Advertisement

'பிளாஸ்டிக்' ஆதிக்கம்...

உணவுப் பொருள் பாதுகாப்பு மட்டும் இன்றி எண்ணெய் பால் ஆகியவற்றை விற்கும் எளிதான முறையில் 'பிளாஸ்டிக்' இன்று பல உருவங்களில் சமூகத்தை ஆதிக்கம் செலுத்துவது அதிகரித்திருக்கிறது. தமிழகத்தில் பிளாஸ்டிக் தடையை அரசு அறிவித்து அதைப் பயன்படுத்தும் கடைகள் மற்ற நிறுவனங்களுக்கு அதிக அபராதமும் விதிக்க முன்வந்திருக்கிறது.

சில ஆண்டுகளாக பிளாஸ்டிக் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகரித்ததற்கு காரணம் அதை எளிதாக கையாள முடிகிறது என்பதால் வர்த்தகத்தில் அதன் தாக்கம் அதிகரித்திருக்கிறது. எளிதில் இதை ஒரே நாளில் ஒழித்து விடுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. தமிழகத்தில் சில இறைச்சிக் கூடங்கள் காய்கறி விற்பனைக்கூடங்களில் பாத்திரம் அல்லது துணிப்பை கொண்டு வந்து வாங்கும் நுகர்வோருக்கு விலையில் சிறிது சலுகை தரப்படுவது வரவேற்கத்தக்கது.

ஆனால் பால் விற்பனையில் பிளாஸ்டிக் பால் பை என்பது மிகவும் பாதிக்காத பிளாஸ்டிக் மைக்ரான் தரம் அதிகம் கொண்டது. அதே போல எண்ணெய் மற்றும் சில பொருட்கள் பாக்கெட் நடைமுறையில் இதன் ஆதிக்கம் அதிகம். ஒரு காலத்தில் தமிழகத்தில் 'ஆவின்' பாலை பாட்டிலில் தந்து விட்டு அதன் பிறகு அந்த பாட்டிலை விலைக்கு வாங்கிய காலமும் இருந்தது. அதற்காக பாலிதீன் பாக்கெட்டை தனியாக எடுத்து வைத்து எடைக்கு போடும் பழக்கமும் இருந்தது.பொதுவாக அலுமினிய பாத்திரங்கள் பழையதானால் அல்லது அது உடைந்தால் அல்லது இரும்புப் பொருட்கள் என்றால் அதை வாங்கி மீண்டும் சுத்தமான உலோகமாக மாற்றும் நடைமுறை போல அல்ல பிளாஸ்டிக் கழிவுகள்.

எங்கெல்லாம் அதிக குடியிருப்புகள் அதிகரிக்கிறதோ அங்கே ஏற்படும் டன் கணக்கில் உள்ள குப்பைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம். சென்னை மெரினாவிலும் இதே பிரச்னை தான். தற்போது பிரதமர் மோடி பிளாஸ்டிக் எதிர்ப்பு முகாமை தொடங்கி இருப்பதுடன் அதை உலக அரங்கிலும் கூறியிருக்கிறார். தவிரவும் பிளாஸ்டிக் கழிவுகள் மாடுகள் வயிற்றில் கிலோ கணக்கில் தேங்குவது ஏன் கடல் சுறா வயிற்றில் கூட இக்கழிவு தங்குவது ஆகியவை சமுதாயத்தின் வளர்ச்சியில் உள்ள மறுபக்க அபாயத்தின் அறிகுறி. ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் குப்பை மக்காத குப்பையாக காலம் காலமாக தங்கும். இது பூமியின் வளத்தை அழிக்கும்.

நுகர்வோர் வாங்கும் 75 சதவீதப் பொருட்களில் 'பேக்கேஜிங்' என்று கூறப்படும் பொட்டணமாக்கி பாதுகாக்கும் நடைமுறையிலும் பாட்டில் குளிர்பானங்கள் தண்ணீர் என்று பல விஷயங்களில் இது முன்னிலை வகிக்கிறது. பெட்ரோல் தயாரிப்பு வளத்தில் உருவாகும் 'இதை 'பாலி எதிலின்' என்ற பெயடன் அழைப்பர். இந்த பிளாஸ்டிக் முதலில் 'சிறிய உருண்டைகள் போல' தயாரிக்கப்படும். அதற்குப்பின் அது மைக்ரான் என்ற தர அளவீட்டில் சிலவகை பொருட்கள் மறுசுழற்சிக்கு ஏற்பவும் மற்றவை நாம் அதிகம் பயன்படுத்தும் சாதாரண பிளாஸ்டிக்காக உருவெடுக்கிறது. ஆனால் இன்றைய பிளாஸ்டிக் தயாரிப்பில் மறுசுழற்சி என்பது மொத்த உற்பத்தியில் 20 சதவீதம் கூட இல்லை.

பிளாஸ்டிக் தயாரிப்பு தொழில் கொடிகட்டிப் பறக்கும் சமயத்தில் இதை எதிர்த்து அதன் அளவைக் குறைத்தால் மாற்று ஏற்பாடு தேவை. நுால் தயாரிப்பு பைகள் அல்லது நம் நாட்டில் அதிகம் கிடைக்கும் சணல் மூலம் மாற்றுப் பொருட்களை தயாரிக்க முன்னேற்பாடுகள் தேவை அது சுலபமானதல்ல. ஏனெனில் பிஸ்கட் என்ற சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பும் தயாரிப்பில் பலவகை வித்தியாசமான பேக்குகளில் வருகின்றது. உலக அளவில் பிஸ்கட் விற்பனை ரூபாய் 3.5 லட்சம் கோடி என்ற புள்ளி விவரம் அதன் அளவு கடந்த தாக்கத்தைக் காட்டுவதாகும். அதே சமயம் 'மெக்கன்சி' போன்ற நிறுவனங்கள் உட்பட பலவும் இதன் மறுசுழற்சிக்கு புதிய உத்திகளைக் கண்டறிய வேண்டும் என்ற கருத்து உள்ளது.

தங்கள் பொருட்களால் கிடைக்கும் லாபத்தின் அளவில் 70 சதவீதம் வரை மறுசுழற்சிக்கான செலவு பிடிக்கும் என்பதால் நிறுவனங்கள் லேசில் இந்த முடிவை எடுக்காது. அதற்கு முன் நம் நாட்டில் மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசுடன் இணைந்து இதை அமல்படுத்த என்ன உத்தி என்று முடிவாகவில்லை. ஏனெனில் வெறும் சட்டங்கள் மட்டும் சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டுவருமா அதற்கேற்ற மற்ற அணுகுமுறை அளவீடுகள் எப்படி என்பதை அறிய காலம் இன்னமும் கனியவில்லை.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement