Advertisement

அதிகாரிகள் இடையே நடக்கும் பனிப்போர்!

Share

''பதவி உயர்வு வாங்குறதுல, கோஷ்டி மோதல் நடக்குதாமுங்க...'' என்றபடி, பெஞ்சில் அமர்ந்தார், அந்தோணிசாமி.

''எந்த துறையில ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வுல தாங்க இந்த கூத்து... அங்கயிருக்கிற, திட்ட அதிகாரிகள் அனைவரும் தொழில்நுட்ப பிரிவாகவும், மற்ற பணிகள பார்க்கும் அதிகாரிகள், நிர்வாக பிரிவாகவும் இருக்காங்க...

''சமீபத்துல, தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த பொறியாளர்களுக்கு, 'சீனியர் பிளானர்' பதவி உயர்வுக்கு பட்டியல் தயாராச்சுங்க... நிர்வாக பிரிவு அதிகாரிகள், மேலதிகாரிகள குழப்பி, 'புரமோஷன்' வேலையை நிறுத்திட்டாங்க...

''இப்ப, நிர்வாக பிரிவுல, ஆறு பேருக்கு பதவி உயர்வு தர்றதுக்கான கோப்புகளுக்கு, சத்தமில்லாம ஒப்புதல் வாங்கிட்டாங்க... இதுல, விதிமீறல் இருக்காம்... இதனால, இரண்டு பிரிவு அதிகாரிகள் இடையில, பனிப்போரு நடக்குதுங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.

''மக்களுக்கு, மறதி இருக்கற வரைக்கும், ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கொண்டாட்டம் தான் ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு, 'லீட்' கொடுத்தார், குப்பண்ணா.

''என்ன வே, சொல்லுறீரு...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''திருப்பூர் மாவட்டத்துல, 'கலால்' பிரிவு கண்காணிப்பாளரா இருந்த தாசில்தார், குறைகேட்பு கூட்டத்துல, மனு கொடுக்க வந்த, பொம்மனாட்டி கன்னத்துல அறைஞ்சுட்டார்... அப்புறம், கலெக்டர் அலுவலக, 'ஏ' பிரிவுல இருந்த பணியாளர்களை, கண்டமேனிக்கு திட்டியிருக்கார் ஓய்...

''இந்த விவகாரம் தெரிஞ்சும், கலெக்டரு நடவடிக்கை ஏதும் எடுக்கலையாம்... கொஞ்ச நாள்ல, இந்த விஷயத்தை மக்கள் மறந்திடுவான்னு நினைச்சு, தாசில்தாரு, மாசக்கணக்குல, 'லீவு' போட்டுட்டு, வீட்டுல ஜாலியா இருக்கார் ஓய்...'' என்ற குப்பண்ணா, அவ்வழியே சென்ற ஒருவரிடம், 'என்ன முரளி, வேலைக்கு போகாம, வீட்டுலையே இருக்குறீர்...'' என, விசாரித்தார்.

குப்பண்ணா முடித்ததும், ''இந்த முறையாவது, ஏலம் போகணுமுன்னு, அதிகாரிகள் நினைக்கிறாங்க பா...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், அன்வர் பாய்.''என்ன விபரமுன்னு சொல்லுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''மதுரை மாவட்டத்துல, முறைகேடாக செயல்பட்ட, கிரானைட் குவாரிகளால், அரசுக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுச்சு... இதனால, கிரானைட் குவாரிகளுக்கு தடை விதிச்சுருக்காங்க பா...

''அரசு மற்றும் தனியார் பயன்பாட்டுக்காக, கல் குவாரிகள மட்டும், ஏலம் விடுறாங்க... இதுக்காக, 43 கல் குவாரிகளுக்கு, பிப்ரவரியில, பொது ஏலம் விட்டாங்க... அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச தொகை, அதிகமுன்னு ஏலம் சரியா போகலை... ஒரே ஒரு குவாரி மட்டும் தான் ஏலம் போச்சு பா...

''இந்நிலையில, முறைகேடு நடக்காமல் இருக்கவும், பெண்களுக்கு வாய்ப்பளிக்குற வகையிலும், மகளிர் சுய உதவி குழுவினர் ஏற்று நடத்த, டெண்டர்களை, மாவட்ட நிர்வாகம் கோரியது பா...

''ஆனால், ஒரு மகளிர் சுய உதவி குழு கூட, ஏலம் எடுக்கலை... இதனால, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுருக்கு... வேற வழியில்லாம, மீண்டும் பொது ஏலம் விட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருது... இந்த முறையாவது, குவாரிகள் ஏலம் போகணுமுன்னு, அதிகாரிகள் வேண்டுறாங்க பா...'' என, முடித்தார் அன்வர் பாய்.

நண்பர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

    நல்லது....

  • A R J U N - sennai ,இந்தியா

    .......ஆறு பேருக்கு பதவி உயர்வு .CMDA விவகாரம் என்றாலே ஊழல்தான்.ஒப்புதலுக்கு வாங்குறாங்க பாருங்கோ..அப்பா..கனவுலேகூட நெனெச்சிப்பார்க முடியாது.அடுக்கு மாடிகட்டிடத்துக்கு கோவிலம்பாக்கம் பகுதி,ECR போன்ற இடத்தில-பல லக்ஷன்கள்.முரளி மாட்டிக்குவாரா...யாருக்காண்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement