Advertisement

வாழ்வாதாரம் மேம்படும்!

வாழ்வாதாரம் மேம்படும்!
சொ.செல்வராஜ், கோ - ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் (பணி நிறைவு), சென்னையிலிருந்து எழுதுகிறார்: கோ - ஆப்டெக்சின் மேலாண்மை இயக்குனராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் இருந்த போது, விற்பனை அதிகரிப்புக்கு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இதனால், நஷ்டத்தில் இயங்கிய நிறுவனம், விற்பனை அதிகரிப்பால், லாபகரமாக இயங்க வழி வகுத்தார். 'வேஷ்டி தினம்' அறிமுகம் செய்து, விற்பனையில் சகாப்தம் படைத்தார்.அதன் தொடர்ச்சியாக, கோ - ஆப்டெக்சில், தற்போது மேலாண்மை இயக்குனராக பணியாற்றும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியான, வெங்கடேஷும், கோ -ஆப்டெக்சின் வர்த்தகத்தை பெருக்கும் நோக்குடன், தனியார் நிறுவனங்களுக்கு இணையாக, ஷோ ரூம்களை நவீனமயமாக்கி வருகிறார்.சென்னையில் நான்கு உட்பட தமிழகத்தில், ௨௦ ஷோரூம்கள் நவீன மயமாக்கப்பட்டுள்ளன. இதனால், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும், விற்பனையும் அதிகரித்து வருகிறது.'புதிய, டிசைன் சேலை ரகங்களை வடிவமைக்க, குஜராத் மாநிலம், ஆமதாபாதிலுள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் பயின்றோர் அடங்கிய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, புதிய டிசைன்கள் வடிவமைக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்து உள்ளோம்' என, மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும், 80 கண்காட்சிகள் நடத்த, கோ - ஆப்டெக்ஸ் திட்டமிட்டுள்ளது. இணையதள வர்த்தகம் அதிகரிப்பால், கடந்த ஆண்டு, கோ - ஆப்டெக்ஸ் வாயிலாக, 275 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, 300 கோடி ரூபாய்க்கு, வர்த்தகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்க, வாழ்வாதாரத்தை உயர்த்த, பொதுமக்கள் அனைவரும் கைத்தறி துணிகளை அதிகளவில் வாங்கி பயன்படுத்த, 'தேசிய கைத்தறி' தினம், ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.தமிழகம் முழுவதும் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், உற்பத்தி செய்த கைத்தறி ரகங்களை, கோ - ஆப்டெக்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்கிறது. தன் விற்பனை மையங்கள் வாயிலாக விற்று, ஏழை நெசவாளர்களின் வாழ்வாதாரத்திற்கும், நெசவாளர்களின், தொடர் வேலைவாய்ப்புக்கும் வழி வகுத்து வருகிறது.புதிய தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட, பட்டு மற்றும் பருத்தி கைத்தறி ரகங்களை வாங்கி, பொதுமக்கள் பயன்படுத்துவதன் வாயிலாக, கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் இன்னும் மேம்படும்!


விவசாயிகாதுகளில் 'பூ!'

வி.எம்.சந்தோஷம், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: ஆங்கிலேய இன்ஜினியர், சர் ஆர்தர் காட்டன் தான் முதன் முதலில், கங்கை - காவிரி ஆறுகள் இணைப்பை வகுத்து, தோராய செலவாக, ௫.௫ லட்சம் கோடி ரூபாய் தேவை என்று மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தார். வட மாநில நதிகள் இணைப்பு, மத்திய மாநில நதிகள் இணைப்பு, தென் மாநில நதிகள் இணைப்பு என்று மூன்று பிரிவுகளாக்கி, நதிகளை இணைக்க வேண்டும் என்று, செயல் திட்டத்தையும் தயாரித்து அனுப்பினார்.சர் சி.வி.ராமசாமி அய்யரும், இதை வழிமொழிந்து, சிபாரிசு செய்தார். பின், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, செயல் வடிவம் கொடுக்க, நிதியும் ஒதுக்கினார். ஜனாதிபதியாக, அப்துல் கலாமும் நதிகள் இணைப்பை வலியுறுத்தினார்.ஆனால், இன்று வரை எந்த நதியும், எதனுடன் இணைக்கப்படவே இல்லை. கோதாவரியும், காவிரியும் கூட இப்படித் தான் போகுமோ. ஆனால், அதை பேசிக் கொண்டே இருக்க வேண்டும்.'காவிரி -- கோதாவரி இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும்' என, தமிழக முதல்வர், இ.பி.எஸ்., உறுதி அளித்துள்ளார்; இது, மகிழ்ச்சி அளிக்கக்கூடியது. அதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு, நிதி ஆதாரமும் செய்ய, வழி வகை செய்யப்பட்டுள்ளது.காவிரி - கோதாவரி இணைப்பு திட்டம், இன்று, நேற்றல்ல... பல ஆண்டுகளாகவே, இதை சொல்லியே, விவசாய மக்களின் காதுகளில் பூச்சுற்றி வருகின்றனர், தமிழக அரசியல் தலைவர்கள். திட்டத்தை பற்றி, ஆட்சியில் இருந்தோர், பிரமாதமாக பேசி, நாளையே இணைக்கப்பட்டு விடும் என்பதாக, மக்களை நம்ப வைக்கின்றனர்.தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டுக்குப் பயணம் செய்ய இருக்கிறார், முதல்வர், இ.பி.எஸ்., பதவியில் இருக்கும்போதே, வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, திட்டங்களை முடித்து விட வேண்டும் என, துடிக்கிறார். 'விவசாய முதலீடு என்று சொல்லாமல், தொழில் முதலீடு' என்கிறார். காரணம், தமிழகம் ஒரு விவசாய பூமி என்பதை மறந்து விட்டது தான்.முதல்வர், இ.பி.எஸ்.,சின், காவிரி - கோதாவரி இணைப்பு திட்ட உறுதி பேச்சுக்கு, சபாஷ் போடலாம்!


மதுரை - கோவைதினசரி ரயில்கள் தேவை!

ஆர்.பத்மநாபன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: பழநி - பொள்ளாச்சி தடத்தில், ௨௦௧௫, ஜன., ௯ முதல், அகல ரயில் பாதையில், ரயில்கள் இயக்கப்படுகின்றன. பொள்ளாச்சி - போத்தனுார் தடத்தில், ௨௦௧௭, மார்ச் ௨௪ முதல், அகல ரயில் பாதை திறக்கப்பட்டு, ஓரிரு ரயில்கள் மட்டும், மக்களுக்கு தேவையான நேரங்களில் இயக்கப்படாமல், தேவையற்ற நேரங்களில் இயக்கப்படுகின்றன.திண்டுக்கல் - பழநி, 59.3 கி.மீ., அகல ரயில் பாதைக்காக, 250 கோடி ரூபாயும்; பழநி - பொள்ளாச்சி, 63 கி.மீ., ரயில் பாதைக்காக, 320 கோடி ரூபாயும்; பொள்ளாச்சி - போத்தனுார், ௪௦ கி.மீ., அகல ரயில் பாதைக்காக, ௩௪௦ கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.இவ்வளவு செலவு செய்து என்ன பயன்... மீட்டர்கேஜ் தடத்தில் இயங்கிய ரயில்களை, மீண்டும் அகல ரயில் பாதையில் இயக்க, ரயில்வே தயக்கம் காட்டுவது ஏன்?ஓ.எம்.எஸ்., வாகனம் வாயிலாக, 2018 ஜூன், 10ல், பொள்ளாச்சி - கிணத்துக்கடவு பாதையை ஆய்வு செய்த அதிகாரிகள், 'ரயிலின் வேகம், ௬௦லிருந்து, ௮௦க்கும், ௧௦௦க்கும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்' என கூறினர். ஆனால், பல மாதங்கள் ஆகியும், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.மதுரை - பொள்ளாச்சி - கோவை அகல ரயில் பாதையில், மீட்டர் கேஜ் பாதை காலத்தில் ஓடிய ரயில்களை, மீண்டும் இயக்குவதோடு, இப்பாதையில் மூடப்பட்ட செட்டிபாளையம், நல்லாட்டி பாளையம், கோவில்பாளையம், திப்பம்பட்டி, பூலாங்கிணறு, கணக்கப்பட்டி, பாலகண்ணுாத்து, ரெட்டியார் சத்திரம் ஆகிய, எட்டு ரயில் நிலையங்களையும், மீண்டும் திறக்க ரயில்வே முன் வர வேண்டும்!

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Raj - costanoa,யூ.எஸ்.ஏ

    "காவிரி - கோதாவரி இணைப்பு திட்ட உறுதி பேச்சுக்கு" அரசியல் வாதி பேச்சு ஆட்சி மாறினா போச்சு..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement