Advertisement

'ஸ்டாலினுக்கு மகிழ்ச்சி இல்லையே...!'


'ஸ்டாலினுக்கு மகிழ்ச்சி இல்லையே...!'

கூட்டுறவு துறை சார்பில், சென்னை, ஆற்காடு சாலையில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின், பெட்ரோல் பங்க்கை, கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு, சமீபத்தில் துவக்கி வைத்தார். பின், நிருபர்களிடம் அவர் பேசுகையில், 'வேலுாரில், தி.மு.க., மயிரிழையில் தான் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி கிடைத்தும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மகிழ்ச்சி அடையவில்லை. வேலுாரில், ஸ்டாலினும், அவரின் மகனும் மட்டுமே, தி.மு.க.,வுக்கு ஓட்டு கேட்டனர். அவர்கள் இருவர் மட்டும் தான் தி.மு.க.,வா...' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'இந்த பேச்சை, தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் முன் வைத்திருந்தால், அ.தி.மு.க., வேட்பாளர் மயிரிழையில் வெற்றி பெற்று இருப்பாரே' என, முணுமுணுக்க, அருகில் இருந்த, அ.தி.மு.க.,வினர் அதை ஆமோதிப்பது போல தலை அசைத்தனர்.

'பட்ஜெட்டை எகிற வைத்திருப்பாரோ!'

தமிழ் வளர்ச்சி துறை சார்பில், இளந்தமிழர் இலக்கிய பட்டறை, மதுரை உலக தமிழ் சங்கத்தில் நடந்தது. தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர், பாண்டியராஜன் தலைமை வகித்தார்.கூட்டத்தில், பேராசிரியரும், பட்டிமன்ற நடுவருமான, கு.ஞானசம்பந்தன் பேசுகையில், 'சினிமா துறையில், நான் நுழைந்த தருணம். ஒரு படத்தில், ஒன்றிரண்டு தக்காளியை சாப்பிட்டு கொண்டே, நடிகை ஒருவரிடம் பேச வேண்டும் என்பது காட்சி.'ஒரு கூடை நிறைய தக்காளி வைத்திருந்தனர். நானும், ஒன்றிரண்டு தக்காளிகளை சாப்பிட்டபடி பேசினேன். சரியாக, 'டேக்' வரவில்லை. ஒரு கூடை முழுவதையும் சாப்பிட்டும், 'டேக்' சரியாக வரவில்லை.'பின், 'ஆப்பிள் சாப்பிட்டு கொண்டே பேசவா' என, நான் கேட்க, இயக்குனர் சிரித்து விட்டார். அத்துடன், 'நீங்கள், 'பழம்' பெரும் நடிகர் தான் என பாராட்டினார்' என்றார்.'தக்காளி சாப்பிட்டே, படத்தின் பட்ஜெட்டை எகிற வச்சிருப்பார் போலிருக்கு' என, பார்வையாளர் ஒருவர் கூற, அருகில் இருந்தவர்கள் சிரித்தனர்.

'துரைமுருகன் கிண்டலுக்கு குறைவில்லை!'
சட்டசபை பொதுக்கணக்கு குழு தலைவரான, தி.மு.க.,வை சேர்ந்த, துரைமுருகன் தலைமையிலான குழுவினர், தேனியில் ஆய்வுக்கு வந்திருந்தனர். இக்குழுவில் உறுப்பினராக உள்ள துணை முதல்வர் பன்னீர்செல்வம், தன் சொந்த மாவட்ட ஆய்வு குழு கூட்டத்தில் பங்கேற்காமல், 'ஆப்சென்ட்' ஆனார்.ஆனால், தொகுதி, எம்.பி.,யும், துணை முதல்வர் மகனுமான ரவீந்திரநாத் குமாரும் வந்திருந்தார். துரைமுருகனிடம் நீண்ட நேரம் பேசிய அவரிடம், 'அப்பா வராத குறையை, மகன் நிவர்த்தி செய்து விட்டார்' என்றார்; இதை கேட்ட அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.அப்போது பேசிய, எம்.பி., 'மத்திய - மாநில அரசுகள், மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் நிதி விபரத்தை, எம்.பி.,க்களின் மெயிலுக்கு, 'அப்டேட்' செய்ய பரிந்துரை செய்யுங்கள்,' என, கோரிக்கை வைத்தார்.இதை கேட்ட துரைமுருகன், 'இதை செய்ய வேண்டியது, உங்க டாடி தான். நீங்கள் வீட்டில், 'டிவி' பார்த்து, டிபன் சாப்பிட்டுக்கிட்டே, உங்க டாடியிடம் கோரிக்கை வையுங்கள்; நிறைவேறி விடும்' என்றார்.'துரைமுருகன் கிண்டலுக்கு எப்போதும் குறைவு இருக்காது' என, அதிகாரிகள் குலுங்கி சிரித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement