Advertisement

கோவில் சொத்துகளை மோசடி செய்யும் அரசு!

Share

தமிழகத்தில், இது நாள் வரை, கோவில் நிலங்கள், சிறுகச் சிறுக கபளீகரம் செய்யப்பட்டு வந்தன. கடந்த, 1986ல், 5.25 லட்சம் ஏக்கராக இருந்த கோவில்,கட்டளை நிலங்களில், தற்போது, 4.75 லட்சம் ஏக்கர் தான் இருக்கிறது. இந்த கபளீகரத்தை துரிதப்படுத்தும் விதமாக, அ.தி.மு.க., அரசின் நடவடிக்கை இருக்கிறது.கோவில் நிலங்கள், ஹிந்து மதத்தின், ஹிந்துக்களின் சொத்தில் ஒரு பகுதி. அவற்றை, சட்டம் வலுவாக பாதுகாக்கிறது. அறநிலைய துறை சட்டத்தின், 34வது பிரிவு, கோவில், கட்டளை நிலங்களை விற்பதற்கான விதிமுறைகளை வகுக்கிறது.அதன்படி, மிக அத்தியாவசியம் என்ற நிலையில் தான், கோவில் நிலங்களை விற்பனை செய்யலாம்.
நல்ல விலை கிடைக்கிறது அல்லது நிலத்தில் இருந்து வருமானம் இல்லை என்ற காரணங்களுக்காக, அவற்றை விற்பனை செய்யக்கூடாது. உச்ச நீதிமன்றத்தின், ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வும் இதை உறுதி செய்துள்ளது.அதுபோல, அரசு திட்டங்களை செயல்படுத்துவதற்கும், கோவில் நிலங்களை அலட்சியமாக கையகப்படுத்தவும், சட்டம் அனுமதிக்கவில்லை.இது குறித்து, செப்., 24, ௧௯84 தேதியிட்ட வருவாய்த் துறை அரசாணை எண், 1,630 தெளிவாக குறிப்பிடுகிறது. கடந்த ஜன., 9, 2009 அன்று, சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பும், இதை உறுதிப்படுத்துகிறது.அதன்படி, ஹிந்து சமய நிறுவனங்களின் நிலங்களை, கடைசி பட்சமாகத் தான் கையகப்படுத்த வேண்டும். அதாவது, வேறு வழியே இல்லை என்ற நிலையில் தான், இந்த நிலங்களை கையகப்படுத்த வேண்டும்.கோவில் நிலங்களுக்கு, சட்டம் வலுவான பாதுகாப்பு கொடுக்கிறது. ஆனால், அரசு என்ன செய்கிறது?பஸ் ஸ்டாண்டு, பஸ் பணிமனை, துணை மின் நிலையம், அரசு அலுவலகங்கள் என, எதை கட்ட வேண்டுமானாலும், முதல் தேர்வாக, கோவில் நிலத்தில் தான் கை வைக்கிறது.அதுவும், முழு அளவில், முறைகேடாகத் தான். அதற்கு சிறந்த உதாரணம், சென்னை, புரசைவாக்கத்தில், மெட்ரோ ரயில் திட்டத்திற்காக கோவில் நிலம் கையகப்படுத்தப்பட்டது தான்.ஹிந்து சமய அறநிலைய துறை ஆணையர், மார்ச் 4, 2014 அன்று, தினசரி பத்திரிகை ஒன்றில் விளம்பரம் வெளியிட்டார். அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:


மெட்ரோ ரயில்புரசைவாக்கம் பிளாக், 2ல், சென்னை, எழும்பூர், ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 17 ஆயிரம் சதுர அடி சொத்தை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுள்ளது, அதற்கு, 41.96 கோடி ரூபாய் விலை நிர்ணயம் செய்துள்ளது; அரசும் அதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது. ஆட்சேபனை இருந்தால், அறநிலையத் துறை சட்டம் பிரிவு, 34ன் கீழ், ஏப்ரல், 16, 2014 அன்று ஆணையரிடம் தெரிவிக்கலாம்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.குறிப்பிட்ட நாளில், பலரும் ஆட்சேபனை தெரிவித்தனர். அந்த எதிர்ப்புகளுக்கு, அறநிலையத் துறை ஆணையர் எந்த மதிப்பும் கொடுக்கவில்லை.எப்படி கொடுப்பார்; அந்த, 17 ஆயிரம் சதுர அடி சொத்தை, மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு, 2011ம் ஆண்டே, தமிழக அரசு கொடுத்து விட்டது. அந்த நிறுவனமும், அப்போதே கட்டுமான வேலையை தொடங்கி விட்டது.மேலும், செப்., 2013லேயே, அந்த நிலத்திற்கான பணத்தையும், மெட்ரோ ரயில் நிறுவனம், அரசுக்கு கொடுத்து விட்டது. பின், எதற்காக இந்த விளம்பரம்; எதற்காக, ஆட்சேபனை பெறுவது போல் நாடகம்?சட்டப்படி தான், அரசு நடந்து கொள்கிறது என, ஊரை ஏமாற்றவே, அந்த விளம்பரம் செய்யப்பட்டது. அந்த நிலத்தை, எப்படி முறைகேடாக கை மாற்றியதோ, அப்படித்தான், அநேக கோவில் சொத்துக்களையும், அரசு கைமாற்றிஉள்ளது.அரசு ஏன் இப்படி செய்ய வேண்டும்?அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும், இதில் பல லாபங்கள் உள்ளன. முதலில், அரசு பாதுகாப்பு மற்றும் அரசு நிர்வாக கட்டுப்பாட்டில் இந்த சொத்துக்கள் உள்ளன. அதனால், எதிர்த்து பேச ஆள் கிடையாது. அப்படி பேசினாலும், அலட்சியப்படுத்திக் கொள்ளலாம்; காதும் காதும் வைத்த மாதிரி, காரியத்தை முடிக்கலாம்.இரண்டாவது, விலையை தாங்களே முடிவு செய்து கொள்ளலாம். மூன்றாவது, விதிமுறைகளை பின்பற்றுவதை, சாவகாசமாக செய்து கொள்ளலாம்.விற்பவரின் இடத்திலும், வாங்குபவரின் இடத்திலும், அரசே இருப்பதால், அவர்களுக்கு மிகவும் சவுகரியமாகப் போகிறது. ஆனால் இது, ஹிந்து மதத்தினருக்கு எதிரான நம்பிக்கை மோசடியே தவிர, வேறு ஏதுமில்லை.இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள், 405, 409ன் கீழ் இவை, குற்றவியல் நம்பிக்கை துரோகங்கள். அதாவது, சிறை தண்டனை விதிக்கப்படக் கூடிய, 'கிரிமினல்' குற்றங்கள்!தம் உபயோகத்திற்காகவோ அல்லது சட்டத்தில் சொல்லப்பட்ட வழிமுறைக்கு விரோதமாகவோ, தம் பொறுப்பில் உள்ள சொத்தை, அரசு ஊழியர் பராதீனம் செய்தால், அவருக்கு ஆயுள் தண்டனை வரை விதிக்க, இந்திய தண்டனை சட்டம் வகை செய்கிறது.ஆனால், இதுவரை நாம் குறிப்பிட்ட, அறநிலைய துறை சட்டம், இந்திய தண்டனை சட்டம், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு, உச்ச நீதிமன்ற தீர்ப்பு, வருவாய் துறை அரசாணை போன்ற எல்லாவற்றிற்கும் மேலாக, ஹிந்து சமுதாயத்தின் நலன் என, எதைப் பற்றியும், தமிழக அரசு கவலைப்படுவதாக தெரியவில்லை.அப்படி, தமிழக அரசு கவலை பட்டிருந்தால், நவ., 2, 2018 தேதியிட்ட, சுற்றுலா, கலாசாரம், அறநிலையத் துறை அரசாணை எண், 200 மற்றும் ஆகஸ்ட், ௩௦, 2019 தேதியிட்ட, வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அரசாணை எண், 318 ஆகியவற்றை, மாநில அரசு வெளியிட்டு இருக்காது.இவற்றின்படி, கோவில், கட்டளை நிலங்களை ஆக்கிரமித்து வைத்துள்ளவர்களிடமே, அந்த நிலங்களை கொடுக்க அரசு திட்டமிடுகிறது உறுதியாகிறது.கடந்த, 2019 அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:கோவில் நிலங்களில் உள்ள குடியிருப்பு ஆக்ரமணங்கள், அதில் குடியிருக்கும் ஏழை குடும்பங்களின் நலன் கருதி, விதி முறைகளுக்கு உட்பட்டு, தகுதியான நபர்களுக்கு, வீட்டு மனை பட்டா வழங்கி, வரன்முறைப்படுத்த, அந்த நிலங்களை, உரிய வகையில் கையகப்படுத்தி, நில மதிப்பு நிர்ணயம் செய்வதற்கு, ௨ நவ., ௨௦௧௮ தேதி, அரசாணை எண், 200ல் உள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆய்வு அவசியம்ஆனால், ஆக்கிரமிப்புகளை முதலில் அனுமதித்தவர்கள் யார்... பொதுவாக அரசு துறைகள், தங்களுக்கு சொந்தமான நிலங்கள், ஆக்கிரமிப்பு இல்லாமல் உள்ளனவா என்பதை, ஆறு மாதங்களுக்கு ஒரு முறையேனும் ஆய்வு செய்ய வேண்டும். இதே விதி, கோவில் சொத்துகளை நிர்வகிக்கும், செயல் அலுவலருக்கும் பொருந்தும்.

கோவிலின் அனைத்து அசையா சொத்துகளையும் செயல் அலுவலர், நேரில் ஆய்வு செய்து, அந்த ஆய்வை ஆவணப்படுத்த வேண்டும்; அப்படி செய்யவில்லை. அதனால், ஆக்கிரமிப்பு ஏற்பட்டு உள்ளது என்றால், அது, செயல் அலுவலர் கடமை தவறியதையே காட்டுகிறது.அதற்கு அவர், தண்டிக்கப்பட வேண்டும். அப்படி அவர் ஆய்வு செய்தும், ஆக்கிரமிப்பு ஏற்பட்டு உள்ளது என்றால், ஆக்கிரமிப்பாளர்களுடன் செயல் அலுவலர் கைகோர்த்துள்ளார் என்று தான் பொருள். அதற்காகவும் அவர் தண்டிக்கப்பட வேண்டும். அதை செய்து, ஆக்கிரமிப்பை மீட்காமல், ஹிந்துக்களின் சொத்துக்களை இழப்பது தான் தீர்வு என்றால், அதில் என்ன நியாயம் இருக்கிறது?முதலில், ஹிந்துக்களிடம் இருந்து வழிபாட்டு தலங்களையும், மத நிறுவனங்களையும் அவற்றின் சொத்துகளையும் பிடுங்கிக் கொண்டனர்.'ஹிந்துக்களின் சொத்துகளை பாதுகாப்போம்' என்ற போர்வையில், இது நடந்தது. இப்போது, அந்த பாதுகாப்பை, அறநிலைய துறையாலும், அதன் எஜமானாரான தமிழக அரசாலும், கொடுக்க முடியவில்லை என்பது நிருபணமாகிறது.நிலம், ஹிந்து சமுதாயத்திற்கு மிக முக்கியமான சொத்து. கன்னியாகுமரி மாவட்டத்தில், கோவில் நிலங்கள், 20 ஆயிரம் ஏக்கரை அரசு எடுத்துக் கொண்ட பின், 30 ஆண்டுகளில் அந்த மாவட்டத்தில், ஹிந்துக்கள் சிறுபான்மையினராக மாறி விட்டனர்.


மோசடிதான்நிலத்தை இழப்பதால், இப்படிப்பட்ட ஆபத்துகள், ஹிந்து சமுதாயத்திற்கு காத்திருக்கின்றன.நிலங்களை விற்பதற்கு, 'பொது நலன்' என்ற வரையறுக்கப்படாத சொல்லை தவிர, நிலத்தில் இருந்து வருமானம் இல்லை என்ற காரணத்தையும், அரசு முன்வைக்கிறது. நிலங்களில் இருந்து வருமானம் வராததற்கும், அரசு தான் காரணம்.பல ஆண்டுகளாக வாடகை வசூல் செய்யாமல், வாடகையை உயர்த்தாமல், பொது சொத்து தானே; எப்படி போனால் நமக்கென்ன என்ற அலட்சிய போக்கில் தான், அறநிலையத் துறையில், நிலங்களின் நிர்வாகம் நடக்கிறது.வருமானம் இல்லாத பட்சத்தில், நிலத்தை விற்று, வங்கியில் வைப்பு நிதியாக வைத்து, வட்டி வருமானம் ஈட்டலாம் என்பது அரசின் வாதம். ஆனால், இதுவும் மோசடி தான்.ஏனெனில், இந்த வட்டி வருமானம், குறிப்பிட்ட கோவிலின் நலனிற்காகவோ, ஹிந்துக்களின் நலனிற்காகவோ செலவிடப்படுவதில்லை.

பெரும்பாலும், அறநிலைய துறை அதிகாரிகளுக்கு கார் வாங்கவும், அவர்களுக்கு பிற வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவும் தான் செலவிடப்படுகிறது.அறநிலையத் துறையில் பல ஊழியர்கள், ஹிந்துக்களே அல்ல என்ற நிலையில், ஹிந்துக்களுக்காக அந்த பணம் செலவிடப்படும் என, எப்படி நம்ப முடியும்?அறநிலைய துறை சட்டம் பிரிவு, 34ல் சொல்லப்பட்டுள்ள சட்டப்பூர்வ வழிகளைப் பின்பற்றாமல், ஹிந்து கோவில்கள், மடங்கள், கட்டளைச் சொத்துக்களை விற்க முடியாது. அப்படி விற்றால், அந்த விற்பனை செல்லாது.அதே சட்டம், நில விற்பனைக்கு விண்ணப்பம் செய்ய வேண்டியவர், கோவில், கட்டளையின் உண்மையான அறங்காவலர் என, குறிப்பிடுகிறது; செயல் அலுவலரோ, தக்காரோ விண்ணப்பம் செய்ய முடியாது.ஹிந்து சமுதாயத்தின் கட்டுப்பாட்டில் கோவில்கள் இல்லாததால், உண்மையான அறங்காவலர்களே தற்போது இல்லை. இந்நிலையில் எந்த கோவில் சொத்தை விற்றாலும், அது செல்லுபடியாகாது.அரசு தனக்குள்ள அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அரசாணை வெளியிட்டு, கோவில், கட்டளை சொத்துகளை விற்க ஏற்பாடு செய்வது, கிரிமினல் நம்பிக்கை மோசடி. இதில், எந்த சந்தேகமும் இல்லை. ஹிந்துக்களுக்கு எதிரான இந்த போக்கை, அரசு உடனடியாக நிறுத்தி, கோவில், கட்டளை சொத்துகளை தாரை வார்க்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்.


டி.ஆர்.ரமேஷ்,

ஆலய வழிபடுவோர் சங்க தலைவர்

தொடர்புக்கு: trramesh@me.com

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • ganapati sb - coimbatore,இந்தியா

  சிவன் சொத்து குல நாசம் என்பார்கள் ஆலயங்களின் சொத்துக்களை அபகரிக்க துணை போகும் அரசியல் கட்சியினர் அடையாளம் தெரியாமல் போவர்

 • shyamnats - tirunelveli,இந்தியா

  மிக சரியான பார்வை. திட்டமிட்டு இந்துக்களை, இந்து தர்மத்தை தாக்குகிறார்கள். இதற்கு DMK / ADMK மற்றும் கட்சி வேறுபாடு இல்லாமல் அனைவராலும் தாக்கப்படுகிறோம். இந்துக்கள் இன்னும் விழிக்க வில்லை என்றால் மிக மோசமான நிலைக்கு தள்ளப்படுவோம். கடந்த பாராளுமன்ற தேர்தலின் முடிவுகள் நாம் இன்னும் ஆழ்ந்த மயக்கத்தில் இருந்ததை, இருப்பதையே காட்டியது. சட்டப்படியாகவும் ஒற்றுமையாகவும் போராடவேண்டிய தருணம். இதே அணுகுமுறை மற்றைய முஸ்லீம் , கிறித்துவ மத நிறுவனங்களின் சொத்துக்களுக்கும் பொருந்துமா என்று தெரிய வேண்டும். பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டியது அவசரமாகும் .

 • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

  திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கட்டுமரம் கோயில்கள் சொத்தை கொள்ளையடித்தனர் . முக பரம்பரை பணக்காரரா? இடுப்பில் கட்டிய துண்டோடு வந்து பெரியாருக்கு கை கால் கழுவி பெரியார் சொத்தை கட்டுமரமும் ஓசி சோறும் கூட்டாக கொள்ளை அடித்து பணக்காரர்கள் ஆனார்கள் , கட்டுமரம் சொந்தங்கள் திருதராஷ்டிரன் கும்பலை விட பெரியது ஊழல் செய்தால் தானே அத்தனை வேலை வெட்டி இல்லாத குடும்ப அங்கத்தினர்களுக்கு சோறு போட முடியும் அதனால் கோயில் சொத்து கொள்ளை கருப்பு பணம் லஞ்சம் இவற்றால் சொத்து சேர்த்து உலகிலேயே பெரிய பணக்காரர் குடும்பமாக கட்டுமரம் விளங்குகிறது

 • P.K. GANESAN - chennai ,இந்தியா

  நாட்டின் சுதந்திரத்துக்கு முன்னர், வெள்ளையர்கள் கொள்ளையடித்தனர் என்றால், இப்போது நாம் தேர்ந்தெடுத்த கொள்ளையர்கள் கொள்ளையடிக்கின்றனர். இந்துக்களின் நலனைக் காப்பவர்களையே நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் - லஞ்சம் வாங்காமல்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement