Advertisement

மதுவை ஒழித்தால் அவரே நிரந்தர முதல்வர்

Share

அ. குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாடு சுதந்திரம் அடைந்து, தமிழகத்தில், 23 ஆண்டுகளாக அமலில் இருந்த மதுவிலக்கை, 1971ல் முதல்வராக இருந்த கருணாநிதியின் தலைமையிலான, தி.மு.க., ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது.வீதி எங்கும் சாராயக் கடைகள் திறக்கப்பட்டன. அப்போதே குடிக்க ஆரம்பித்து விட்டான், தமிழன். தற்போது, குடிப்பதை மட்டுமே, முழுநேர வேலையாக நினைத்து குடித்து வருகிறான்.அன்று, முதல்வராக இருந்த கருணாநிதியால், அரசுக்கு போதிய நிதி வருவாய் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக, மதுக்கடைகள் திறக்கப்பட்டன.இன்று, அந்த வருவாய் மட்டுமே, அரசின் கஜானாவை நிரப்ப தேவைப்படுவதால், மதுக்கடைகளை மூட யோசிக்கிறது, அ.தி.மு.க., அரசு!'படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடுவேன்' எனக் கூறினார், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவர் கூறியபடி, சில ஆயிரம் கடைகள் மூடப்பட்டாலும், விற்பனை குறையவே இல்லை.அன்று, 1971ல், முதல்வராக இருந்த கருணாநிதி தலைமையிலான, தி.மு.க., அரசுக்கு, மது விற்பனையால், 26 கோடி ரூபாய் கிடைத்தது; இன்று, ஆண்டிற்கு, 30 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி விட்டது.எந்த துறையிலும், அரசு சாதனை செய்யாவிட்டாலும், ஆண்டிற்கு ஆண்டு, மது விற்பனையில் சாதனை படைத்து வருவது வருத்தம் அளிக்கிறது.நாடு முழுவதும் நடக்கும் கிரிமினல் குற்றங்களின் பின்னால், மது குடிப்பழக்கம் உள்ளது. அதிலும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் முதல், சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் வரை, மதுவால் தான் ஏற்படுகின்றன.இன்று, சில பள்ளி மாணவர்கள் முதல், கல்லுாரி பெண்கள் வரை, குடி பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். மது அருந்துவதால், பல்வேறு உடல் உபாதைகளில் சிக்கி, விரைவில் மரணம் அடைவது மட்டுமின்றி, குடும்பத்தையே கடன்காரர்களாக மாற்றி விட்டு, இறந்து விடுகின்றனர்.கடந்த ஆண்டு, தீபாவளி பண்டிகையின் போது, 325 கோடி ரூபாய்க்கு விற்ற, மது விற்பனை, இந்தாண்டில், 456 கோடி ரூபாய்க்கு விற்று, சாதனை படைத்துள்ளது. இதன் வாயிலாக, ஒவ்வொரு தமிழனுக்கும் தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது.அரசின் கஜானாவை நிரப்ப, பல கோடி மக்கள் கஜானாவை கொள்ளையடிப்பது, எந்த விதத்தில் நியாயம்...மது அரக்கனை, யார் ஒருவர் முழுமையாக அழிக்கின்றாரோ, அவர் தான், உண்மையான மக்கள் முதல்வர் ஆக இருக்க முடியும்!lll

தமிழக எம்.பி.,க்கள்ஒருமித்த குரல்எழுப்பணும்!
கே.சூர்யா, பொள்ளாச்சி, கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: உலகில் திருக்குறளை போல், வாழ்க்கை நெறியை வலியுறுத்தும், வேறு நுால் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. இல்வாழ்க்கை துவங்கி, அரசியல் வரை, இதில் இல்லாத கருத்துகளே இல்லை.மற்ற மாநிலத்தவர், திருக்குறளை, தங்கள் தாய்மொழியில் மொழி மாற்றம் செய்து படித்தால், நிச்சயம், இதன் பெருமையை உணர்ந்து, ஒப்புக் கொள்வர். உலகின் பல்வேறு நாட்டு பல்கலைகள் கூட, திருக்குறளின் பெருமையை உணர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.'இந்தியாவின் முதன் மை நுாலாக திருக்குறளை அறிவிக்க வேண்டும்' என தஞ்சை தமிழ் பல்கலையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழ்ப் பண்பாட்டு துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் பேசியுள்ளார்; இது அரசின் கோரிக்கை அல்ல; ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கை!எவ்வித பொருளாதார செலவும் இல்லாத, அமைச்சரின் கோரிக்கையை, பிரதமர் மோடி பரிசீலித்து, திருக்குறளை, இந்தியாவின் முதன்மை நுாலாக அறிவித்தால், அது தமிழகத்திற்கு மட்டுமல்ல; இந்தியாவிற்கே பெருமையாக இருக்கும்.

அமைச்சரின் நியாயமான இந்த கோரிக்கையை, விரைவில் நிறைவேற, வரவிருக்கும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், தமிழக எம்.பி.,க்கள் ஒருமித்த குரல் எழுப்ப வேண்டும்.என்றாவது ஒருநாள், திருக்குறளின் பெருமையை, 'யுனெஸ்கோ' உணர்ந்து, நிச்சயம் உலக நுாலாகவே அங்கீகரிக்க தான் போகிறது. அதற்கும், மத்திய அரசு முதன்மை நுாலாக திருக்குறளை ஏற்று அறிவிக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோள்.அமைச்சர் பாண்டியராஜன் நியாயமான கோரிக்கையை, மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்!

பிஞ்சு குழந்தைகள்உயிரிழப்பைதடுக்க முடியும்!
எஸ்.மதுரைவீரன், திண்டுக்கல்லிலிருந்து எழுதுகிறார்: ஆழ்துளை கிணறுகளால், இதுவரை எத்தனையோ சிறுவர், சிறுமியர் காவு வாங்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், ௨௦௧௩, மார்ச் ௨௭ல், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே, சூரியபாலி என்ற ஊரில், 7 வயது சிறுமி முத்துலட்சுமி, ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார்.சிறுமியை காப்பாற்ற, 15 மணி நேரம் போராடியும், இறந்து விட்டாள்.

இதுபோன்ற துரதிர்ஷ்ட சம்பவங்கள், இனியும் நடைபெறாமல் இருக்க, கீழ்க்கண்ட நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.l தங்களுக்கு தேவையான ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டுமெனில், முதல் கட்டமாக, அந்த பகுதி பஞ்சாயத்து அலுவலரிடம் மனுவை கொடுத்து, ஒப்புதல் பெற வேண்டும்l அதற்கான, அரசு ஒப்புதல் அளித்த முத்திரை பதிக்கப்பட்ட ஆவணம் பெற வேண்டும்l ஒப்புதல் வாங்கும் மனுவில், ஆழ்துளை கிணற்றின் சுற்றளவின் அளவு அறிக்கையை, பயனாளிகள் குறிப்பிட வேண்டும்l
அதன் பின், பயனாளிகளிமிருந்து மனுவை பெற்ற அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று, முதற்கட்ட பார்வையிட வேண்டும். அதற்கு பின்னரே, ஆழ்துளை பணிகளுக்கான ஒப்புதல் ஆவணம் அளிக்க வேண்டும்l
அவ்வாறு ஒப்புதல் ஆவணம் பெற்ற பயனாளிகள், ஆழ்துளை கிணற்றில், எத்தனை அடிகள் போட்டுள்ளனர் என்பதை பற்றியும், தண்ணீர் கிடைத்ததா, இல்லையா என்பது பற்றியும், மீண்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும்l
ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் கிடைக்கவில்லை எனில், அதை பயனாளிகள் செய்த செலவில், ஒரு சிறு தொகையை செலவு செய்து, ஆழ்துளையை மூட வேண்டும்l ஆழ்துளை கிணற்றை வெறும் மண்ணால் போட்டு மூடக்கூடாது. கிணற்று சரலை மண் மற்றும் ஜல்லிக்கற்களை பயன்படுத்தி, எத்தனை அடி ஆழமோ, அத்தனை அடிக்கு போட்டு, சரியான முறையில் மூட வேண்டும். ஆழ்துளை கிணற்றில், ௧1 அல்லது, 7 அடி உயரத்திற்கு மேல் பகுதியில், ஜல்லிக்கற்கள் கலந்த சிமென்ட் கலவையிட்டு மூட வேண்டும்.மேற்கண்டவாறு சட்ட திட்டங்களை மதித்து, பொதுமக்கள் கடைபிடித்தால், மணப்பாறையில் நடந்த துயர சம்பவம் போல், குழந்தைகள் உயிரிழப்பை தடுக்கலாம்.
அப்பாவிகளை தண்டிப்பது நியாயமா டாக்டர்களே
பா.-விஜய், பால்ஸ் சர்ச், வெர்ஜீனியா, அமெரிக்காவிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
பல ஆண்டுகளுக்கு முன், ஜப்பானில் ஒரு காலணி தொழிற்சாலையில் போராடிய தொழிலாளர்கள், ஒரு கால் செருப்பை மட்டும் தயாரித்து, தங்கள் எதிர்ப்பை நிர்வாகத்திற்கு வெளிக்காட்டினர்.அதே ஜப்பானில், கடந்த ஆண்டு போராடிய போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள், மிகச் சரியான நேரத்திற்கு, பஸ்களை இயக்கி, பயணியருக்கு, எந்தப் பங்கமும் ஏற்படாமல் பார்த்து கொண்டனர். பயணியரிடமிருந்து கட்டணமே வசூலிக்காமல், நிர்வாகத்திற்கு நெருக்கடி கொடுத்தனர்; அதனால் தான், அந்த நாடுகளெல்லாம் வல்லரசாக வலம் வருகின்றன.நாம் இன்னும் திருந்தியபாடில்லை... தமிழகத்தில், டாக்டர்கள் போராட்டம் நடத்தும் இவ்வளவு இன்னலை, மக்கள் வாழ்நாளில் சந்தித்ததில்லை.'டெங்கு' என்ற அரக்க நோய், சிறுவர்களில் துவங்கி, நீதிபதி வரை, பல பேரை பலி வாங்கி பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. மக்களை வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் டாக்டர்கள், 'ஸ்டிரைக்' செய்வதை, எப்படி ஏற்றுக் கொள்வது...

இது, போராட்டம் நடத்தும் தருணமா என்பதை, மெத்தப்படித்தோர் எண்ணிப் பார்க்க வேண்டாமா...சில ஆயிரம் ரூபாய் அதிக வருமானத்திற்காக, அப்பாவி ஏழைகளின் உயிருடன் விளையாடுவது, எந்த விதத்திலும் நியாயமில்லையே!'எந்த அரசு டாக்டரும், தனியாக கிளினிக் நடத்தக்கூடாது' என்ற சட்டத்தை மதிக்கின்றனரா அல்லது தனியார் மருத்துவமனைகளின் கட்டணத்திற்கென்று ஏதாவது வரைமுறை தான் உள்ளதா...இரக்கமுள்ள டாக்டர்கள், இன்னமும் இனாமாகவும், மிகக்குறைந்த கட்டணத்தில் சேவை புரிவதையும் மறுப்பதற்கில்லை. ஆனால், கடலில் கரைத்த பெருங்காயம் போல, இருந்த அவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
டாக்டர்கள் நடத்தும் போராட்டத்தை காவல் துறையினர் காக்கின்றனர்; மக்களும் பொறுமை காட்டுகின்றனர். ஆனால், எல்லாவற்றுக்கும் ஒரு வரம்பு உண்டு. வரம்பை மீறும் போது, மக்கள் களத்தில் இறங்கினால், டாக்டர்களின் நிலைமை தர்ம சங்கடமாகி விடும்.நீராதாரங்களை செப்பனிட குதித்த இளைஞர்களும், ஜல்லிக்கட்டுக்காக போராடியோரும் நம்மிடையே தான் உள்ளனர். நியாயங்களுக்காக, அமைதியாக போராட, இளைஞர்கள் தயங்கியதில்லை. அமைதிப் பூங்காவாகவே, தமிழகத்தை இருக்க விடுங்கள்!lll

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement