Advertisement

தனியாருக்கு தாரை வார்க்க இது தான் காரணம்!

Share

வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டத்திலிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அடிக்கடி ஏதாவது காரணம் சொல்லி, ரயில்களின் இயக்கத்தை குறைப்பதும், தாமதப்படுத்துவதும் வழக்கமாக ரயில்வே நிர்வாகத்தினர் கொண்டிருக்கின்றனர். பொறுப்பற்ற செயலால், பயணியர் ஆட்டுமந்தையை போல, ரயில்களில் நெரிசலில் சிக்கி பயணிக்க வேண்டியுள்ளது.

உலகில், வேறு எந்த நாட்டிலும், இது போன்ற நிலைமை கிடையாது. ரயில் இயங்கவில்லை என்றால், மற்ற நாட்டினர் மாற்று ஏற்பாட்டை செய்து தருவர்; பயணியரை பேருந்துகளில் அனுப்பி வைப்பர். சென்னையில், பயணியரை அலைக்கழிக்காமல், மாற்று ஏற்பாடாக, தனியார் பஸ்களை ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்ய முடியாது. ஒரு வாரமாக செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே இயங்கும், புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து சரிவர இயங்குவதில்லை.

காலை 10:00க்கு மணிக்கு மேல், சென்னை கடற்கரை- - செங்கல்பட்டு இடையே இயங்கும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தப்படுகின்றன. 'பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால், கூடுவாஞ்சேரியுடன் மாலை வரை மின்சார ரயில்கள் நிறுத்தப்படுகின்றன' என, ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால், பயணியர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ரயில்வே அறிவித்துள்ள பராமரிப்பு பணிகள் செய்வது பற்றி, யாருக்கும் ஆட்சேபனை இல்லை. ஆனால், மின்சார ரயிலை நம்பி, பயணம் மேற்கொள்வோருக்கு, ரயில்வே நிர்வாகம் மாற்று ஏற்பாட்டை செய்து கொடுத்திருக்க வேண்டும்; இது, ரயில்வே நிர்வாகத்தின் கடமை!

பராமரிப்பு பணி காரணமாக, ரயில்களின் இயக்கத்தை குறிப்பிட்ட துாரம் வரை இயக்கி, பின்னர் நிறுத்தி விடுவதால் பயணியர் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, அலுவலகம் செல்வோர், குறித்த நேரத்திற்கு எப்படி செல்ல முடியும். இதைப்பற்றி ரயில்வே நிர்வாகம் ஏன் சிந்தித்துப் பார்ப்பதில்லை. உங்கள் வேலையை, நீங்கள் பார்ப்பது போல், எங்கள் வேலையை நாங்கள் பார்க்க வேண்டாமா... பயணியர் மீது அக்கறை இல்லாத ரயில்வே நிர்வாகத்தின், இது போன்ற மெத்தனப்போக்கின் காரணமாக தான், ரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது!


***

இளம் விஞ்ஞானிகள் உருவாக பரிசை அறிவியுங்கள்!அ.சேகர், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பல மரணங்கள், ஆழ்துளை கிணற்றில் சிக்கி, இறந்தோரால் நடந்தன. ஆழ்துளை கிணறு தோண்டுவது முதல், முறையாக மூடுவது வரை, எப்படி செய்ய வேண்டும் என கடுமையான விதிமுறைகளை, உச்ச, உயர் நீதிமன்றங்கள் கூறியுள்ளன. இந்த உத்தரவுகளை யாரும் சரிவர பின்பற்றாததால், இன்று மணப்பாறை அருகே சிறுவன் சுஜித்வில்சன் மரணத்தில் முடிந்தது. இதை அரசியல் ஆக்கி பேசுவோர், ஆட்சியில் இருந்தாலும், இதே மரணம் தான் நடக்கும் என்பதை தெரிந்திருக்க வேண்டாமா...

ஏனெனில், இன்று வரை, அதை தடுக்கும் வகையில், எந்த ஒரு நவீன யுக்தியும், அவற்றை செயல்படுத்தக்கூடிய கருவிகளையும் கண்டுபிடிக்கவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், பொதுநல வழக்கை தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன மற்றும் சேஷசாயி அமர்வு கூறிய தீர்ப்பில், 'தனி மனிதர்களிடம் சமூக பொறுப்பு இல்லாததும், அரசு ஏற்கனவே நீதிமன்றங்களில் கூறப்பட்ட விதிகளை சரிவர பின் பற்றாததே, ஆழ்துளை கிணற்றில் சிறுவன் பலியான அவலத்திற்கு காரணம்' என்றது.

தமிழக முதல்வர் இ.பி.எஸ்., முதல், பல அமைச்சர்கள் வரை, வெளிநாடுகளுக்கு சென்றனர். அங்கு, தொழில் அதிபர்களை சந்தித்து, அவர்களை தமிழகத்தில், தொழில் துவங்க அழைத்துள்ளனர். வெளிநாட்டு தொழில்நுட்பத்தை பல துறைகளின் வாயிலாகவும், அறிந்து வந்துள்ளனர். இந்த பயணத்தில், தேசிய, மாநில பேரிடர் துறையை சார்ந்த அதிகாரிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி, இது போன்ற ஆழ்துளை கிணறு விபத்தில் சிக்குவோரை காப்பாற்றும் தொழில் நுட்பத்தை ஏன் கற்று வரக்கூடாது.

இளம் விஞ்ஞானிகள், புதிய கண்டுபிடிப்புகள் செய்ய முயற்சி செய்வோரை, இப்படி போட்டிகளில் பங்கேற்க செய்யலாம்... ஆழ்துளை கிணறு விபத்தில் சிக்குவோரை எளிதில் மீட்க கூடிய கருவியை கண்டுபிடிப்போருக்கு, 1 கோடி ரூபாய் பரிசு என, அறிவிக்கலாம்; அவர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கலாம். போட்டி போட்டு, நாட்டில் இளம் விஞ்ஞானிகள் பலர், பல கருவிகளை கண்டுபிடித்து விடுவர்!


***

தரமற்ற பால் விற்பனையை தடுக்கணும்!சொ.செல்வராஜ், கோ - ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் (பணி நிறைவு), சென்னையிலிருந்து எழுதுகிறார்: உலகளவில், கலப்படம் இல்லாத, சுத்தமான, சுகாதாரமான, தரமான பால், தாய்ப்பாலே; இதை யாரும் மறுப்பதற்கில்லை. தாய்ப்பாலுக்கு, அடுத்தபடியாக, குழந்தைகள், முதியோர், வயோதியர், பெண்கள் மற்றும் கருவுற்ற தாய்மார்கள் உள்ளிட்ட அனைவரும், பசும்பாலை அருந்துகின்றனர்.

தமிழகம், டில்லி, கேரளா மாநிலங்களில் பயன்படுத்தப்படும் பால் தான், ரசாயன கலவை அதிகம் உள்ளது. கறவை மாடுகளுக்கு வழங்கப்படும் மாட்டுத் தீவனங்களில் செய்யப்பட்ட கலப்படம் காரணமாக, பால் தரமற்று போயுள்ளது. நாடு முழுவதும், பல்வேறு பகுதிகளிலுள்ள, 1,103 நகரங்களில் சேகரிக்கப்பட்ட, 6,432 பால் பதப்படுத்தப்பட்ட மாதிரிகளின் தரம் குறித்து, இந்திய உணவு பாதுகாப்பு தரச்சான்று நிர்ணய அமைப்பால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட பால் மாதிரிகளில், 38 சதவீதம் தரமற்றது என, தெரிய வந்துள்ளது.

மொத்த பால் மாதிரிகளின் ஆய்வில், 12 சதவீத மாதிரிகளில் கலப்படம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது; அதிலும், முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளில் தான், அதிகளவு தரமற்றதாக உள்ளன. தரமற்ற பால் விற்பனை செய்யும் நிறுவனங்கள், இந்திய உணவு பாதுகாப்பு தரச்சான்று நிர்ணய அமைப்பின் ஆய்வு முடிவுகளுக்கு எதிராக, நீதிமன்றங்களுக்கு சென்றாலும், தர விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும்.

எனவே, 100 சதவீதம், தரமான பாலை விற்க வேண்டும்; தரமற்ற பாலை சந்தைப்படுத்தி விற்பனையை தடுக்க, உற்பத்தி செய்யப்படும் பாலை, ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். விதிமுறைகளை மீறுவோர் மீது, மத்திய - மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் உயிரோடு விளையாடும் தரமற்ற பால் விற்பனைக்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • K.n. Dhasarathan - chennai,இந்தியா

    இந்திய உணவு தர கட்டுப்பட்டு அமைப்பு ஏன் தரமற்ற பால்களை பட்டியலில் வெளியிடவில்லை, அரசும் அதற்கு துணை போகிறதா ? அல்லது தரமான பால்களை மட்டுமாவது சொல்லலாமே, ஏன் சொல்லவில்லை ? முந்திரிக்கோட்டை மந்திரி ராஜேந்திர பாலாஜி ஏன் வாயை திறக்கவில்லை ? ஏனென்றால் இங்கு அனைத்திலும் ஊழல், எதை பிரிப்பது, எதை சேர்ப்பது ? தைரியம் இருந்தால் அமைச்சர் தமிழக பாலின் தரம் என்னவென்று தர சான்றுடன் சொல்லமுடியுமா ?

  • Bhaskaran - Chennai,இந்தியா

    நேற்று மலம்புழா அணைக்கட்டுக்கு சென்றிருந்தோம் பராமரிப்பு மிகக்கேவலம் தரை பழங்களில் உடைந்து உள்ளது நுழைவாயிலில் உள்ள அணைக்கட்டு எழுத்தின்மேலேயே slab உடைந்து பல்லிளிக்கிறது மரங்களே காணவில்லை கழிப்பறை தண்ணீர் இருந்தும் சுத்தமாகபராமரிக்கப்படவில்லை அடாவடியாக காசுபிடுங்குகின்றனர் பாலகங்களில் விலை அநியாயம் பலலட்சம் வருமானம் வந்தும் பணத்தை எங்கேதான் கொண்டுசெல்கின்றனரோ மேலும் உள்ளே நுழைபவர்களிடம் சோதனை வேறு சரியாக செய்வதில்லை தீவிரவாதி எளிதாக புகுந்துவிடலாம் .நமதுவூர் அணைக்கட்டு பூங்காக்களில் இந்தநிலை என்று நினைத்தேன் கேரளாவின் நம்மை இது விஷயத்தில் தோற்கடித்து பரிசு வாங்குவார்கள் .கமம்ரேட்டுகள் நீடூழி வாழ்க

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement