Advertisement

மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ மனிதநேயம்!

Share

பொன்.கருணாநிதி, பொள்ளாச்சி, கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: கோல் கட்டா, ஜாதவ்பூர் பல்கலை நிகழ்ச்சியில் பங்கேற்க, மத்திய வனத்துறை இணை அமைச்சர், 'பாபுல் சுப்ரியோ' சென்றிருந்தார். அவருக்கு எதிராக, அங்கு பயிலும் சில மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியதோடு மட்டுமில்லாமல், ஒரு கட்டத்தில் உணர்ச்சி மிகுதியால், அமைச்சரை தாக்கி உள்ளனர்.

இது குறித்து மத்திய இணை அமைச்சர், தான் தாக்கப்படும் நிகழ்வை, சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்திருந்தார். அதில், 'என் மீதான தாக்குதலுக்கு, காரணமான மாணவனின் பெயர், தேபஞ்சன் பல்லவ் சட்டர்ஜி; அவர், ஜாதவ்பூர் பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள சமஸ்கிருத கல்லுாரியில் படித்து வருகிறார்' என, சுட்டி காட்டியிருந்தார்.

இந்த செய்தி, 'வைரலாக' பரவ தொடங்கியது. இதைக் கண்ட அந்த மாணவனின் தாயார் ரூபாலி பல்லவ், 'என் மகன் செய்தது மிகப் பெரிய தவறு. இதற்காக, அமைச்சரிடம், நான் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறேன்' என, தனியார் 'டிவி' வாயிலாக வேண்டுகோள் விடுத்திருந்தார். நாட்டில் மத்திய அமைச்சர் மீது கூட அல்ல... ஆளும் கட்சியின் சாதாரண பிரமுகர் மீது கூட, இந்த மாதிரி தாக்குதல் நடைபெற்றிருந்தால், அதன் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை, அறியாதவர் அல்ல.

அந்த மாணவனின் மீது, பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்டு, அவர் சிறையில் பல்லாண்டு காலம் இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.மாணவனின் எதிர்காலமே, இதனால் வீணாக போய் விடும். ஆனால், மனித நேயமிக்க, மத்திய இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ, மன்னிப்பு கோரிய அந்த மாணவனின் தாயாருக்கு, 'டிவிட்டர்' வாயிலாக பதில் கூறி உள்ளார்.

அதில், 'அம்மா... உங்கள் மகனுக்கு, நான் எந்த தீங்கையும் இழைக்க மாட்டேன். அவர் மீது, காவல்துறையில், எந்த புகாரையையும், கொடுக்க போவதில்லை. தன் செயலில் இருந்து, உங்கள் மகன் நல்ல பாடம் கற்றுக் கொண்டால் போதும். எனவே, நீங்கள் கவலைப்பட வேண்டாம்' என, குறிப்பிட்டுள்ளார். தான் தாக்கப்பட்டதை மறந்து, மாணவனின் எதிர்காலம் கருதி, அவரை மன்னித்து, மனித நேயத்துடன் நடந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் பாபுல் சுப்பிரியோவின் உயர்ந்த பண்பாடு மெய்சிலிர்க்க வைக்கிறது; அவருக்கு நம் பாராட்டுகள்!

***

ஆதாயம் இன்றி ஆற்றில் இறங்க மாட்டார்கள்!
டாக்டர் ஆர்.அசோகன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தி.மு.க., மற்றும் அதன் தோழமை கட்சிகளின், ௩௮ எம்.பி.,க்களும், படுரகசியமாக ஒருவருக்கொருவர் தங்களுக்குள் தெரியாமல், மத்தியில் ஆள்வோரை சந்திக்கின்றனர். அந்த முயற்சிகளுக்கு வெற்றியாக, உரம் மற்றும் ரசாயன துறை நிலைக் குழு தலைவராக, தி.மு.க., - எம்.பி., கனிமொழி நியமிக்கப்பட்டு உள்ளார்.

லோக்சபாவில், இன்னும், எம்.பி., பதவியே ஏற்காத, துரைமுருகனின் மகனான கதிர் ஆனந்த்துக்கு, தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டலத்துக்கான, எம்.பி.,க்கள் குழுத் தலைவர் பதவி கிடைத்துள்ளது. எட்டுக்கும் மேற்பட்ட, தமிழக எம்.பி.,க்கள் பலப்பல நிலைக் குழுவில், உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். காரியம் ஆக வேண்டுமெனில், 'பா.ஜ., தீண்டத்தகாத கட்சி அல்ல; மோடி கில்லாடி' எனக் கூறி, தமிழக எம்.பி.,க்கள் காலில் விழுவர். காரியம் முடிந்தவுடன், 'பண்டாரம், பரதேசி, காவி உடை, கமண்டலம், ஆக்டோபஸ், விஷ ஜந்துக்கள், கூனை நிமிர்த்த முடியாத ஒட்டகங்கள், ஹிந்து மத விரோதிகள்' என, பா.ஜ.,வை திட்டி தீர்ப்பர்.

இவர்களின் சகவாசகத்தை, மத்திய அரசு விரைவில் உணரும். நல்ல பாம்புகளுடன் வாசம்புரிய முடியாது. வேண்டாத பிரச்னையாக, தி.மு.க.,வினர்களுக்கு பதவியை கொடுத்து, வினையை விலைக்கு வாங்கியுள்ளது, மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு. பொறுப்பேற்ற, ௬௫ மாதங்களில், ஊழல் இல்லா ஆட்சியை நல்கியுள்ளார், பிரதமர் நரேந்தி மோடி. ஒரு பானை பாலில், ஒரு துளி விஷம் போல், நிலைக்குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளில், தி.மு.க.,வினர் கலந்துள்ளதால், ௧௩௦ கோடி மக்களும் அஞ்சுகின்றனர்.

ஆதாயம் இல்லாமல், தி.மு.க., மற்றும் அதன் தோழமை கட்சியினர் ஆற்றில் இறங்க மாட்டார்கள். 'ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது' என்பதை உணர்ந்து, பிரதமர் மோடிஜி கவனமாக இருக்க வேண்டும்!


****

அரசு ஊழியர்களை தவறாக பார்க்க வேண்டாம்!
ஜி.ரங்கநாதன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ மெயில்' கடிதம்: அரசு ஊழியர்கள் மீது குறை சொல்லி, வாசகர் ஒருவர், இதே பகுதியில், 'ஓய்வூதியம் தடுக்கப்படவேண்டும்' என, கடிதம் எழுதி இருந்தார். ரயில்வே அஞ்சல் துறையில், 33 ஆண்டுகளாக பணியாற்றி, ஓய்வு பெற்றவன் என்ற அடிப்படையில் சில கருத்துகளை கூற விரும்புகிறேன்...

எந்த பண்டிகைகளுக்கும் விடுப்பு கிடையாது. இத்தகைய கடின உழைப்பையும், மக்களுக்காக வழங்கி வருவதை பலர் அறிய வாய்ப்பில்லை. இன்று, அரசு ஊழியர் சம்பளம் சொல்லிக்கொள்ளும் வகையில் உள்ளது. ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் குறைவே. குறைந்த சம்பளத்தில், வறிய நிலையில் வாழ்க்கையை நடத்தியோர் தான், அரசு ஊழியர்கள். அந்த சமயத்தில் அரசை விட, பெரும் தனியார் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் அளித்து வந்தனர்.

தற்போது, அரசு ஊழியர்கள் நல்ல சம்பளம் பெற்று வருகின்றனர். அதற்காக, அரசு ஊழியர்களை பாரபட்சமின்றி லஞ்சம் பெறுவதாகவோ, தவறு செய்வதாகவோ கூறக் கூடாது. இன்றும், பெரும்பாலான அரசு ஊழியர்கள், தன்னலம் கருதாமல் பணியாற்றி வருகின்றனர். ஓய்வூதியம் பெறுவது, அவர்களின் உரிமை. ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக, லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் இருந்தும், பல கோடி ஊழல் செய்யும் அரசியல் தலைவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குகின்றனர். அப்படி இருக்கையில், அரசு ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்குவதால், மக்கள் பணம் வீணாகிறது என்ற கருத்தை ஏற்க இயலாது.

ஒரு சில அரசு ஊழியர்கள் முறைகேடில் ஈடுபடுவதால், அனைவரையும் சந்தேக கண்ணால் பார்க்கக் கூடாது. அரசு பணிகளில் முறைகேடில் ஈடுபடுவோரை, பணியிலிருந்து நீக்கி, கடும் தண்டனை அளிக்க வேண்டும். தயவு செய்து, அனைத்து அரசு ஊழியர்களையும், தவறான கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டாம்!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • .Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்

    இப்படி ஒரேயடியாக அச்சேற்றுவதை பார்க்கும்போது படிக்க பயமாக உள்ளது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement