Advertisement

டவுட் தனபாலு

Share

புதுச்சேரி காங்., முதல்வர் நாராயணசாமி: தேர்தல் பிரசாரத்தின்போது, மோட்டார் பைக்கில் சென்ற நான், 'ஹெல்மெட்' போடவில்லை என, என் மீது வழக்கு போட, கவர்னர் கிரண் பேடி சொல்கிறார். தேர்தல் விதிமுறைப்படி, முகத்தை மூடியபடி, ஹெல்மெட் அணிந்தபடி செல்லக்கூடாது. இதை அறியாத கிரண் பேடி, மக்கள் நலத்திட்டங்களை தடுக்கும் பேய்!

'டவுட்' தனபாலு: பேயைக் கண்டால், எல்லாருக்கும் பயம் வரத் தான் செய்யும். அதுவும் நீங்கள் ஹெல்மெட் போடாமல், பேயை பார்த்துள்ளீர்கள்; பயம் கொஞ்சம் அதிகமாகத் தான் இருக்கும். எப்படியோ, வட மாநில பேய்க்கு தான் நீங்கள் அஞ்சுவீர்கள் என்பது, 'டவுட்'டே இல்லாமல், புதுச்சேரி மக்களுக்கு புரிந்து விட்டது.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: லோக்சபா தேர்தலில், மிட்டாய் கொடுத்து, தி.மு.க., ஏமாற்றி விட்டது என, அ.தி.மு.க.,வினர் கூறினர். இப்போது, இரண்டு இடைத்தேர்தலில், நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். நீங்கள், அல்வா கொடுத்தீர்களா... வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து, இந்த வெற்றியை பெற்றுள்ளனர்; அது நீடிக்காது. வரவிருக்கும் தேர்தலில், தி.மு.க., மிகப்பெரிய வெற்றியை பெறும்.

'டவுட்' தனபாலு: 'மிட்டாய் கொடுப்பதும், அல்வா கொடுப்பதும், திராவிட கட்சிகளுக்கு கைவந்த கலை என்பது தமிழக மக்கள் அறிந்ததே. எப்படியோ, தேர்தல்களில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து தான், வெற்றி பெறுகிறீர்கள் என்பதை மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளீர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு பின் வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலுக்கும், காசை விட்டெறிய தயாராகி விட்டீர்களோ என்பதே என், 'டவுட்!'


பத்திரிகை செய்தி: சென்னை, மெரினாவில், எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில், ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க, 58 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. அந்த நிதியில், 'பீனிக்ஸ்' பறவை வடிவிலான நினைவிடம் கட்டப்படுகிறது. முதல்வர், இ.பி.எஸ்., பணிகளை ஆய்வு செய்தார். பொதுப்பணி துறை அதிகாரிகள், 'டிசம்பர் இறுதிக்குள், கட்டுமான பணிகள் முழுமை பெறும்' என, முதல்வரிடம் உறுதியளித்தனர்.

'டவுட்' தனபாலு: தமிழக அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும் எதிர்க்கும், தி.மு.க., - ஜெ., நினைவிடம் கட்டுவதில், பெரிய அளவில் எந்த சட்ட சிக்கலையும் எழுப்பாதது ஆச்சரியம் அளிக்கிறது. இந்த விவகாரத்தில், இரண்டு கட்சிகளுக்கும் இடையே, மறைமுக ஒப்பந்தம் ஏதும் உள்ளதோ என்பதே என், 'டவுட்!'


தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: பணிக்கு திரும்பிய அரசு டாக்டர்கள் அனைவருக்கும், முதல்வர், இ.பி.எஸ்., சார்பில் நன்றி. போராட்டத்தில் டாக்டர்கள் ஈடுபட்டிருந்த போது, அரசால் அறிவிக்கப்பட்டிருந்த, பணிமுறிவு உத்தரவு, திரும்ப பெறப்படுகிறது. அரசு டாக்டர்களின் நியாயமான கோரிக்கையை, அரசு கனிவுடன் பரிசீலிக்கும்.

'டவுட்' தனபாலு: போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ள டாக்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நீங்கள், போராட்டத்தால், ஒரு வாரம் பாதிப்பை அனுபவித்த மக்களுக்கு எதுவுமே சொல்லலையே ஏன்? இப்போதும், சம்பள உயர்வு ஏதும் அறிவிக்காமலே, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளீர்கள். நடுக்காட்டுப்பட்டி சோகம் நடக்கவில்லை என்றால், முன்கூட்டியே போராட்டம் முடித்து வைக்கப்பட்டிருக்குமோ... 'டவுட்' சரி தானா?

தமிழக காங்., தலைவர் அழகிரி: நாடு சுதந்திரம் அடைந்த பின், மொழி வாரியாக மாநிலங்களை பிரிக்க எடுத்த முடிவின்படி, 1956 நவ.,1ல், சென்னை மாகாணமாக இருந்தது, 'தமிழ்நாடு' என, உருவானது. இந்த நாளை, 'தமிழ்நாடு நாள்' என, பள்ளி, கல்லுாரிகளில் கொண்டாடுவது என, தமிழக அரசு முடிவு செய்துள்ளதை வரவேற்கிறேன்.

'டவுட்' தனபாலு: அப்பாடா... தமிழக அரசுக்கு நீங்கள் வரவேற்பு தெரிவிப்பது அதிசயமாக இருக்கிறது. உங்கள் கூட்டணியின் முக்கிய கட்சியான, தி.மு.க., ஐந்து முறையும், உங்களின் காங்கிரஸ் கட்சி, ஐந்து முறையும் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த போதும், இந்த நாளை கொண்டாடாதது ஏனோ என்ற, 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க!

தமிழக, தமிழ், பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன்: ஜெர்மனி நாட்டின் அருங்காட்சியகத்தில் வைக்க, திருவள்ளுவர் சிலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு அருங்காட்சியகங்களில், திருவள்ளுவர் சிலையை வைப்பதால், அந்நாட்டினர், திருவள்ளுவர் மற்றும் திருக்குறளின் பெருமையை அறிவதுடன், நம் சிற்பக்கலை சிறப்பையும் தெரிந்து கொள்வர்.

'டவுட்' தனபாலு: வெளிநாட்டு அருங்காட்சியகங்களில், திருவள்ளுவர் சிலை வைப்பது மகிழ்ச்சியே. அண்டை மாநிலமான பெங்களூரில், கடும் எதிர்ப்புக்குப் பின், நேற்று தான், தி.மு.க., சார்பில் சிலை வைக்கப்பட்டது. உ.பி.,யின் வாரணாசியில் வைக்கப்பட்ட சிலை, எப்படி இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா என்பதே என், 'டவுட்!'

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • S.V.SRINIVASAN - Chennai,இந்தியா

    M G R நினைவிடத்திற்கு அருகில் ஜெயலலிதவிர்க்க நினைவிடம் அமைப்பதை தி மு க எதிர்க்காமல் இருப்பதற்கு காரணம் வெளிப்படை. அடுத்ததாக அமைந்துள்ள கருணாநிதியின் சமாதியில் நினைவிடம் அமைக்க சுடாலின் அரசுக்கு மனு போடுவார். அதுதான் ரகசியம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement