Advertisement

'டவுட்' தனபாலு

தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம்: வெளிநாட்டு குளிர்பானங்களை குடிப்பதை, மக்கள் தவிர்க்க வேண்டும்.

டவுட் தனபாலு: ரொம்ப நல்லதுங்க... முதல்வரை தொடர்ந்து, நீங்களும் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ளப் போவதாக செய்தி படித்தேன். புறப்படும்போது, விமானத்தில், இளநீர், மோர், பதநீர் போன்றவற்றை எடுத்துட்டுப் போவீங்களா, மாட்டீங்களான்னு, ஒரே, 'டவுட்'டா இருக்கு.

தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார்: இந்த ஆட்சி நிலையானதா என கேட்பவர்களுக்கு, இது சாதனையை வென்று காட்டும் ஆட்சி என, சவுக்கடி கொடுக்கும் வகையில், தமிழக மக்களுக்கு, முதல்வர், இ.பி.எஸ்., பல நன்மைகளை செய்துள்ளார்.

டவுட் தனபாலு: முதல்வர் சவுக்கடி கொடுப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்; பேனர் விவகாரத்தில், உயர் நீதிமன்றம் ஒரு சவுக்கடி கொடுத்ததே... அதுவும், உங்கள் சாதனை பட்டியலில் இடம் பெறுமா என, 'டவுட்' வருதுங்களே...

அ.தி.மு.க., அறிக்கை: கட்சி மற்றும் இல்ல நிகழ்ச்சிகளில், மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில், பேனர் வைக்கக் கூடாது. 'கட் - அவுட்' மற்றும் பேனர் வைப்பதை, முற்றிலும் தவிர்க்க வேண்டும். அறியாமையால், சிலர் செய்யும் செயலால், மக்கள் பாதிப்படைவதால், மிகுந்த வேதனை அடைகிறோம். தலைமையின் அறிவுறுத்தலை, கட்சியினர் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

டவுட் தனபாலு: பேனருக்கு எதிராக உள்ள சட்டத்தை நடைமுறைப்படுத்த, அதிகாரிகளுக்கு, ஆளுங்கட்சியினர் குறுக்கீடு செய்யாமல் இருந்தாலே போதும்... அதற்கு, ஆட்சியை கையில் வைத்திருக்கும், அ.தி.மு.க., வழிவிடுமா என்ற, 'டவுட்'டை, அக்கட்சியினர் விளக்குவார்களா?

நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன்: எங்கள் கட்சியில் இணைந்ததற்கு நன்றி. உங்கள் ஆதரவு, எப்போதும் வேண்டும். நீங்கள் எதிர்பார்க்கும், ஊழல் இல்லா அரசை, விரைவில் அமைப்போம்.

டவுட் தனபாலு: எல்லா அரசியல் தலைவர்கள் போலவே, நீங்களும் பேசுகிறீர்களே, கமல்! தமிழகத்தில் ஊழல் இல்லாத அரசை எப்போது அமைப்பீர்கள் என்று சொன்னால், இன்னும் நிறைய பேர், உங்கள் கட்சியில் இணைவரே... சரி, நீங்கள் எப்போது, முழு நேர அரசியல்வாதியாக மாறுவீர்கள் என்ற, 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க முதலில்!

பால்வளத் துறை அமைச்சர், ராஜேந்திர பாலாஜி: தமிழகத்தில், நல்லவர்கள் யார், கட்சி ஆரம்பித்தாலும், அதை ஆதரிப்போம். நடிகர், விஜயைப் பற்றி, எனக்குத் தெரியாது. ஆனால் ரஜினி, அஜித் போன்ற நல்ல நடிகர்கள், கட்சி ஆரம்பித்தால், அவர்களை ஆதரிப்போம்.

டவுட் தனபாலு: நல்லவர்கள், தமிழகத்தில், புதிய கட்சி தான் துவங்கணுமா... இப்போ, அ.தி.மு.க., உட்பட, நல்ல கட்சி எதுவும் இல்லைன்னு சொல்லுறீங்களா என்கிற, 'டவுட்'டை கொஞ்சம் விளக்குங்களேன்...

தி.மு.க., பொருளாளர், துரைமுருகன்: தமிழகத்தில் நீர் மேலாண்மை குறித்து, மறைந்த, தி.மு.க., தலைவர், கருணாநிதி பற்றி பேச, இப்போதைய ஆட்சியாளர்களுக்கு எந்த அருகதையும் இல்லை. ஏனெனில், தி.மு.க., ஆட்சியில், பல அணைகளை கட்டியவர் கருணாநிதி. நீங்கள் ஒன்றாவது கட்டியுள்ளீர்களா?

டவுட் தனபாலு: வாயைத் திறந்தா, நீங்க புள்ளிவிபரங்களை அள்ளி வீசுவீங்க என்பது எங்களுக்கு தெரிந்தது தான். இத்தனை அணைகளை கட்டிய பிறகும், தமிழகத்தில் ஏன் ஆண்டுதோறும் வறட்சி நிலவுகிறது... குடிநீருக்காக மக்கள், குடங்களுடன் அலைகின்றனர்... காவிரி நீர் ஏன், வீணாக கடலில் போய் கலக்கிறது... அதற்கு உங்க ஆட்சியில், நீங்க எதுவும் செய்யலையான்னு, 'டவுட்' வருதுங்க!

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அவர் வெளி நாட்டு ‘குளிர்பானங்களைத்தானே’ குடிக்க வேண்டாமென்று பொதுமக்களைத்தானே அறிவுறுத்தினார் ? அவர் எதற்கு நீர்மோர், பதநீரைக் கொண்டு போவார் ? பயணத்தில் கிடைக்கும் ‘வேறு’ பானங்களை நன்றாகவே ரசித்துக் குடிப்பார்

  • suresh kumar - Salmiyah,குவைத்

    கலைஞரின் ஆட்ச்சிக் காலத்தில், வங்காள விரிகுடா கடலுக்குள் பல அணைகள் காட்டினார். அவற்றைத் தகர்த்துத்தான் சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் செயல்படுத்த முயற்சித்தோம்

  • அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா

    என்னது.... தி.மு.க ஆட்சியில அணைகளைக் கட்டினாங்களா??? அப்படி எத்தனை அணைகளைக் கட்டினாங்களாம்??? கட்டியதாக “கணக்கு” மட்டும் காண்பித்திருப்பார்கள்.....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement