Advertisement

நையாண்டி பேச்சு: கலெக்டர் செம கடுப்பு

கலெக்டர் ராஜாமணி தலைமையில், விவசாயிகள் குறைதீர் கூட்டம், கோவையில் நடந்தது. இதில் பங்கேற்ற விவசாயிகள் சங்க பிரதிநிதி ஒருவர், அரசு மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் திட்டத்தை, நையாண்டி செய்யும் வகையில், 'அய்யா, மடியை பிடித்து, மாங்காயை போட்டு விட்டு...' என ஆரம்பித்து, 'இந்த தெனாலிராமன் குதிரை போல...' என பேசினார்.

கடுப்பான கலெக்டர், 'இதோ பாருங்க... விவசாய சங்க பிரதிநிதி, சிலேடையாக பேசுவதாக இருந்தால், நானும் ரொம்ப நல்லா பேசுவேன். இது, அதற்கான இடமும் அல்ல; நான் அதற்கான ஆளும் அல்ல. நீங்கள் நினைத்ததை பேசும் மேடையும் இதுவல்ல. நியாயமான குறை இருந்தால், பேசுங்கள்; தீர்வு காணலாம். அதை விட்டு, 'மைக்' கிடைத்து விட்டது என்பதற்காக, நினைத்ததை எல்லாம் பேசக்கூடாது' என்றார்.

'சாரி ஐயா... ஆதங்கத்தில் பேசி விட்டேன். மன்னித்து விடுங்கள்' எனக் கூறி, விவசாயிகள் சங்க பிரதிநிதி, 'ஜகா' வாங்கினார். இதைக் கண்ட அலுவலர் ஒருவர், 'இப்படி கலெக்டர் கண்டிப்பான முறையில் பேசினால் தான், எதுவும் அரசியல் கலப்பு இல்லாமல் நடக்கும் போல...' எனக்கூற, மற்ற விவசாயிகள் அதை ஆமோதித்து தலையசைத்தனர்.

அதிமுகவை நேரடியாக விமர்சிக்கிறாரே
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், திருப்பூர் வந்தார். அங்கு நிருபர்களிடம் அவர், 'ஒரு வழக்கில், கோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கப்படும் என, தமிழக அரசு மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது; இது கண்டனத்துக்குரியது. இது, ஆக்கிரமிப்பாளர்களை அரசே, அங்கீகரித்தது போல ஆகி விடும். ஆக்கிரமிப்பாளர் பெரும்பாலானோர், அரசியல் கட்சியினர். அவர்களை திருப்திப்படுத்த முயல்கிறது, அரசு; உள்ளாட்சி தேர்தலை கணக்கில் வைத்து, 'அரசியல்' நடத்தும் முயற்சியாகவும், இதை கருத வேண்டியுள்ளது.'
ஏற்கனவே, கோவில்களுக்கு சொந்தமான, 5.25 லட்சம் ஏக்கர் நிலங்களில், 1 லட்சம் ஏக்கர் காணாமல் போய் உள்ளது. இந்த ஆணையை ரத்து செய்ய கோரி, மாவட்டம்தோறும், கலெக்டரிடம், ஆட்சேபனை மனு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யாவிட்டால், பக்தர்களுடன் சேர்ந்து, ஆர்ப்பாட்டம் நடத்துவோம்' என்றார்.

மூத்த நிருபர் ஒருவர், 'அ.தி.மு.க.,வை நேரடியாகவே விமர்சிக்கிறாரே...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் அதை ஆமோதித்தனர்.

விரைவில் உள்ளாட்சி தேர்தலா?

தர்மபுரி மாவட்டம், அரூரில், உள்ளாட்சி தேர்தல் குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற, உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், 'உள்ளாட்சி தேர்தல் கண்டிப்பாக டிசம்பரில் நடக்கும். இதில், அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற, கட்சியினர் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். உள்ளாட்சி தேர்தலில், கட்சி அறிவிக்கும் வேட்பாளருக்கு எதிராக, யாரும் போட்டியிடக் கூடாது.

'மக்களிடம் சென்று அவர்கள் பிரச்னைகளை கேட்டறிந்து, அவற்றை தீர்க்க கட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், உள்ளாட்சி தேர்தலுக்கு மக்களிடம் சென்று ஓட்டு கேட்க முடியும்' என்றார்.

அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர், 'விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சந்தோஷத்தில், டிசம்பரில் உள்ளாட்சி தேர்தல் நடக்குமுன்னு உறுதியா சொல்றாரே... அப்படியே, தேதியையும் சொல்லிட்டா நல்லா இருக்கும்' எனக் கூற, தொண்டர்களும், 'ஆமாம்... அப்ப தானே நாம வேலை செய்ய தயாராக முடியும்...' என்று கூறி கலைந்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement