Advertisement

குழந்தை இறப்பிற்கு காரணம் யார்?

Share

கோ.பரங்கிரிநாதன், மதுரை-யிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, சோளக்காட்டிற்கு நடுவே, ஒரு வீடு உள்ளது. சோளக்காட்டில், எப்போதோ தோண்டிய ஆழ்துளை கிணறு பயனில்லாததால், முறைப்படி மூடப்படாமல், ஏனோ தானோ என, மண்ணால் மூடியுள்ளனர். காலப்போக்கில் பெருமழை காரணமாக, மண் உள்ளே இறங்கி, துளை விழுந்து விட்டது.

அதில், 2 வயது சிறுவன் சுஜித் வில்சன் விழுந்துள்ளான். இதற்கு, யார் மூல காரணம் என, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தெரியும். தங்கள் குழந்தைகளை நேரடி கண்காணிப்பில் வைத்து பாதுகாக்க வேண்டியது, பொறுப்பான பெற்றோரின் தலையாய கடமை. அதை விட்டு, 'அவனுக்கு அவ்வளவு தான் விதி' என, பொத்தாம் பொதுவாக விதியின் மேல் பழி போட முடியுமா... மனித நல்வாழ்வுக்கென சில விதிகளை, மனிதனே சட்டம் ஆக்கியுள்ளான். உதாரணமாக, பயனற்ற ஆழ்துளை கிணறுகளை முறையாக மூடுவது, 'ஹெல்மெட்' அணிவது, மிதமான வேகத்தில் வாகனத்தை செலுத்துதல் போன்றவையே சொல்லலாம்.

மனிதன் வகுத்த விதியை பின்பற்றினால், கோள் வகுத்த விதி என்ன செய்ய முடியும். அதை மீறினால், கோள் வகுத்த விதி, 'போட்டு' தள்ளி விடும். மணப்பாறை சிறுவனுக்காக, எவ்வளவு மனித ஆற்றல், இயந்திர ஆற்றல் மற்றும் கால விரையம் செய்யப்பட்டுள்ளது. முடிவில், சிறுவனை உயிருடன் மீட்க முடிந்ததா... சிறுவனை பெற்றெடுத்த பெற்றோரே சிந்தியுங்கள். குழந்தைகள் விஷயத்தில், பொறுப்பாக நடந்து கொள்ளுங்கள். எதற்கெடுத்தாலும் அரசை குறை சொல்லக்கூடாது. குழந்தை செல்வம் இல்லாமல், எத்தனை பெற்றோர் கவலைப்பட்டு கொண்டிருக்கின்றனர். குழந்தை பெற்றால் மட்டும் போதாது; அதை, பொறுப்புடன் பேணி காத்து வளர்க்க வேண்டும். சிறு குழந்தைகள், விபத்தில் சிக்குவதற்கு, பொறுப்பற்ற பெற்றோரே காரணம்!

புரிந்து செயல்படுங்கள்!
கு.அருணாசலமூர்த்தி, கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 1984க்கு பின், முன்னாள் பிரதமர் இந்திரா மறைவை அடுத்து, 400 எம்.பி.,க்களுக்கு மேல் வெற்றி பெற்று, அசுர பலத்தில், காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. பிரதமராக, ராஜிவ் ஆண்ட காலத்தில் நடந்த, போபர்ஸ் ஊழல் விஷயத்தை, பா.ஜ., கையில் எடுத்தது. அன்றே, சரிவை நோக்கி, காங்கிரஸ் சென்றது.

கடந்த, 1991ல், ராஜிவ் படுகொலைக்கு பின், காங்கிரஸ் தலைமையில், தி.மு.க., உள்ளிட்ட மாநில கட்சிகளின் ஆதரவுடன், மத்தியில் ஆட்சி அமைத்தது. தம் கொள்கைகளை விட்டு கொடுத்து, கூட்டணி கட்சிகளுக்காக, காங்கிரஸ் வளைந்து கொடுக்க நேரிட்டது. 2014 முதல், தற்போதைய லோக்சபா தேர்தல் வரை, பா.ஜ., பலம் பெற்று, மத்தியில் பெரும்பான்மையுடன் ஆள்கிறது. ஆனால், காங்கிரசுக்கோ, 2014 மற்றும் 2019 தேர்தல்களில், எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை. இன்று, பா.ஜ., மிருக பலத்துடன் ஆட்சியில் அமர்ந்தாலும், சில மாநிலங்களில், இன்று வரை, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தான், ஆட்சி செய்து வருகிறது.

அந்த வகையில், மஹாராஷ்ரா மற்றும் ஹரியானா மாநில சட்ட சபை தேர்தல்களில், தனியாக அதிக சீட்டுகள், பா.ஜ., வென்று இருந்தாலும், கூட்டணி ஆட்சியை, குதிரை பேரம் நடத்தி தான், அமரும் சூழ்நிலை உருவாகி உள்ளது. தற்போது, காங்கிரசில் நிலவும் கோஷ்டி பூசலை தாண்டி, அதற்கு கவுரமான வெற்றி, மஹாராஷ்ராவில் கிடைத்துள்ளது; அங்கு, மீண்டும், காங்கிரஸ் புத்துணர்ச்சி பெற்று, ஆட்சி மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்கிறது. பா.ஜ.,வை பொருத்தவரை, மத்தியில் ஸ்திரமாக அமர்ந்து விட்ட பின், ஏன் ஒவ்வொரு மாநிலத்திலும், ஜாதிய கட்சிகள் மற்றும் ஊழல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என நினைக்கிறது.

'என் வழி, தனி வழி' என, ஊழலற்ற, பா.ஜ., என்ற நிலைக்கு, மஹாராஷ்ரா மாநிலத்தில் வந்து விட்டது. ஒருவேளை, மஹாராஷ்டிராவில், ஜாதிய கட்சிகள், ஊழல் கட்சிகளுடஜ் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தால், ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும். மஹாராஷ்ரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள், பா.ஜ., மற்றும் காங்கிரசுக்கு, நல்ல பாடத்தை கற்று தந்துள்ளன; அதை புரிந்து செயல்பட்டால், நாட்டுக்கு நல்லது!

அசாம் மாநில முயற்சிக்கு கை கொடுப்போம்!
பொன்.கருணாநிதி, கோட்டூர், கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: நாட்டின் மக்கள் தொகை பெருகி வருவதால், பல்வேறு பிரச்னைகளை சமாளிக்க முடியாமல், மத்திய, மாநில அரசுகள் திண்டாடுகின்றன.

மக்கள் தொகை பெருகும் விஷயத்தில், சீனாவுடன் போட்டியிட ஆரம்பித்து விட்டோம். மக்கள் தொகையை கட்டுப்படுத்த தவறினால், மிக விரைவில், சீனாவை மிஞ்சி, உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக, இந்தியா மாறி விடும். இன்று, விவசாய உற்பத்தி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளோம். இத்தருணத்தில், 'ஜனவரி ௨௦௨௧ முதல், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு, அரசுப் பணி கிடையாது' என, அசாம் மாநில அரசு அறிவித்துள்ளது; இது வரவேற்கக்கூடியது.

இரண்டு ஆண்டுகளாக, சிறிய குடும்பங்களை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்த அசாம் மாநில அரசு, தற்போது, இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்பவர்களுக்கு, அரசுப் பணி கிடையாது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த திட்டத்தை, அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும்; இது, நாட்டு நலனுக்கான திட்டம். இதை, நாடு முழுவதும் விஸ்தரிக்க, மத்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 'குடும்ப கட்டுப்பாட்டு' திட்டத்தை, அவசர நிலை கால கட்டத்தில் அமல்படுத்தியது போல, அதிரடியாக அமல்படுத்தாமல், அனைத்து தரப்பினரையும் அழைத்து பேசி, ஏக மனதாக இத்திட்டத்தை அமல்படுத்த முயற்சிக்க வேண்டும்.

இந்த முயற்சியில், மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத் துறை நிர்வாகங்கள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 'இனி, எதிர் காலத்தில் இரண்டு குழந்தைகளுக்கு, குறைவாக உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே, அரசின் நலத்திட்ட உதவிகள், மானியங்கள் வழங்கப்படும்' என, மத்திய, மாநில அரசுகள் அறிவித்தாலும் தவறில்லை!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement