Advertisement

ஆசிரியர்களை வணங்குவோம்!

அத்யபிக்கா என மலையாளமும், சிக்ஷகா என கன்னடமும், உச்சிட்டெல் என ரஷ்ய மொழியும், அத்யாபக் என இந்தி மொழியும், லவ்ஷி என சீன மொழியும், லிக்ரார் என ஜெர்மன் மொழியும், லு போரோபசர் என பிரெஞ்சு மொழியும், குருவு என தெலுங்கு மொழியும், டீச்சர் என ஆங்கில மொழியும் குறிப்பிடுவது ஆசிரியரைத் தான் என்றாலும் 'ஆசு' என்றால் குற்றம், 'இரியர்' என்றால் களைபவர், குற்றங்களை களைபவரே ஆசிரியராவார் எனக் கூறும் தமிழை முதற்கண் வணங்குவோம்.

ராமாயணத்தில் ஓர் அருமையான காட்சி. மிதிலையில் சீதையின் சுயம்வரம். விசுவாமித்திரர் ராம, லட்சுமணரை அழைத்துச் செல்கிறார். இவர்கள் தசரதன் பிள்ளைகள் என்று அறிமுகப்படுத்துகிறார். தசரதன் மீது ஜனகருக்கு அதிக மரியாதை உண்டு. ஆனால், பல மனைவியரை உடைய தசரதரின் பிள்ளையா நமக்கு மாப்பிள்ளை? என்று ஜனகர் ஒரு கணம் யோசிக்கிறார். அதைப்புரிந்து கொண்ட விசுவாமித்திரர், 'இவன் தசரதனின் மகன்; ஆனால் இவனை வளர்த்து, கல்வி கேள்விகளில் சிறந்தவனாக உருவாக்கியது வசிஷ்ட மகரிஷி' என்று கூறிய பிறகே ஜனகருக்கு நிம்மதி வந்தது என்று கம்பன் சொல்கிறார்.

பெற்றோர் பெயரைக் கூறி காட்டும் அடையாளத்தை விட 'இவர் இன்னாரின் மாணவர்' என்று கூறும் போது நம் சமுதாயத்தில் கிடைக்கிற மரியாதை மிகவும் உயர்ந்ததாகும். ஆம்! ஆசிரியர்களுக்குக் கிடைத்த வரம் அது!

கலைமகள்
கலைமகளை 'வாக்தேவி' என்று சமஸ்கிருதத்தில், 'நாமகள்'என்று தமிழில் கூறுகிறோம். யார் கல்வியைத் தன்னுள் நிரப்புகிறார்களோ, யார் கல்வியைப் பிறருக்குள் நிரப்புகிறார்களோ, யார் கல்வியை ஈஸ்வர பிரசாதம் என்று எண்ணுகிறார்களோ, அவர்களே கலைமகளுக்கான நடமாடும் கோயில்களாக நடமாடுகிறார்கள். பவணந்தி முனிவர் இயற்றிய நன்னுால் நல்லாசிரியருக்கான இலக்கணத்தை வரையறுக்கிறது.

'குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை கலைபயில் தெளிவு கட்டுரை வன்மைநிலம் மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும் உலகியல் அறிவோடு உயர்குணம் இனையவும்அமைபவன் நுாலுரையாசிரியன்னே!" உயர்குடிப் பிறப்பும், அருள் தன்மையும், இறை வழிபாடும் இவைகளால் அமையப் பெற்ற பெருந்தன்மையும், பல நுால்களைப் பயின்ற தேர்ச்சியும், மாணாக்கர் எளிதில் புரியும் வண்ணம் போதிக்கும் சொல்வன்மையும், நிலம், மலை, துலாக்கோல், மலர் இவற்றை ஒத்த குணங்களும், உலக நடையை அறிகின்ற அறிவும், இவை போன்ற பிற உயர்ந்த குணங்களும் நிறையப் பெற்றவனே நுாலைக் கற்பிக்கும் ஆசிரியன் ஆவான்.நல்லாசிரியர் ஒருவர் நல்ல ஆசிரியராக இருக்க விரும்பினால், ஆசிரியர்கள் மாணவர்களின் இரண்டாவது பெற்றோர் என்பதை உணர்ந்து, அவர்கள் மீது மனதார அன்பு செலுத்த வேண்டும்.

'நாட்டின் மிகச்சிறந்த அறிவு வகுப்பறையின் கடைசி இருக்கையில் இருக்கலாம்' என்ற அப்துல் கலாமின் வாசகத்தை மனதில் கொண்டு பாரபட்சமில்லாமல் கற்றுத்தர வேண்டும். 'நல்ல ஆசிரியர்கள் மாணவர்களை இட்டுச்செல்ல வேண்டும்; இழுத்துச் செல்லக்கூடாது. ஊக்கப்படுத்த வேண்டும்; உந்தித் தள்ளுதல் கூடாது. வழியைக் காட்ட வேண்டும் ; வழித்துணையாகச் செல்லுதல் ஆகாது' என்ற கன்பூசியஸ் கருத்துக்கள் கவனிக்கதக்கது. போட்டிகளில் பரிசுகள் கிடைக்காவிட்டாலும் அனுபவங்களையே பரிசுகளாக நினைக்கும் மனங்களை மாணவர்களிடையே உருவாக்க வேண்டும்.

பட்டங்களைப் பெறுவதற்கு ஏட்டுக் கல்வியையும், வாழ்க்கைக்குத் தேவையான வாழ்வியல் விழுமியங்களையும் கற்றுத்தர வேண்டும். மாணவர்கள் தாமாகக் கற்பது எப்படி என்று கற்றுத்தர வேண்டும். நிறைகளைக் காணச் செய்து, குறைகளைக் காணாதிருக்கச் செய்ய வேண்டும். விடை கூறும் தன்மையோடு, வினா தொடுக்கும் திறமையை வளர்க்க வேண்டும். பிறருக்குச் செய்யும் உதவிகளைப் பெரிதாக நினைக்க கற்றுத்தர வேண்டும். அன்பை ஏற்கும்போது அடிபணிந்தும், அநீதியைக் கண்டபோது அக்னிக் குஞ்சாக மாறவும் கற்றுத்தர வேண்டும். மாணவர்கள் கவலைகள் கண்டு கலங்காமல், பிரச்னைகள் கண்டு பின்வாங்காமல் இருக்க கற்றுத் தரவேண்டும்.
பாடத்திட்டங்களைக் கண்ணும் கருத்துமாகக் கற்பதுடன், அப்பாட திட்டத்திற்கு அப்பால் மாணவர்கள் தம் தொலைநோக்குப் பார்வையைச் செலுத்திட ஆசிரியர்கள் உதவி புரியவேண்டும். ஆசிரியர்கள் என்றதும் சில முக்கியமான ஆசிரியர்கள் நினைவுக்கு வருகின்றனர். கர்ணன், துரோணர், பீஷ்மர் என அனைவருக்கும் ஆசானாக, சிறந்த வழிகாட்டியாக இருந்தவர் பரசுராமர். துரோணர் பஞ்சபாண்டவர்களுக்குச் சிறந்த குருவாகவும் ஏகலைவனுக்கு மானசீக குருவாகவும் இருந்து வழி நடத்தியவர். அர்த்தசாஸ்திரம் எழுதிய சாணக்கியர் இந்திய வரலாற்றின் மிகச்சிறந்த மேதை, பொருளாதார நிபுணர், அரசு ஆலோசகர் என பன்முகத்தன்மை படைத்தவராக இருப்பினும் அவர் தட்சசீல பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.
நினைவில் நிற்கும் ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் இவர் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கி, எண்ணற்ற டாக்டர் பட்டங்கள் பெற்று, ஜனாதிபதி பதவியை அடைந்த இவரது பிறந்த நாளே ஆசிரியர் தினமாக செப்டம்பர் 5ம் நாள் கொண்டாடப்படுகிறது.ஆல்பர்ட் ஐன்ஸ்டின் பொது சார்புத்துவக் கோட்பாடு மற்றும் சிறப்பு சார்புத்துவக் கோட்பாடுகளைக் கண்டுபிடித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1921 பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டே சார்புக் கோட்பாட்டு கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசைப்பெற்றார்.

கலிலியோ
இத்தாலியின் பைசா நகரத்தில் பிறந்த கலிலியோ கணிதப் பேராசிரியராகப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். ஆசிரியப் பணியிலிருந்த படியே பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு தான், சூரியனை மையமாகக் கொண்டே அனைத்து கோள்களும் சுற்றி வருகின்றன என்று கண்டறிந்தார்.

ஐசக் நியூட்டன்
சர் ஐசக் நியூட்டன் இயற்பியல் பேராசிரியராக பணிபுரிந்தார். பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் தொலைநோக்கியைக் கண்டறிந்தார். மாணவர்களின் அறிவியல் வழிகாட்டியாக திகழ்ந்தார்.அலெக்சாண்டர் கிரகாம் பெல் தொலைபேசியைக் கண்டு பிடித்த கிரகாம் பெல், காது கேளாதோர் பள்ளியில் சிறந்த ஆசிரியராகப் பணியாற்றி, அவர்களுக்கு நல்ல முறையில் கல்வியைக் கற்றுக் கொடுத்தவர். சாவித்ரிபாய்புலே மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சாவித்ரிபாய்புலே என்னும் பெண்மணி தான் முதல் பெண் ஆசிரியராவார். இந்திய வரலாற்றில் பெண் கல்விக்காக முதல் பள்ளி அமைத்தவர்.

பெண்ணுரிமைக் காக குரல் கொடுத்த சமூகப் போராளியும் ஆவார். பள்ளிப் பணியுடன் ஆதரவற்றோர் இல்லம், பிரசவ மருத்துவமனை ஆகியவற்றை உருவாக்கி சேவைகள் செய்தார். இவர் இந்தியாவின் நவீன கல்வி மற்றும் பெண் கல்வியின் அன்னை ஆவார். வாழ்க்கை ஒரு கண்டிப்பான ஆசிரியர். அது பாடங்கள் நடத்தி விட்டு பரீட்சை வைப்பதில்லை. பரீட்சைகள் வைத்து விட்டு தான் பாடங்களையே சொல்லிக் கொடுக்கிறது. அந்தக் கண்டிப்பான ஆசிரியரைக் கையாள கற்றுத் தருகிறவர்களே, நல்ல ஆசிரியர்கள். ஆகவே நமக்கு அறிவும் ஒழுக்கமும் கற்று தரும் ஆசிரியர்களை வணங்குவோம்!

-பா.பனிமலர் தமிழ்த்துறைத் தலைவர் இ.மா.கோ. யாதவர் மகளிர் கல்லுாரிமதுரைpanimalartamil75@gmail.com

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement