Advertisement

தடைகளை தாண்டிய வெற்றி

பிரச்னைகளை புரிந்து கொள்ளுங்கள் அது தானாகவே தீர்ந்து விடும் இந்த உலகினை மாற்ற புறப்பட்ட பலரும் தடுமாறும் இடம் தங்களின் முதல் புறக்கணிப்பாகவே இருந்திருக்கும். பிரச்னைகள் எப்போதும் தீர்வுகளுடனே வரும்.நம் பதட்டம் காரணமாகவே தீர்வுகளை கவனிக்க தவறி விடுகிறோம். வாழ்வின் பெரிய இடத்தை அடைந்தவர்களிடம் இந்த இடத்தை அடைவதற்கு எது காரணமாக இருந்தது என்று கேட்டுப் பாருங்கள். அவர்கள் கூறும் பதில் சற்றே ஆச்சர்யமாக இருக்கும். திடீர்னு ஒரு நம்பிக்கை. இப்பிடி செஞ்சா எப்பிடி இருக்கும்னு தோன்றியது. அப்போதைக்கு வந்த அசட்டு தைரியம். அதுவே இப்போ என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டது'. பலரது பதில் இதுபோலவே இருக்கும். காரணம் நிச்சயமாக நம்மால் செயல்பட முடியாது என்ற நிலையில் நமக்குள் கிடைக்கும் நம்பிக்கையே நம்மை அடுத்த நிலை நோக்கி நகரச் செய்யும். அந்த நிலையில் நாம் சற்றே தளர்ந்து போய் நின்று விட்டால் நம்மால் எழ முடியாமல் போய் விடும். நிச்சயமாக உங்களின் நம்பிக்கை உங்களுக்கு வரும் பிரச்னைகளில் இருந்தே தொடங்குகிறது. பிரச்னைகளை விட பெரியது உங்கள் மனநிலை.யோசியுங்கள்காலையில் எழுவதில் தொடங்கி இரவு படுக்கையில் விழுவது வரை நாம் சந்திக்கும் பிரச்னைகளை பட்டியலிட்டுப் பாருங்கள். அவற்றில் நமது கவனக்குறைவால் ஏற்படுபவை எவை என்பதை யோசியுங்கள். சரியாக திட்டமிடாததால் வரும் பிரச்னைகள் எவை என்பதையும் யோசியுங்கள். பெரும்பாலும் தினந்தோறும் வருபவை எதுவும் பிரச்னைகள் இல்லை. அவை எல்லாம் நாம் எளிதில் கடந்து செல்லக்கூடிய சாதாரண சிக்கல்களே. தன்னை நிலை நிறுத்திக் கொள்பவர்கள் ஒருபோதும் சிறிய விஷயங்களைக் கண்டு கலங்கி நிற்க மாட்டார்கள்“என் தவறுகள் முழுவதும் எரிந்து விட்டன'' இது தனது ஆய்வகம் எரிந்தவுடன் தாமஸ் ஆல்வா எடிசன் கூறிய வார்த்தைகள். ஆய்வகம் எரிந்துவிட்டதே என்பதைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் தனது தவறுகளை எரிப்பதற்கான வாய்ப்பு என்ற வகையில் அனைத்தையும் நேர்மறையாக எதிர்கொண்டதால் அவரால் 1030 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற முடிந்தது.

தவறுகள்
ஆரம்ப காலகட்டத்தில் படிக்க லாயக்கற்றவன் என்ற நிலையில் பள்ளியில் இருந்தே விரட்டப் பட்டவரே எடிசன் என்பது அனைவரும் அறிந்தது. அந்த நிலையில் மனதிலே சோர்வு ஏற்பட்டு முடங்கி கிடந்திருந்தால் இன்று உலகம் போற்றும் விஞ்ஞானி ஆகியிருக்க முடியாது. சில தவறுகள் நடைபெறும்போது அதை ஏற்றுக் கொண்டு அடுத்த முறை அந்த தவறு நிகழாவண்ணம் தவறுகளையே அனுபவமாக மாற்றுபவர்களே வெற்றி பெறுவார்கள். பெரிய சாதனையாளர்கள் தனக்கான வாய்ப்புகள் அனைத்தையும் ஏதோ ஒரு நெருக்கடியில் இருந்தே பெற்றுள்ளார்கள். பாதுகாப்பாகவும் அமைதியாகவும் நமது வாழ்வு சென்று கொண்டிருந்தால் அந்த வாழ்வில் பெரிதாக சுவாரசியம் ஏதும் நிகழ்ந்து விடுவதில்லை.“நீங்கள் அடிமைகள்; முதல் வகுப்பிலே பயணம் செய்ய இயலாது”என்று மகாத்மாவை ரயில் பெட்டியில் இருந்து இறக்கி விட்ட அந்த தருணமே காந்திக்கு இந்தியர்களின் நிலை தெளிவாக புரிய ஆரம்பித்தது. அப்போது இருந்தே அவர் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தார். அந்த நிகழ்வு நடைபெறா விட்டாலும் எதோ ஒரு வகையில் அவர் விடுதலைப் போராட்டம் நோக்கி வந்திருப்பார். ஆயினும் அந்த நிகழ்வு அவரை பெரிதும் பாதித்த ஒன்று. அதை நேர்மறையாக மாற்றிக் கொண்டதால் அவரால் சிறந்த தலைவராக முடிந்தது.

குழப்பங்கள்

“மனசுஏதோ மாதிரி இருக்குது என்னனு தெரியல''பல நேரங்களில் நமது மனம் குழப்பமான நிலை அடையும்போது வெளிப்படும் வார்த்தைகள் இவை. மனதிற்குள் இருக்கும் குழப்பங்களை வெளியே சொல்ல இயலாத நிலையினை என்னவென்று சொல்வது. இனம் புரியாத சோகமும் வருத்தமும் நம்மை அறியாமல் நமக்குள் நுழையும்போது மனம் சற்றே தடுமாற்றம் அடையும். பதட்டம் அதிகரிக்கும்போது நாம் அதிகமாக யோசனை செய்வது கிடையாது. ஒவ்வொரு பிரச்னையையும் அதன் வேர் வரை சென்று அலச முடியாது. ஒவ்வொரு நாளும் நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள் எவை என யோசித்தால் சாதாரணமாக கடந்து செல்லும் விஷயங்களாகக்கூட இருக்கும். எத்தனை வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தாலும் சில விஷயங்கள் நமது நிம்மதியைக் கெடுத்து துாங்க விடாது. சரி அந்த பிரச்னை தீர்ந்தவுடன் துாக்கம் வந்திடுமா? என்று யோசனை செய்து பார்த்தால் அடுத்த பிரச்னை நமக்காக காத்திருக்கும்.ஆனால் மிகச்சிறந்த ஓய்வுதான் பிரச்னைகளை தீர்க்க எளிதான வழி என்பது பலருக்கும் புரிவதில்லை. படுத்த அடுத்த 5 நிமிடங்களில் ஒருவன் துாங்குகிறான் என்றால் உண்மையில் அது மிகப்பெரிய வரம்தான். அவனுடைய மனம் அவனுக்கு அழகாக கட்டுப்படுகிறது. சாதாரணமாக படுப்பதற்கும் துாங்குவதற்கும் உள்ள கால இடைவெளி எவ்வளவு என்று யோசியுங்கள். நிச்சயமாக இடைவெளி அதிகம் ஆக அதிகம் ஆக பிரச்னைகளுக்குள் சிக்கி இருக்கிறோம் அல்லது சிக்கப் போகிறோம் என்றே அர்த்தம்.

மனதில் பாதிப்பு
உலக அளவில் ஆன்மிகத்தையும் அமைதியையும் போதித்து வருகிறது நமது நாடு. ஆனால் இன்றைய சூழலில் மன அளவில் பாதிக்கப்பட்டோர் அதிகம் இருக்கும் நாடாக மாறி வருகிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. காரணம் என்னவென்று யோசித்தால் பெரும்பாலும் சமூக ஊடகங்கள் என்றும் கூறுகிறார்கள். அறிவியல் கண்டுபிடிப்புகளை நாம் மனித குல வளர்ச்சிக்கு பயன்படுத்தினால் அது நன்மையைத் தரும். அதே நேரத்தில் எதிர்மறையாக பயன்படுத்த தொடங்கினால் அது விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. உலகின் புகழ்பெற்ற விருதான நோபல் பரிசு உலக அமைதிக்கு வழங்கப்படுகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் அந்த பெயருக்கு சொந்தக்காரரான ஆல்பிரெட் நோபல், “என் வாழ்நாளில் மிகப்பெரிய துரதிர்ஷ்டம் டைனமைட் ( வெடிபொருள்) கண்டுபிடித்ததுதான். அதனால் ஆக்கப்பூர்வமான நிகழ்வுகள் நடக்கும் என்றே நினைத்தேன். ஆனால் மலைகளைப் பிளந்து சாலைகளைப் போட நாம் கண்டுபிடித்த அந்த பொருள் மனங்களைப் பிளந்து பிணங்களை உருவாக்குவதை பார்க்கும்போது மனம் கனக்கிறது. இந்த பாவத்தை தொலைக்கவே எனது சொத்து அத்தனையும் உலகிலே யார் அமைதியை நிலை நாட்ட முயல்கிறார்களோ அவர்களுக்கே வழங்குகிறேன்” என்றவாறு எழுதிவைத்த உயில்தான் இன்று நோபல் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.

வாழ்வு இனிக்கும்
பிரச்னைகளை வாய்ப்புகளாக பாருங்கள் வாழ்வே இனிக்கும். பல நேரங்களில் நாம் எதிர்பாராத பல பிரச்னைகளும் அவமானங்களுமே நம்மை வாழ்வின் உயரத்திற்கு அழைத்துச் செல்லும். இதற்கு நல்ல மனப்பக்குவமும் கடுமையான முயற்சிகளும் அசாத்திய துணிச்சலும் தேவை. பல நேரங்களில் நாம் கடுமையான பணிச்சுமை காரணமாக தவறான முடிவுகளுக்கு ஆளாகி விடுவோம். சில நாட்கள் கழித்து நாம் பதட்டப் பட்ட தருணங்களை நினைத்துப் பார்க்கும்போது “இதுக்காடா இவ்ளோ பயந்தோம்” எனும் வகையில் சிரித்துக்கொண்டே கடப்போம். பிரச்னைகளை எதிர்கொள்ளும் பக்குவம் வந்துவிட்டால் பிரச்னை ஏதுமில்லை என்ற நிலை வரும்.

வாழ்வின் வெற்றி
“எதிர்பாராததை எதிர்பாருங்கள்”வாழ்வை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் வார்த்தைகள். இவை எப்போது நிகழும் என்பதை நாம் அத்தனை எளிதாக கணித்திட இயலாது. கடைசி நிமிடத்தில் கூட சில மாற்றங்கள் இருக்கும். நாம் எதிர்பாராத வெற்றிகள் நம்மைச் சேரும். நாம் அடைந்த தோல்விகள் சில நேரங்களில் வெற்றிகளை நோக்கி அழைத்துச் செல்லும்.நாளை நமக்கு இதுவெல்லாம் நடக்கும் என்று தெரிந்து விட்டால் அதில் துளியளவு கூட சுவாரசியம் இருக்காது. மாறாக ரசனையற்ற ஒரு வாழ்வாக அது அமைந்து விடும். அதுபோலவேதான் நம்மைச் சூழவரும் பிரச்னைகளும். தடைகளைத் தாண்டி நாம் பெறும் வெற்றிதான் நமது வாழ்நாள் முழுக்க நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும்.-முனைவர் நா.சங்கரராமன்எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லுாரி, குமாரபாளையம்99941 71074

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement