Advertisement

தே.மு.தி.க., மாவட்ட செயலருக்கு மூக்குடைப்பு!

Share

''லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில, அதிகாரி சிக்கி இருக்காருங்க...'' என்றபடியே, டீயை உறிஞ்சினார், அந்தோணிசாமி.

''யாரு, என்னன்னு விவரமா சொல்லு வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''சென்னை பெருநகர் பகுதியில, பல்வேறு உள்ளாட்சி அமைப்புகள், கட்டுமான திட்ட அனுமதி குடுக்குது... இதை கண்காணிக்க, சி.எம்.டி.ஏ.,வுல, தனிப் பிரிவு ஒண்ணு இருக்கு... ''இதுல, உள்ளாட்சி அதிகாரிகள் முறைகேடுல ஈடுபடுறாங்கன்னு வந்த புகார்கள் குறித்து விசாரிக்க, நகராட்சி நிர்வாகத் துறை பரிந்துரை அடிப்படையில, லஞ்ச ஒழிப்புத் துறை, விசாரணையை துவக்கி இருக்குங்க...

''இந்த விவகாரத்துல, சி.எம்.டி.ஏ., 'சீனியர் பிளானர்' ஒருத்தர் மேல, தீவிர விசாரணை நடக்குதுங்க... அதனால அவரு, அதே பதவியில இருக்க கூடாதுன்னு, லஞ்ச ஒழிப்புத் துறை, சி.எம்.டி.ஏ., நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிச்சி இருக்குங்க... ''ஆனா, 'வளமான' அதிகாரிய மாத்துறதுல, நிர்வாகம் ஏனோ மவுனமாக இருக்குதுங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.

''குடிமராமத்து திட்டப் பணியில, கோடிக்கணக்கான ரூபாய், 'ஆட்டைய' போட்டுருக்காவ வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.

''இந்த கொடுமையெல்லாம், இப்ப சகஜமாயிடுச்சு பா...'' என, அலுத்துக் கொண்டார், அன்வர் பாய்.

''இருந்தாலும், நான் சொல்லுறத சொல்லுதேன்... பெரம்பலுார் மாவட்டம், கீழப்பெரம்பலுார் ஏரியில, பொதுப்பணித் துறையினர் பாசன குடிமராமத்து குழு அமைச்சு, அவர்களுக்கு பணி வழங்கிருக்காவ... இதுக்காக ஒதுக்கப்பட்ட, 24 லட்சம் ரூபாயில், பாதியை கூட, ஏரி துார் வார செலவு செய்யாம, அப்படியே ஆட்டைய போட்டுருக்காவ வே...

''பெரம்பலுார் மாவட்டத்துல மட்டும், 5 கோடி ரூபாய்க்கு மேல, ஆட்டைய போட்டுருக்காவ... கலெக்டர்கிட்ட புகார் போயிருக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.

''அங்க மட்டும் இல்ல ஓய்... மாநிலம் முழுவதும், பல கோடி ரூபாய் கொள்ளையடிச்சுருக்கா... எல்லாம் நம்ம பணம்... கோபமா வரது ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''இடைத் தேர்தல்ல, பணப் பட்டுவாடா பிரச்னை ஆரம்பிச்சுருச்சு பா...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அன்வர் பாய்

''ம்... 'கேப்' விடாம சொல்லுங்க...'' என, ஆர்வமாய் கேட்டார், அந்தோணிசாமி.

''விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ல, அ.தி.மு.க., சார்புல போட்டியிடுறவரு, மரியாதை நிமித்தமா, தே.மு.தி.க., மாவட்ட செயலர சந்திச்சி பேசியிருக்கார் பா... ''அப்போ அவரு, 'தே.மு.தி.க., தொடர்பான பணப் பட்டுவாடாவை, நான் தான் கவனிப்பேன்'னு சொல்லி இருக்கார்... அதுக்கு வேட்பாளர், 'உள்ளூர் அமைச்சர் தான் எல்லாம்...' என, சொல்லிட்டாராம் பா...

''விடாகண்டனான மாவட்ட செயலர், அந்த அமைச்சரையும் பார்த்து, 'பிரசாரத்துக்கு விஜயகாந்தையும், பிரேமலதாவையும் அழைச்சுட்டு வர்றேன்... 'அமவுண்ட்' மட்டும், என்கிட்ட கொடுங்கன்னு சொல்லிருக்கார் பா... ''அமைச்சர், 'அதெல்லாம் நாங்க பார்த்துக்கறோம்.. நீ இடத்தை காலி பண்ணு'ன்னு சொல்லிட்டாராம்... விஷயம், தே.மு.தி.க., தலைமைக்கு போயிருக்காம் பா...'' என, முடித்தார் அன்வர் பாய்.

அப்போது, அவ்வழியாக சென்றவரிடம், 'ஏம்பா வெங்கடேசா, இதெல்லாம் நமக்கு தேவையா...' எனக் கேட்டபடியே, அன்வர்பாய் நடையைக் கட்ட, மற்ற நண்பர்களும் கிளம்பினர்; பெஞ்ச் அமைதியானது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement