Advertisement

முன்னோடி திட்டம் விவசாயிகளுக்கு உதவுமா?

Share

தமிழகத்தில் விவசாயிகளுக்கு மற்றொரு சாதகமாக ஒப்பந்த சாகுபடி தனிச் சட்டம் அமைவது வரவேற்கத்தக்கது. விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்கள் அல்லது கால்நடை ஒப்பந்த பண்ணையம் ஆகியவை, சிறிய நகரங்கள் உருவாகும் போது, பயன்தரும் முன்னோடியாக அமையலாம்.

காலம் காலமாக சில முன்னோடி திட்டங்கள், விவசாயிகளுக்கு அவ்வப்போது அமலானாலும், அவை அடுத்த, 20 அல்லது 30 ஆண்டுகளில் மாற்றத்திற்கு உள்ளாக வேண்டியது நியதி. ஏனெனில், அதன் பயன் அல்லது தாக்கம் அடுத்த ஆண்டுகளில் வேறுவிதமாக மாறும்.தமிழகத்தில், விவசாயிகள் நிலத்தை உழும் போது, நில உரிமையாளர்களுக்கு தரப்படும் நெல் அல்லது மற்ற பயிர்கள் குறித்த தொகை, விவசாயிகளுக்கு சாதகமாக ஏற்பட்டது, அவர்களை நிரந்தர ஏழைகள் என்ற நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு மாற்றியது.

அதில் பலர், தாங்கள் பெற்ற நிலங்களை சொந்தமாக பட்டா போட்டு, அதன் பாத்தியத்தை கொண்டாடினாலும், அவர்கள் வாரிசுகள் அத்தொழிலில் இருந்து மாற்றுத் தொழில் அல்லது அடுத்தடுத்த தலைமுறையில் அதிக உறுப்பினர்கள் வரும் போது, அந்த மொத்த பரப்பளவு சுருங்கி, கடைசியில், 5 ஏக்கர் நிலத்திற்கும் குறைவாக உள்ள பல விவசாயிகளாக மாறியது நிதர்சனம். ஆகவே, அவர்கள் கூட்டுறவு முறையில், உழவு அல்லது பயிர் பராமரிப்பு ஆகியவற்றை மேற்கொண்டு, அதற்கான செலவினங்களை பங்கு பிரித்து ஏற்பது, டெல்டா உட்பட பல மாவட்டங்கள் பின்பற்றும் முறையாகும்.

தவிரவும், நெல், கரும்பு உட்பட பல பயிர்கள் என்பதை விட மாற்றுப் பயிர்கள் பயிரிடும் காலம் இன்றைய விவசாயத்தின் முக்கிய அம்சம். மலைப் பகுதி பயிர்கள் அல்லது தென்னை, மா போன்ற தோட்டங்கள் மட்டும் அதிக ஏக்கர் பரப்பில் இருக்கலாம். அதில் ஏற்படும் விளைச்சல் அல்லது பராமரிப்பு, தினசரி பணியாக அமைவதில்லை.அதிலும் சில பணிகள், ஏக்கர் கணக்கில் அருகருகே உள்ள தோப்புகளில், அதற்குரிய வேலையாட்கள் ஒட்டுமொத்தமாக சில மாதங்கள் தொடர்ந்து பணியாற்றி, அதற்குரிய மாதத் தொகை பெறுவதும் வாடிக்கையாகி உள்ளது.

அத்துடன் பணப்பயிர், தோட்டத் தொழில் உட்பட பல உற்பத்தி பொருட்கள் அதிக அளவில் உற்பத்தியாகும் போது, அதை சில நாட்கள் பாதுகாத்து, உரிய சந்தை விலையில் விற்பதில் தொடர் பிரச்னை இருக்கிறது. இதில் தரகர்கள் அல்லது மொத்தமாக வாங்கி, அதை கூடுதல் விலைக்கு விற்கும் சூழ்நிலை சிறுகச் சிறுக மாறி வருகிறது.உதாரணமாக தக்காளி விலை அதிகரித்ததும், அதை எளிதாக பயிரிட்டு, அதனால் லாபம் பெறலாம் என, நினைக்கும் போது, கிலோ 2 ரூபாய் வரை விற்கும் அவலம் அல்லது விளைந்த தக்காளியை கால்நடைகளுக்கு உணவாக ஆக்கும் துயரம் நடக்கிறது.

இம்மாதிரி குறைகளைத் தவிர்ப்பது அவசியம் என்ற கருத்தில், உற்பத்தியாகும் விவசாய பொருட்கள் அல்லது பால் பொருட்களுக்கு உரிய விலை விவசாயிகளுக்கு கிடைக்க, அடுத்த வழி என்ன என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது. சிலவற்றிற்கும் அரசு கணிசமான ஆதரவு விலை தந்து, அரசே கொள்முதல் செய்தாலும், அது எல்லா விவசாயிகளின் துயரை முழு அளவில் குறைக்கவில்லை.காரணம் வருவாய்த்துறை மற்றும் விவசாயிகள் சங்கங்கள் செயல்படுவதில், 'வேண்டியவர்களுக்கு முன்னுரிமை அல்லது சலுகை' இன்னமும் தொடர்கிறது. அதன் அளவு குறைந்தாலும், 40 சதவீதம் விவசாயிகள் மனக்குறையுடன் உள்ளனர்.

இத்தடவை, 'தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்தப் பண்ணையம் - ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்குதல் - 2019, என்ற சட்டத்திற்கு, தற்போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததால், இதன் அமலாக்கம் தொடரும். அகில இந்திய அளவில், ஒப்பந்த சாகுபடிக்கு என, எந்த வித தனிச்சட்டம், எங்கும் அமலில் இல்லை என்பதால், தமிழகம் இதில் முன்னோடியாக நிற்கிறது. அந்தப் பகுதியில் கொள்முதல் செய்வோர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையினரால், அனுமதிக்கப்பட்ட அலுவலரிடம் பதிவு செய்யும் அணுகுமுறைகளை, இனி அரசு தெளிவு செய்யும். அதில் ஒப்பந்த அலுவலர் என்பவர் அதில் குளறுபடி அல்லது குறைகள் நேர்ந்தால், அதற்குரிய பொறுப்பை ஏற்கும் சூழ்நிலை தேவை.

இதனால், சில நிறுவனங்கள் இம்மாதிரி விவசாய பொருட்களை வாங்கும் போது, நல்ல தரத்தில், தங்கள் தேவைக்கு ஏற்ப விலை கொடுக்க வாய்ப்பு வரலாம். சில விவசாய பொருட்களை, அதன் விதைப்பு சமயத்தில் சாகுபடி முடிந்ததும் தருமாறு கேட்டு, அன்றைய தினத்தில் உள்ள விலைக்கு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.குறிப்பாக, உணவு பதப்படுத்தும் தொழிலில் இறங்கும் பட்சத்தில், உதாரணத்திற்கு தக்காளி என்பது கிலோ, 5 ரூபாய்க்கு குறைவாக இறங்காது.

அதே சமயம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தால் தடை செய்யப்பட்ட சில பொருட்களுக்கு, இச்சட்டம் பொருந்தாது. இவை பணப்பயிர்கள் சிலவற்றுக்கு பொருந்துமா என்பது, அரசு விளக்க கையேட்டில் தெரிவிக்கலாம். இத்திட்டத்தை, மாவட்டங்களில் பல்வேறு பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு உரிய முறையில் விளக்கவும், அரசியல் தலையீடு குறையவும் வழிகாட்டினால், பலன் பலருக்கு போய்ச் சேரும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement