Advertisement

'புரட்சியாளர் டி.வி.ஆர்.,' : இன்று டி.வி.ஆர்., பிறந்த நாள்

Share

“நாங்கள் இருவரும் பள்ளித் தோழர்கள். அந்தக் காலத்திலேயே அவர் வித்தியாசமானவர். பல முற்போக்கு எண்ணங்கள் சிறுவயதிலேயே உண்டு. இது மேல்தட்டு மாணவர்களுக்கு பிடிக்காது. அவர்கள் அவரது போக்கை மறைமுகமாக கேலி செய்வர். அது எனக்கு தெரிந்தால் போதும் அவர்களை நையப்புடைத்து விடுவேன்.”

இதைச் சொன்னவர் பின்னாளில் இலக்கிய ஆர்வலராகவும் இடதுசாரி தலைவராகவும் திகழ்ந்த ப.ஜீவானந்தம் என்ற ஜீவா. அவர் குறிப்பிடும் வித்தியாசமானவர் 'தினமலர்' இதழைத் தோற்றுவித்த டி.வி. ராமசுப்பையர்.

இன்று மக்கள் பத்திரிகையாகத் திகழும் தினமலர் இதழை நிறுவிய டி.வி.ஆர். என்று அழைக்கப்படும் தழியல் வேங்கடபதி ராமசுப்பையர் ஒரு புரட்சிக்காரர். 1920களின் இறுதியில் தமிழக கிராமங்களில் ஜாதிப் பற்று தீண்டாமை தலைவிரித்தாடியது. உயர் ஜாதியினர் வாழும் பகுதிகளுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய முடியாது. இந்தக் கொடுமையை முறியடிக்க நினைத்தார் டி.வி.ஆர்.

'அவர்கள் தானே இங்கு வரமுடியாது நாம் அங்கு போகலாமே' என டி.வி.ஆர். தீர்மானித்தார். சேரிகளுக்குச் சென்று தாம்பூல விழா நடத்தினார். தென் மாவட்டங்களில் ஊர்ப் பெரியவர்களை பிரபலமானவர்களை அழைக்க வேண்டுமானால் வெறுங்கையோடு போய் அழைக்க மாட்டார்கள்; தாம்பூலம் கொடுத்து அழைப்பார்கள். இன்றும் அவன் என்ன பெரிய இவனா வெற்றிலை பாக்கு வச்சு அழைக்கணுமா? என்று பேச்சு வழக்கு உண்டு. டி.வி.ஆர். சேரிகளுக்குப் போனார். வீடு வீடாகப் போய் வெற்றிலை பாக்கு வைத்து சேரி மக்களை அழைத்து அந்தப் பகுதியில் உள்ள பொது இடத்தில் கூட்டி அவர் அந்த மக்களிடையே பேசுவார்.

இலவச கல்வி:



நண்பர்களைக் கொண்டு 'நந்தனார்' நாடகங்கள் போடுவார். விளைவு மக்களிடம் ஏற்பட்டு வரும் எழுச்சியைக் கண்டு இந்தியாவிலேயே முதன் முறையாக 1936 நவம்பர் 12ம் தேதி திருவிதாங்கூர் மகாராஜா 'இனிமேல் பிறப்பு அல்லது ஜாதி அடிப்படையிலான எந்த ஓர் இந்துவும் நமது கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட திருக்கோவில்களில் நுழைய எந்த ஒரு கட்டுப்பாடும் இருக்கக் கூடாது என்று உத்தரவிடுகிறோம்' என ஆணை பிறப்பித்தார்.

சர்.சி.பி.ராமஸ்வாமி ஐயர் திருவிதாங்கூர் சமஸ்தான திவானாக இருந்த போது இலவச கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தினார். அதற்கு ஒரு குறிப்பிட்ட சமயத்தினரிடமிருந்து எதிர்ப்பு இருந்தது. 'மதபோதனையோடு கூடிய ஆரம்ப கல்வியைத் தான் நாங்கள் அளித்து வருகிறோம். அதனால் கல்வியை கட்டாயப்படுத்தக் கூடாது' என அவர்கள் கூறினர். உடன் எந்தப் பகுதியில் இருப்பவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ அங்கு இலவச கட்டாய கல்வியை நடைமுறைப்படுத்திக் கொள்ளலாம் என சி.பி.ராமஸ்வாமி ஐயர் கூறிவிட்டார்.

மதிய உணவு:



அரச குடும்பத்தைச் சேர்ந்த விசாகம் திருநாள் மகாராஜாவின் பேரன் ஏ.என். தம்பியுடன் இணைந்து மூன்று மாதங்களுக்குள் தோவாளை அகஸ்தீஸ்வரம் கல்குளம் விளவங்கோடு பகுதிகளில் 50 பள்ளிகள் கட்டினார் டி.வி.ஆர். ஏழைக் குழந்தைகளுக்கு அரசாங்கம் மதிய உணவு அளிக்கவும் ஏற்பாடு செய்தார். அந்தப் பள்ளிகளில் படித்தவர்கள் இன்றும் உலகம் முழுவதும் இருக்கின்றனர். கன்னியாகுமரி கல்வி அறிவில் முழுமை பெற்ற மாவட்டமாக விளங்க இவையெல்லாம் அடித்தளம் அமைத்தன.

எழுத்தாளர்கள் மீது பெரும் மதிப்பு உடையவர் டி.வி.ஆர். தினமலர் இதழின் முதல் இதழை வெளியிட்டதே ஓர் எழுத்தாளர் தான். அவர் தமிழறிஞர் வையாபுரிப் பிள்ளை. இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பெரிதும் மதிக்கும் எழுத்தாளர் சுந்தர ராமசாமி உருவாக காரணமானவர்களில் ஒருவர் டி.வி.ஆர்.

புத்தகங்கள்:



சுந்தரம் ராமசாமிக்கு 18 வயது வரை தமிழ் படிக்கத் தெரியாது. அவரைத் தமிழை நோக்கித் திருப்பியவர் டி.வி.ஆர். சுந்தரம் ராமசாமி எழுதியுள்ளதாவது: ஏழு வயதிலிருந்து 10 வயது வரை என் தாயார் தங்கம்மாளும் ராமசுப்பையரும் ஒன்றாக விளையாடிய குழந்தைகள். என் 10 வயதில் நான் உடம்பு சரியில்லாமல் படுத்துவிட்டேன். அப்போது டி.வி.ஆர். அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவார். அப்பா அம்மாவிற்கு ஆறுதல் கூறுவார்.

மாலையில் நாலரை மணி முதல் ஐந்து மணிக்குள் வருவார். அந்த நேரம் எனக்கு நன்கு தெரியும். அவர் வரமாட்டாரா என எதிர்பார்க்கும் பழக்கமும் எனக்கு வந்து விட்டது. எனக்கு சதா படுக்கையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் பொழுது போவது கஷ்டமாக இருந்தது. அப்போது அவர் என்னிடம் 'நான் நாகர்கோவில் கிளப்பின் செயலர். உனக்கு வேண்டிய புத்தகங்கள் அங்கிருந்து கிடைக்கச் செய்கிறேன்; பொழுதும் போகும்; அறிவும் வளரும்' என்றார்.

புத்தகங்கள் படிக்கும் வழக்கமே அப்போது தான் எனக்கு ஏற்பட்டது. பள்ளியில் நான் தமிழ் படிக்கவில்லை. என் 18வது வயதில் சிலேட்டு வாங்கித் தமிழ் எழுத்துகளை எழுதிப் படிக்கத் தொடங்கினேன். என் இந்த முயற்சியைக் கண்டு ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்டு என்னைத் தட்டிக் கொடுத்து பாராட்டினார் டி.வி.ஆர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

டி.வி.ஆருக்குள் ஒரு புரட்சியாளர் இருந்தார். அவர் தொட்ட எல்லாவற்றிலும் அதைப் பார்க்க முடியும். அவற்றின் முகமாக விளங்குகிறது தினமலர்.

- மாலன், பத்திரிகையாளர்
maalan@gmail.com

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (6)

 • RM -

  திரு. டி.வி.ஆர் அவர்களின் மனப்பூர்வமான அர்ப்பணிப்பு, சமுதாய நலனில் உண்மை ஆர்வம்,இவைதான் காலங்கள் கடந்தாலும் பத்ரிக்கை உலகில்தினமலரின் தனி இடத்திற்கு காரணம்.

 • வல்வில் ஓரி - தயிர் வடை, நரசொலி,இந்தியா

  தினமலருக்கு வாழ்த்துக்கள் அதன் நிறுவனருக்கு வணக்கங்கள்

 • G.VIJAYABASKAR - Tiruchchirappalli,இந்தியா

  டி . வீ .ஆர் அவர்களின் பிறந்தநாள் பத்திரிக்கை உலகத்திற்கு நன்னாள். அவர் தோற்றுவித்த 'தினமலர்' பல நூற்றாண்டுகள் காணவும்... வாழையடி வாழையென வாழ வாழ்த்துக்கள் .

 • Bhaskaran - Chennai,இந்தியா

  சாமானியர்களின் குரலையும் மக்கள் மன்றத்தில் எதிரொலிக்க செய்த பெருமை தினமலர் நாளிதழுக்கே உண்டு இன்று நீர்நிலைகளை காப்பாற்ற மக்களின் நடுவில் ஒரு மாபெரும் எழுச்சியை தோற்றுவித்த ஒரேநாளிதழ் தினமலர் மட்டுமே பல யாகங்கள் செய்ததன் பலன் உங்களை சாரும் திரு ராமசுப்பையரின் நல் ஆசி உங்களுக்கு தொடர்ந்து கிடைக்கும் விடாது மக்கள்பணியை தொடருங்கள் ஊழலற்ற ஒரு சமுதாயத்தை கண்டிப்பாக மீண்டும் மலரச்செய்வதற்கு இறையருள் உங்களுக்கு கண்டிப்பாக உண்டு

 • SadaIndian - Chennai,இந்தியா

  My respects and namaskarams to Thiru T.V.R avargal on his birthday.

 • Krish - Chennai ,இந்தியா

  பெயரிலேயே ராமன் Subramaniam என்று சைவ வைணவ ஒற்றுமைக்கு உதாரணமாக இருக்கிறார். சாதி ஒற்றுமை தேசிய ஒற்றுமைக்கு சொல்லவா வேண்டும். அவருக்கு இப்படி செய்ய அவரின் குடும்பத்தாரும் நல்ல நண்பர்களும் பெருமைக்கு உரியவர்கள். தினமலர் அவரின் வழியின் இன்னும் பல ஆண்டுகள் சிறக்க அவரின் ஆசி இருக்கும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement