Advertisement

'டவுட்' தனபாலு

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: அரசியல் தலைவர்களின் வாரிசுகள், அரசியலில் நுழைவதில் எந்த தவறும் இல்லை. வாரிசுகளை அரசியலில் களம் இறக்கிய தலைவர்கள் தான், அரசியல் இயக்கங்களை நீண்ட காலம் முன்னெடுத்துச் சென்றுள்ளனர். அதனால், வாரிசு அரசியல் தவறில்லை. அதற்காக, வாரிசுகள் இல்லாதோர், அரசியலில் சரியாக செயல்படவில்லை என்ற அர்த்தமில்லை.

'டவுட்' தனபாலு: சில மாதங்களுக்கு முன், 'எந்த காரணத்தை கொண்டும், என் மகன் உதயநிதி, தி.மு.க.,வில் எந்த பொறுப்புக்கும் வர மாட்டான்' என்றீர்கள். இப்போது அவரை, உங்கள் கட்சியின் இளைஞரணி செயலர் ஆக்கி, வாரிசு அரசியலை வளர்க்கத் துவங்கி விட்டீர்கள். அதனால் தான், வாரிசு இல்லாத தலைவர்களை வசை பாடத் துவங்கி விட்டீர்களோ... வாரிசு இல்லாத தலைவர்கள் என, அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ.,வை தான் குறிப்பிடுகிறீர்கள் என்பது, 'டவுட்'டே இல்லாமல், புரிந்து விட்டது.

***

தமிழக வணிக வரித்துறை அமைச்சர் வீரமணி: சிறையில் இருக்கும் சசிகலா விடுதலையாகி, வெளியே வந்தாலும், அ.தி.மு.க.,வில் ஒன்றும் நடக்காது. அவரின் குடும்பத்தை எதிர்த்து, தர்மயுத்தம் நடத்தி, அ.தி.மு.க.,வை காப்பாற்றியுள்ளோம். அந்த குடும்பத்தை, எங்கள் கட்சியில் மீண்டும் சேர்க்கவே மாட்டோம்.

'டவுட்' தனபாலு: நீங்க பேசுறதைப் பார்த்தால், ஜெ., தோழி சசிகலா, நாளைக்கே விடுதலையாகி வருவது போல அல்லவா இருக்கிறது. துணை முதல்வர் பன்னீர்செல்வம் தான், 'தர்மயுத்தம் நடத்தினேன்' என்பார். இப்போது நீங்களும், 'தர்மயுத்தம் நடத்தினோம்' என்கிறீர்கள். எத்தனை பேர் தான், அந்த கட்சியில், தர்ம யுத்தத்தை நடத்தினீர்கள் என்ற, 'டவுட்' எனக்கு வருகிறது.

***

பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி: பெரும்பாலான மாநிலங்களில், அந்த மாநிலத்தின் பெரும்பான்மை ஜாதியைச் சேர்ந்தவர்கள் தான், முதல்வர்களாகி உள்ளனர். ஆனால், தமிழகத்தில் அந்த நிலை இதுவரை வரவில்லை. தமிழகத்தில் வன்னியர்கள் ஒற்றுமை அடைந்தால், முதல்வர் பதவியை பிடித்து விடலாம்.

'டவுட்' தனபாலு: வன்னியர்கள் ஒற்றுமை அடைய வேண்டும் என்ற எண்ணம் சரி தான். முதல்வர் பதவியை பிடிக்கப் போவது யார் என, சொல்லவில்லையே... உங்களுக்குள்ளேயே, முதல்வர் பதவியைப் பிடிக்கப் போவது யார் என்பதில், கருத்து வேறுபாடு இருக்குதே... உங்களுக்குள்ளே ஒற்றுமை ஏற்படாமல், கருத்தை மட்டும் வெளிப்படுத்துவது, உங்களுக்கு முதல்வர் பதவி ஆசைக்கு, எவ்வளவு துாரம் பயனளிக்கும்ங்கிறது, 'டவுட்' தான்!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    வன்னியரெல்லாம் ஒட்டுமொத்தமாக ஏமார்ந்து பாமக விற்கு ஓட்டளித்தால் அன்புமணி முதல்வராக st.ஜார்ஜ் கோட்டையை அலங்கரிப்பார்...

  • Abdul Rahman - Madurai,இந்தியா

    அப்போ கருணாநிதியின் இணை, துணை வாரிசுகள்?

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இதன்மூலம் , நாளை இவரின் பேரன் கொள்ளுப்பேரன்/பேர்த்திகளை பதவியில் உட்கார வைக்கும் முன்னேற்பாடு தெரிகிறது ஆனால், இவரின் அப்பாவின் ‘இரண்டாம் வழி’ வாரிசுக்கெல்லாம் இந்த விதி பொருந்தாது அதையும் அழுத்தமாகச் சொல்லிவிட்டார்

    • மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி

      , தயவு செய்து சீரியல் நம்பர்கள் திரிந்து பதிவிடுங்கள். யார் இரண்டாம் வழி என தெரியுமா

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement