Advertisement

உதவிகள் செய்து உயர்வோம்

Share

ஒரு பொதுநலத் தொண்டு நிறுவனத்துக்கு என்னைச் சொற்பொழிவாற்ற அழைத்தார்கள். பேனரில் அவர்கள் எழுதிப் போட்டிருந்த வாசகம் என்னைக் கவர்ந்தது.“Joy of Giving” கொடுப்பதில் இன்பம்.நான் பேசும்போது இந்த வாசகம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று கேட்டேன். இது ஓர் ஆங்கிலப் புத்தகத்தின் தலைப்பு என்றார்கள். இதற்கு இணையான தமிழ்ச் சிந்தனை உண்டா என்று கேட்டேன். எல்லோரும் யோசித்தார்கள். இப்போது அல்ல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இலக்கியத்தில் இந்தச் சிந்தனை உள்ளது. “ஈத்து உவக்கும் இன்பம்” என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார். கொடுத்து மகிழ்வதில் ஏற்படும் இன்பம்.


யார் சிறந்தவர்

கொடுப்பவர் சிறந்தவரா? பெறுகிறவர் சிறந்தவரா? பெறுகிறவர்தான் சிறந்தவர். ஏன் தெரியுமா? கொடுப்பவர் பொருளை மட்டும்தான் கொடுக்கிறார். பெறுகிறவர்தான் கொடுப்பவருக்கு புண்ணியத்தைக் கொடுக்கிறார். மகிழ்ச்சியைக் கொடுக்கிறார்.இதற்கு ஒரு நிகழ்ச்சியை உதாரணமாகச் சொல்வார்கள். ஒரு சிறு நகரத்தில் இலவச மருத்துவமனை கட்ட வேண்டும் எனச் சிலர் முயற்சி எடுத்தார்கள். பிரமுகர்கள் சிலரிடம் பணம் வசூல் செய்தார்கள். அந்த ஊரில் ஒரு பணக்கார கஞ்சன் இருந்தார். பணம் வசூல் செய்கிற குழுவினர் அவரிடமும் போனார்கள். விஷயத்தைச் சொல்லி ஒரு லட்ச ரூபாய் செக் கேட்டார்கள். அவர் பதறிப் போனார். பயப்படாதீர்கள். ஒரு நோக்கத்தோடுதான் கேட்கிறோம். மற்றவர்களிடம் வசூல் முடிந்த பிறகு உங்கள் செக்கை உங்களிடம் திருப்பிக் கொடுத்து விடுவோம். இது உறுதி என்றனர். அவரும் கொடுத்தார். அந்த ஏற்பாடு நன்றாகவே வேலை செய்தது.பணமே கொடுக்காத அவரே ஒரு லட்ச ரூபாய் கொடுத்திருக்கும்போது நாம் அதிகமாகக் கொடுக்க வேண்டும் என்று வாரி வழங்கினார்கள். அவரையும் வாயார வாழ்த்தினார்கள். இவரைப் பார்க்க வந்த நண்பர்களும் உறவினர்களும் புதிய மரியாதையோடு அவரிடம் பழகினார்கள். அவருக்குள்ளேயே ஒருவித மகிழ்ச்சியான பரவசம் ஏற்பட்டது. பேசியபடி செக்கை திருப்பிக் கொடுக்க அந்த குழுவினர் வந்தனர். முகத்தில் ஒருவித பரவசத்தோடு அவர் சொன்னார் : “செக்கை பணம் ஆக்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள். நான் புது மனிதனாகி விட்டேன்”
உயிருக்கு ஊதியம் எது


திருவள்ளுவர் இதைப்பற்றி ஆழமாகச் சிந்திக்கிறார். நமது உடல் பல இடங்களுக்குப் பயணப்படுகிறது. அதை உயிர்தான் இயங்க வைக்கிறது. ஓர் ஊர்தியை நாம் வாடகைக்கு எடுத்துப் பயன் படுத்தும்போது அதற்கு வாடகை கொடுக்கிறோம். குடியிருக்கும் வீட்டுக்கு வாடகை கொடுக்கிறோம். நமது இயக்கத்துக்கும் வாழ்வுக்கும் உதவியாக இருக்கும் உயிருக்கு என்ன ஊதியம் கொடுக்கிறோம்? நாம் பிறருக்குச் செய்கிற உதவிகள் தான் உயிருக்கு நாம் தரும் ஊதியம்“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லதுஊதியம் இல்லை உயிர்க்கு” என்பது வள்ளுவம்.“பிறரைத் துாக்கிவிடக் குனிபவனே அதிகம் உயர்த்தப்படுவான்” என்கிறார் லிங்கன். “உலகமே என் நாடு உதவி செய்வதே என் மதம்” என்கிறார் தாமஸ் பெய்ன்.கண் பார்வையற்றோர் கையேந்தும்போது பலருக்குக் கண் தெரிவதில்லை. பாட்டுப்பாடி அவர்கள் காசு கேட்கும்போது பலருக்கு காது கேட்பதில்லை என்று சாடுகிறார் ஒரு சிந்தனையாளர்.உதவி செய்யப் பணம் இல்லையே என்று சிலர் எண்ணலாம். மனம் இருந்தால்போதும் சின்னச்சின்ன உதவிகள் செய்யலாம்.சாலையின் நடை பாதையில் ஒருவர் வாழைப் பழங்களைத் தின்று விட்டு தோல்களைப் போட்டு விட்டார். இவர் ஒரு வகை. நடந்து வந்த ஒருவர் தோலை மிதித்து வழுக்கி விழுந்துவிட்டார். இவர் ஒருவகை. அடுத்து வந்த ஒருவர் புத்திசாலித்தனமாகத் தோலை மிதிக்காமல் தாண்டிப் போய்விட்டார். இவர் ஒருவகை. அடுத்து வந்த ஒருவர் எச்சரிக்கையாக தோலை மிதிக்கவில்லை. அது மட்டுமல்ல. அடுத்து வருகிற யாரும் வழுக்கி விழுந்து விடக்கூடாது என்பதற்காக தோல்களை எடுத்து அருகிலிருந்த குப்பைத் தொட்டியில் போட்டு விட்டுப் போனார். இவர் ஒருவகை. இதில் நாம் எந்த வகையாக இருக்கப் போகிறோம்?


உடல் உறுப்பு தானம்
ரொட்டித் துண்டுகள் எப்படிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும் என்று ஒரு மகான் கேட்டார். ஜாம் தொட்டுச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும் என்றார் ஒருவர். தேன் தொட்டுச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும் என்றார் இன்னொருவர். “அதையெல்லாம்விட பசித்திருக்கும் ஒருவருக்குப் பகிர்ந்து கொடுத்து விட்டுச் சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்” என்றார் மகான். “ரத்தம் சிந்தினால் அபாயம்ரத்தம் கொடுத்தால் அபயம்” என்பார்கள். கண்தானம் மிகச் சிறந்தது. மூளைச் சாவில் இறந்து போன தனது மகனின் கண்களைத் தானம் செய்ய முன்வந்தாள் ஒரு தாய். கண்கள் தேவைப்பட்ட இன்னொரு இளைஞனுக்கு அந்தக் கண்கள் பொருத்தப்பட்டன. அவனுக்குப் பார்வை வந்து விட்டது. அந்தத் தாயைப் பாராட்ட விழா நடத்த ஏற்பாடு செய்யப் பட்டது. அப்போது அந்தத்தாய் சொன்னாளாம்: “என் மகன் சாகவில்லை. இதோ இந்த இளைஞனின் முகத்தில் பொறுத்தப்பட்டிருக்கும் கண்கள் மூலம் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்”. எத்தகைய உணர்ச்சி பாருங்கள்.

புறநானுாற்றுச் சிந்தனை

இந்த உலகம் யாரால் இயங்கிக் கொண்டிருக்கிறது? அரசர்களாலா? கோடீஸ்வரர்களாலா? இல்லை. கிடைத்தற்கரிய இந்திரன் அமிழ்தம் கிடைத்தாலும் தான்மட்டும் உண்ணாமல் தேவையானவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்து உண்பவர்களால் தான் இந்த உலகம் வாழ்கிறது. “உண்டாலம்ம இவ்வுலகம்இந்திரன் அமிழ்தம் இயைவதாயினும் இனிதென தமியர் உண்டலும் இலரே….தமக்கென முயலா நோன்தாள்பிறர்க்கென முயலுநர் உண்மையானே” என்கிறது புறநானுாறு.காட்டுமிராண்டிக் காலத்தில் விலங்குகளைப்போல வேட்டையாடித் தான்மட்டும் உண்ட மனிதன், மற்றவர்களுக்குக் கொடுக்கலாம் என எண்ணிய போதுதான் மனிதம் ஜனித்தது. அப்போதுதான் விலங்குகளிலிருந்து மனிதன் வேறுபட்டான்.
வள்ளலாரின் சிந்தனை
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்வீடுதோறும் இரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உள்ளம் பதைத்தேன்” என்று பதறிய வள்ளலார் வடலுாரில் வருகிற எல்லாருக்கும் உணவளிக்கும் தர்ம சாலையை ஏற்படுத்தினார்.“படமாடும் கோவில்பரமர்க்கு ஒன்று ஈயில்நடமாடும் கோவில்நம்பர்க்கு இங்கு ஆகாநடமாடும் கோவில்நம்பர்க்கு ஒன்று ஈயில்படமாடும் கோவில் பரமர்க்கு அங்கு ஆகும்”பக்தர்களை நடமாடும் கோவில் என்கிறார் திரு மூலர். அவர்களுக்குச் செய்யப்படும் உதவி ஆண்டவனுக்குப் போய்ச் சேரும். இதனால் ஆண்டவன் புண்ணியத்தையும் தருவானாம். இதைத்தான் பாரதி,“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்ஆலயம் பதினாயிரம் நாட்டல் அன்ன யாவும் புண்ணியம் கோடிஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”பள்ளிக் கூடத்தில் கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் திண்டாடும் ஏழைகளுக்கு எத்தனைபேர் உதவ முன் வருகிறோம் ?- முனைவர். இளசை சுந்தரம்எழுத்தாளர், மதுரை98430 62817

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement