங்கள் ஆளுக்கு ஆறு ஒட்டகங்களாகப் பிரித்துக் கொள்ளுங்கள் என்றார்.மூவரும் மகிழ்ச்சியோடு பிரித்துக் கொண்டு அவருக்கு நன்றி சொன்னார்கள். நன்றி மட்டும் போதாது. நான் உங்களுக்குச் செய்த உதவிக்காக, உங்களில் கருணை உள்ள ஒருவர் எனக்கு ஒரு ஒட்டகத்தைக் கொடையாகத் தரவேண்டும் என்றார். போட்டி போட்டுக் கொண்டு மூவருமே ஆளுக்கு ஒரு ஒட்டகத்தைக் கொடுத்தார்கள். இப்போது அவர்களுக்கு ஆளுக்கு 5 ஒட்டகங்கள். இவருக்கு மூன்று ஒட்டகங்கள். புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால் பிரச்னைகள் தீரும். பரிசும் கிடைக்கும்.

புடவை கொடியாயிற்றுஜெர்மனியில் 1907ல் சர்வதேச மாநாடு நடந்தது. தாதாபாய் நவ்ரோஜியின் செயலாளராகப் பணியாற்றி வந்த காமா அம்மையார் மாநாட்டில் கலந்து கொண்டார். அந்த மாநாட்டிலே பாரத நாட்டுக்கு முழுச் சுதந்திரம் வேண்டும் என காமா முழக்கமிட்டார். அந்தச் சமயத்தில் பாரதத்தின் தேசியக்கொடி என்று எதுவும் இல்லை.உங்கள் தேச தேசியக்கொடி எது என்று யாரோ கேள்வி எழுப்பினார். காமா ஒரு கணம் யோசித்தார். அப்போது அவர் பச்சை வண்ணச் சேலை அணிந்திருந்தார். சேலையின் முந்தானை காவி நிறத்தில் இருந்தது. காவி நிறமும் பச்சை நிறமும் சேர்ந்தாற் போலிருக்குமாதலால் தமது புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து “இதுதான் எங்கள் தேசியக் கொடி" எனப் பறக்கவிட்டார். அந்தக் கொடியின் வண்ணத்தை ஒட்டித்தான் பிற்காலத்தில் பாரதத்தில் காங்கிரஸ் ஆட்சி தேசியக் கொடியை அமைத்துக் கொண்டது.

டிரைவரின் சாமர்த்தியம்விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின் ரிலேட்டிவிட்டி தியரியைக் கண்டுபிடித்த சமயம். அதை விளக்கப் பல இடங்களுக்குச் சென்று சொற்பொழிவாற்றி வந்தார். பலமுறை அவரது சொற்பொழிவைக் கேட்டு, கேட்டு கார் டிரைவருக்கு மனப்பாடம் ஆகிவிட்டது. ஐன்ஸ்டினைப் பார்க்காத ஒரு நகருக்குப் பயணப்பட்டுக் கொண்டிருக்கும்போது டிரைவர் சொன்னார். “சார், இன்றைக்கு நீங்கள் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள்” எனவே எனது உடையைப் போட்டுக் கொண்டு பார்வையாளராக கூட்டத்துக்கு செல்லுங்கள். நான் உங்கள் உடையைப் போட்டுக் கொண்டு சொற்பொழிவை நிகழ்த்தி விடுகிறேன் என்றார். ஐன்ஸ்டின் சம்மதித்தார். டிரைவர் வெற்றிகரமாக சொற்பொழிவாற்றினார்.பிறகு கேள்வி நேரம் தொடங்கியது. இதை சற்றும் எதிர்பாராத டிரைவர் விழித்தார். டிரைவருக்குப் பிரச்னை ஆரம்பமாகிவிட்டது. உடனே அவர் என்ன செய்தார் தெரியுமா? இது மிகச் சாதாரண கேள்வி. இதற்கு நான் பதில் சொல்வதைவிட என் டிரைவரே பதில் சொல்வார்' என்றார். டிரைவர் உடையில் இருந்த ஐன்ஸ்டின் மேடைக்குச் சென்று பதில் கூற ஆரம்பித்தார். பிரச்னை தீர்ந்துவிட்டது.இப்படி பிரச்னைகளை நிதானத்துடன், புத்திசாலித்தனத்துடன் எதிர்கொண்டால் இனி பிரச்னைகள் நமக்கில்லை.

-முனைவர் இளசை சுந்தரம்

வானொலி நிலைய இயக்குனர் (ஓய்வு)

98430 62817

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement