Advertisement

சிரிப்பு மழை பொழிந்த ‛வாஷிங்டனில் திருமணம்'.

Share


எழுத்தாளர் சாவி என்றவுடன் அவரது நகைச்சுவை படைப்பான ‛வாஷிங்டனில் திருமணம்' தான் அனைவரது நினைவிற்கு வரும்.
அமெரிக்க கோடீஸ்வர தம்பதிகளான மிஸ்டர் அண்ட் மிஸஸ் ராக்பெல்லர் ஆகிய இருவரும் தமிழகத்தில் நடக்கும் திருமண முறைகள் பற்றி கேள்விப்பட்டு ,அது போல ஒரு திருமணத்தை அமெரிக்காவில் நடத்த விருப்பப்படுகின்றனர், அது தொடர்பாக நடைபெறும் சம்பவங்களை வைத்து எழுதப்பட்டதே வாஷிங்டனில் திருமணம் .

பல வருடங்களுக்கு முன்பு தொடராகவும்,புத்தகமாகவும் வெளிவந்து வாசகர்களின் பலமான வரவேற்பை பெற்ற இந்த நாவல் பிறகு நாடகமாகவும் வந்தும் மகத்தான வரவேற்பை பெற்றது.
சென்னையில் நாடக திருவிழா நடத்திவரும் டி.வி.,வரதராஜனின் யுனைடெட் விஷீவல்ஸ் சார்பில் சென்னை நாரதகான சபாவில் நேற்று இந்த நாடகம் நடைபெற்றது.
நாடகத்தில் அம்மாஞ்சி வாத்தியாராகவும்,சாம்பசிவ சாஸ்திரிகளாகவும்,மிசஸ் ராக்பெல்லராகவும் வரும் மூன்று பேரால் காட்சிக்கு காட்சி சிரிப்பு வெடிதான்.
கிட்டத்தட்ட அறுபது வருடங்களுக்கு முன் இருந்த அமெரிக்க சூழ்நிலையை வைத்து எழுதப்பட்ட நாடகம் என்றாலும் இப்போதும் பெரிதாக அங்கேயும் இங்கேயும் எந்த மாற்றமும் இல்லை என்பதால் ரசித்து சிரிக்க முடிகிறது.
அமெரிக்காவின் ‛பொடமாக்' ஆற்றில் குளிப்பதில் இருந்து ஆரம்பிக்கிறது சாஸ்திரி மற்றும் அம்மாஞ்சியின் கலாட்டாக்கள்.ஆபிரகாம்லிங்கன் கட்டிடத்தை பார்த்து ஏதோ வாயு லிங்கம் என்று நினைத்து கும்பிடுவதும்,அப்பளம் காயப்போட மொட்டை மாடியை சர்வே செய்ய ெஹலிகாப்டரில் செல்வது என்று நாடகம் முழுவதும் நகைச்சுவை மழைதான்.

சம்பந்தி சண்டையும் திருமணத்தி்ல் ஒரு சடங்கு என நினைத்து எவ்வளவு செலவானாலும் நடக்கட்டும் என்று மிசஸ் ராக்பெல்லர் உத்திரவு போடுவதும், ஜனவாச ஊர்வலம் பார்வையாளர்கள் நடுவிலே வலம்வந்ததும் கூடுதல் சுவராசியங்கள்.

இந்த நாடகத்தை நடத்திவரும் கோவை பத்து என்பவருக்கு எண்பது வயதாகிறதாம் நிற்கமுடியவில்லை நடக்கமுடியவில்லை ஆனாலும் நாடகத்தின் மீதான பற்று காரணமாக ஒரு நாற்காலியை பிடித்து சமாளித்துக் கொண்டே நாடகத்தில் நடித்தது அவருக்கு நாடகத்தின் மீதான பற்றையும் பிடிப்பையும் காட்டியது.

நம்மைச் சுற்றி சமீபகாலமாக நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் மனஉளைச்சலையும் கவலையையும் தருவதாக இருக்கும் சூழ்நிலையில் இது போன்ற நாடகங்கள்தான் மயிலிறகாய் மனதை வருடும் மருந்தாக அமைகின்றன அரங்கம் நிரம்பி வழிந்ததே அதற்கு சாட்சி.இதற்கான வாய்ப்பை உருவாக்கிய வரதராஜனுக்கு வாழ்த்துக்கள்.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    மறக்க முடியுமா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement