Advertisement

குழந்தை சுஜித் மீண்டு(ம்) வரவேண்டும்

Share

குழிக்குள் இருக்கும் சிறுவன் சுஜித்தின் கைகள் மட்டும் அதிரும் அந்த வீடியோ காட்சியை பார்க்கும் யார் கண்ணிலும் கண்ணீர் கொட்டும்,மனம் ரணமாகும்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் நடுகாட்டுப்பட்டியை நோக்கி நாடே கண்ணீருடன் தனது பார்வையை திருப்பியிருக்கிறது.
கடந்த 60 மணி நேர பேராட்டத்தில் சிறுவன் சுஜித் விஷயத்தில் அறிவியல் கொஞ்சம் கொஞ்சமாய் தோற்றுக்கொண்டு இருந்தாலும் மனிதம் நம்பிக்கையுடன் பிரார்த்திக்கொண்டு இருக்கிறது.

சென்னை போரூரில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி மூன்று நாட்களுக்கு பிறகு உயிருடன் சிலர் மீட்கப்பட்டனர் அந்த பழைய சம்பவங்கள் நம்பிக்கை தருகின்றன.

எத்தனையோ விபத்துகளில் அதிர்ஷ்டவசமாக தப்பிப்பிழைத்த பல குழந்தைகள் இருக்கின்றனர் அந்த குழந்தைகளில் ஒன்றாக சுஜித்தும் இருக்கவேண்டும் என்பதே பலரது வேண்டுதல்கள்.

குழந்தை குழியி்ல் விழும் சம்பவம் ஒன்றும் நமக்கு புதிதல்ல இது போன்ற சம்பவத்தை வைத்து சினிமா எடுக்கும் அளவிற்கு இது போல பல சம்பவங்கள் நடந்துள்ளன ஆனால் அதில் இருந்து பாடம் கற்றுக்கொண்டோமா? அல்லது இனிமேலாவாது கற்றுக்கொள்வோமா?என்பதுதான் கேள்வி.

இந்த நேரத்தில் இது கூடாது என்றாலும் வாதப்பிரதிவாதங்களுக்கு பஞ்சமேயில்லை, அரசியல் செய்யவும் யாரும் அஞ்சவுமில்லை.சந்திராயனுக்கும் இதற்கும் முடிச்சுப்போடவும் தயங்கவுமி்ல்லை, எண்ணெய் எடுக்க மண் தோண்டும் எந்திரத்திற்கு பாறையை வெட்டி குழி தோண்டுவது அவ்வளவு எளிது இல்லை என்ற தொழில்நுட்பத்தை புரிந்துகொள்ளும் அளவிற்கு பொறுமை இல்லை, ஆளாளுக்கு அவரவர் விருப்பம் போல பதிவிடுகின்றனர் ஆனால் உருப்படியான தீர்வு மட்டும் சொல்வதில்லை.

இதற்கு வேலுார் மாவட்ட ஏலகிரி மலைவாழ் கிராம குழந்தைகள் சுஜித்திற்காக பட்டாசு வெடிப்பதில்லை தீபாவளி கொண்டாடுவதில்லை என்று எடுத்த முடிவு எவ்வளவோ மேலானது.

ஒரு படி மேலே போய் குழிக்கு சொந்தக்காரர்களே அந்த குழந்தையின் அப்பாவும்-அம்மாவும்தான் அவர்களைத்தான் முதலில் தண்டிக்கவேண்டும் என்று இந்த நேரத்தில் மனசாட்சி இல்லாமல் தனது கண்டுபிடிப்புகளை சொல்லிக்கொள்கின்றனர் பாவம் அந்த தாய் சோறு தண்ணீர் இல்லாமல் பிள்ளையின் நினைவால் பித்துப்பிடித்தாற் போல வீட்டில் விட்டம் பார்த்து முடங்கிக்கிடக்கிறார்.

அங்கு இருக்கும் அமைச்சர் ஒருவரோ குழந்தையிடம் அசைவு இல்லை,மூச்சுவிடுவது போலவும் இல்லை என்று ஒரு ‛முடிவுக்கு' வந்தவர் போல பேசுகிறார் இந்த நேரத்தில் இப்படி சொல்லலாமா? சகலத்தையும் மறந்து துறந்து குழந்தையை காப்பாற்ற குழியருகே ஒரு தவம் போல பணியாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த வார்த்தை உற்சாக குறைவைத்தானே தரும்.

அனைவரது பிரார்த்தனையையும் ஏற்கப்பட்டு குழந்தை சுஜித் குழியில் இருந்து மீண்(டும்) வரவேண்டும், வருவான்.

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.inShare
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement