Advertisement

நிவாரணத்திலும் கமிஷன் அடித்த காங். புள்ளிகள்

Share

''விவசாயிகள் மடியில கை வச்சிடுதாவ வே...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார், பெரியசாமி அண்ணாச்சி. ''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''நீலகிரியில, நிறைய தேயிலை தோட்டங்கள் இருக்குல்லா... விவசாயிகள் விளைவிச்ச தேயிலையை, தனியார் தொழிற்சாலைகள் வாங்கும்... முன்னாடி, 1 கிலோ பசுந்தேயிலைக்கு, 22 ரூபாய் குடுத்தவங்க, இப்ப, 12 ரூபாய் தான் குடுக்காவ வே...

''இதுக்கு காரணம், லோக்கல் ஆளுங்கட்சியினர் தான்... தீபாவளி முடிஞ்சும், அவங்க வசூல் வேட்டை நடத்திட்டு இருக்கிறதால, தனியார் தொழிற்சாலைகள், அதை ஈடுகட்ட, விவசாயிகள் தலையில கை வைக்குன்னு சொல்லுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''கடைசி நேரத்துல, தப்பிச்சிட்டாங்க பா...'' என, புதிய மேட்டரை ஆரம்பித்தார், அன்வர்பாய்.'
'யார்னு விபரமா சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க, திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய் கண்டிகையில, புதிய நீர்த்தேக்கம் கட்டுற பணிகள் நடந்துட்டு இருக்கு... 2013ம் வருஷம் துவங்கிய வேலையை, கான்ட்ராக்டர் இன்னும் முடிக்கலை பா...

''இதனால, இந்த வருஷம் நல்லா மழை பெய்தும், தண்ணீரை தேக்க முடியாம போயிடுச்சு... நீர்த்தேக்க பணிகளை, தீபாவளி அன்னைக்கு, தலைமைச் செயலர் சண்முகம் நேர்ல பார்க்க வர்றதா, பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கும், கான்ட்ராக்டர் தரப்புக்கும் தகவல் வந்திருக்கு பா...

''அவங்களும், தீபாவளி கூட கொண்டாடாம, காலையில இருந்தே, அங்க காத்துட்டு இருந்திருக்காங்க... ஆனா, அன்னைக்கு சிறுவன் சுஜீத் மீட்பு பணிகள் தீவிரமா நடந்துட்டு இருந்ததால, கடைசி நேரத்துல, தலைமைச் செயலர், ஆய்வை ரத்து பண்ணிட்டார்... அப்புறமா, எல்லாரும் நிம்மதியா வீடு போய் சேர்ந்திருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''நிவாரணத்துலயும் கமிஷன் அடிச்சின்ட்டா ஓய்...'' எனச் சிரித்த குப்பண்ணாவே தொடர்ந்தார்...''தஞ்சை மாவட்டம், பாபநாசத்தைச் சேர்ந்தவர், ஸ்ரீராம்... பட்டுக்கோட்டை ரயில் நிலையத்துல, ஒப்பந்த அடிப்படையில, துப்புரவு ஊழயரா வேலை பார்த்தார் ஓய்... ''போன வருஷம் அடிச்ச, 'கஜா' புயல்ல, ரயில்வே ஸ்டேஷன் தகர ஷீட் தலையில விழுந்து, இறந்து போயிட்டார்... இவருக்கு, தமிழக காங்கிரஸ் சார்புல, 1 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிச்சா ஓய்...

''பல மாத இழுபறிக்கு அப்பறம், சமீபத்துல தான், ஸ்ரீராமின் அம்மாவிடம், 'செக்'கை குடுத்திருக்கா... அதுக்கு முன்னாடி, மாவட்ட காங்., நிர்வாகி கேட்டதா, வட்டார நிர்வாகி ஒருத்தர், 20 ஆயிரம் ரூபாயை வசூல் பண்ணிட்டார் ஓய்...

''அந்தம்மாவும் கஷ்டப்பட்டு, கடன் வாங்கி, 20 ஆயிரத்தை குடுத்து, 'செக்'கை வாங்கியிருக்கு... மாவட்ட நிர்வாகியோ, 'நான் கமிஷன் எதுவும் வாங்கலை'ன்னு சொல்றார்... இதனால, அவருக்கு எதிர் கோஷ்டி, ஸ்ரீராமின் தாய் வாக்குமூலத்தை, வீடியோவா பதிவு பண்ணி, தலைமைக்கு அனுப்பிடுத்து ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.

ஒலித்த போனை எடுத்த அந்தோணிசாமி, ''சொல்லுங்க... எனக்கென்னவோ, கண்ணனும், லோகநாதனும் சொல்றது, நம்புற மாதிரி இல்லைங்க...'' என, பேசியபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.


மனை அனுமதிக்கு மானாவாரியாக வசூலித்த அதிகாரி
''ஒருவழியா கல்லா பெட்டியை திறந்துட்டாங்க பா...'' என, டீயை உறிஞ்சியபடியே, வாயை திறந்தார், அன்வர்பாய்.'
'எந்தக் கடையிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''நான் சொல்ல வந்தது, தே.மு.தி.க.,வைப் பத்தி... அந்தக் கட்சியின் பொருளாளரா பிரேமலதா வந்ததும், யாருக்கும் பண உதவி செய்றது இல்லைன்னு, சமீபத்துல பேசியிருந்தோமே பா...

''இதைப் படிச்ச பல ஊர் கட்சியினரும், 'வாஸ்தவம் தானே'ன்னு தங்களுக்குள்ள முணுமுணுக்க ஆரம்பிச்சுட்டாங்க... இதனால, சுதாரிச்ச பிரேமலதா, சமீபத்துல, போர்வெல் குழியில விழுந்து, இறந்து போன சுஜீத் வில்சன் குடும்பத்துக்கு, வீடு தேடிப் போய், 1 லட்சம் ரூபாய் நிவாரணம் குடுத்துட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''ஆர்வக் கோளாறுல பேனர்களை ரெடி பண்ணிட்டாவ வே...'' என, அடுத்த தகவலுக்கு சென்றார், அண்ணாச்சி.

''கண்டிப்பா, கட்சிக்காராளா தான் இருக்கும்... விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''தேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்துக்கு போறதுக்காக, முதல்வர், இ.பி.எஸ்., முதல் நாள் ராத்திரியே, மதுரை வந்து, நட்சத்திர ஓட்டல்ல தங்கியிருந்தாரு வே...

''அவரை வரவேற்க, வழக்கம் போல, மதுரை அ.தி.மு.க., நிர்வாகிகள், தடபுடல் ஏற்பாடுகளை செஞ்சிருந்தாவ... பழக்க தோஷத்துல, பிளெக்ஸ் பேனர்களையும் தயார் பண்ணிட்டாவ வே...

''ஆனா, முதல்வர் தரப்புல இருந்து, 'ஒரு பேனர் கூட இருக்கக் கூடாது'ன்னு உத்தரவு வந்துட்டு... அதனால, பேனர்களை எல்லாம், நிர்வாகிகள் திருப்பி எடுத்துட்டு போயிட்டாவ... ஆனாலும், வழிநெடுக, அ.தி.மு.க., கொடி, வாழை மரங்களை கட்டி, முதல்வரை அசத்திட்டாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''வசூல் வேட்டையில தீவிரமா இருக்காருங்க...'' என, கடைசி தகவலுக்கு சென்றார், அந்தோணிசாமி.'
'எந்தத் துறையில, யாரைச் சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.'
'கோவை மாவட்டம், அன்னுார் பேரூராட்சியில, வீட்டு மனைகள் விற்பனை ஜரூரா நடக்குதுங்க... அங்கீகாரம் இல்லாத அல்லது வில்லங்கம் இருக்கிற மனைகளுக்கு, பேரூராட்சியில அனுமதி கேட்டா, அங்க இருக்கிற ஒரு அதிகாரி, 25ல இருந்து, 30 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வசூலிக்கிறாருங்க...

''இதே, 'லே அவுட் புரமோட்டர்கள்' அனுமதி கேட்டு வந்தா, லட்சக்கணக்குல வசூலிக்கிறாருங்க... இதனால, எல்லாரும் நொந்து போயிருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''செந்தில்குமார் போறார் பாருங்க... பாக்கி தரணும்னு சொன்னீங்களே பா...'' என, நாயரை, 'அலர்ட்' செய்தபடியே, அன்வர்பாய் நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • A R J U N - sennai ,இந்தியா

    ..ஒரு அதிகாரி, 25ல இருந்து, 30 ஆயிரம்..ஒரு பெண் அதிகாரி இப்படி வாங்கியதற்கு மாட்டி இருக்கிறார்.இன்னுமா இனி திருந்திடுவார்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement