Advertisement

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்...

Share

வாழ்க்கை என்ற பயணத்தில் நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள் ஏராளம். பிறந்தோம், வளர்ந்தோம், இறந்தோம் என்ற சராசரி வாழ்க்கையில் எவ்விதமான தடைகளோ வேதனைகளோ அவமானங்களோ இல்லை. ஆனால் சாதிக்க நினைக்கும் சரித்திர வாழ்வில் தடைகளும் வலிகளும் அதிகம் தானே. இப்படித் தான் வாழவேண்டுமென்று ஒரு சாராரும் எப்படியாவது வாழலாம் என்று ஒரு சாராரும் வாழ்கின்றனர். இவர்களால் கூட வாழ்ந்து விட இயலும். ஆனால் இப்படியும் அல்லாமல் அப்படியும் அல்லாமல் இருக்கும் இடைப்பட்ட பிரிவினரின் வாழ்க்கையே கடினமானதாக இருக்கிறது.
சுயத்தைத் தொலைத்து விட்டு ஏதோ ஒன்றைத் தேடிக் கொண்டு வாழ்பவர்களின் நிலையோ அடிமை முறையாக உள்ளது. இருக்கிற இடம் தெரியாமல் இருந்து விட்டுப் போகலாம் என்ற மன நிலையினரோ உப்பு சப்பில்லாமல் வாழ்ந்து விட்டுப் போகிறார்கள். இவர்கள் இந்த பூமியில் எந்த சுவடையும் விட்டுச் செல்வதில்லை.
அடுத்தவருக்கு அறிவுரை
பிரச்னைகளே இல்லாத வாழ்வு வேண்டும் என்று வேண்டுவதை விட பிரச்னைகளை எதிர் கொள்ளும் மன நிலையை வளர்த்துக் கொள்ளுங்கள். நம்மை காயப் படுத்தவும் விமர்சிக்கவும் எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கும். பின்னால் பேசுபவர்களுக்கு காது கொடுத்தால் நாம் முன்னே செல்லவே முடியாது. உணவு மனம் சூழல் மூன்றும் சரியாக அமைந்தாலே போதும். வாழ்க்கை அழகானதாக மாறிவிடும். ஆனால் உணவினை நம்மால் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். இந்த மனதையும் சூழலையும் சரியாக அமைத்துக் கொள்வதெப்படி என்பதிலே தான் குழப்பமே உண்டாகிறது. அடுத்தவருக்கு அறிவுரை கூறும் மனிதர்களால் தனக்கென துன்பங்கள் வரும் போதுஅதனை அவ்வளவு இலகுவாக கடந்து போக முடிவதில்லை. சுய நலம் வஞ்சனை போலியான நட்பு பொய்யான உறவுகள் இப்படியானவற்றை எதிர் கொள்ளாதவர்கள் யாருமே இல்லை. திருத் தொண்டர் புராணத்தில் வரும்தொழுத கைகளுக்குள்ளும் வாளினை வைத்திருந்த முத்தநாதனைப் போன்ற மனிதர்களும் நம்மிடையே உண்டு. நீயுமா புரூட்டஸ் என்று அதிர்ச்சியாகும் சீசர் போல நமக்கு துரோகம் உண்டாக்கும் களைகள் நம்முடன் இருக்கலாம். துரோகங்கள் நய வஞ்சகங்கள் செய்யும் மனிதர்களால் ஏற்படும் துன்பங்கள் அதிகம்.
ஞானி ஆன சீடன்
நல்லவை, கெட்டவை கலந்தது தானே வாழ்க்கை. இனிப்பு மட்டுமே இருந்தால் வாழ்க்கை திகட்டி விடும் அல்லவா? ஞானி ஒருவனிடம் சீடனாகச் சேர விரும்பினான் ஒருவன்.குரு சொன்னது முதல் 6 மாதங்கள் நீ கவனமற்று இருக்கும் போதெல்லாம் உன்னை நான் அடிப்பேன்.நீ தடுக்கும் போது அடிக்க மாட்டேன்.அதற்குத் தயாரா என்று கேட்க ஒத்துக் கொள்கிறான். பகலில் கவனமுடன் இருக்கும் அவனால் இரவில் தூங்கும் போது அடி விழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதற்கான வழிகளை யோசித்தான். முன்பு போலவே துாங்கினான். ஆனால் குரு அறைக்குள் நுழையும் போது அவன் மனம் விழிப்புணர்வை அடைய ஆரம்பித்தது. அவர் வருவதை அவன் உள் மனம் அவனுக்கு உணர்த்தியது. அவன் அடி வாங்குவதில் இருந்து தப்பித்துக் கொண்டான்..குரு சொன்னார். விழிப்புணர்வு அடைந்து விட்டாய். இனி நீ சீடன் இல்லை. நீயே ஞானி என்றாராம். நமக்கும் கூட இத்தகைய விழிப்புணர்வு நிச்சயமாக தேவை.
மன வலிமை
ஆட்டோ ஒன்றில் வாசகமொன்று தென்பட்டது. வாழத் தான் விடலை. வழியையாவது விடு என்று எழுதப்பட்டிருந்தது. அதனை எழுதியிருந்த மனிதனின் மன நிலையை சற்று யோசித்துப் பார்த்தால் எத்தகைய மன நிலையில் அவன் இருந்திருப்பான் என்பது புரிந்திருக்கும். தயிர்ப்பானைக்குள் விழுந்த இரண்டு தவளைகளில் ஒன்று மேலே ஏறும் போது மற்றொன்று அதனை கீழே இழுப்பதாக ஒரு கதை உண்டு. நாம் முன்னேறும் போது நம்மை கீழே இறக்க ஒரு கூட்டமிருக்கும். உயரே செல்லும் போது நம்மை பலவீனப்படுத்தும் உத்திகளைக் கையாள ஒரு கூட்டம் இருக்கும். எல்லாவற்றையும் கடப்பதற்கு தேவை மன வலிமை. ஆனால் மன வலிக்குள் மூழ்குகிறோம். வாழ்க்கை என்றால் என்னவென்று அறிய நினைத்த ஒருவன் பல தரப்பட்ட மனிதர்களைப் பின் தொடர்கிறான்.ஒரு பூங்காவைக் கடக்கும் சிறுவன் தன் அப்பாவிடம் இந்த வாழ்க்கை அழகானது என்கிறான். மருத்துவமனையைக கடக்கும் நடுத்தர வயதுள்ள ஒருவனோ இந்த வாழ்க்கை துன்பகரமானது என்கிறான். ஆறுதல் சொல்லும் மனிதர்களைக் கண்டவனோ வாழ்க்கை என்பது மனிதர்களால் ஆனதாக கூறுகிறான்.காதல் வசப்பட்ட இளைஞனுக்கோ வாழ்க்கை அழகானதாகத் தெரிகிறது. இறுதியில் தன் தாத்தாவிடம் சென்று கேட்கிறான். வாழ்க்கை என்பது செயல்களால் ஆனது என்கிறார் அவர். ஒருவனது செயல்களே அவனது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன.
எப்படி வாழ்வது
ஒருவன் எத்தனை காலம் வாழ்ந்தான் என்பதை விட எப்படி வாழ்ந்தான் என்பதே சிறப்பாகும். நமக்கான பாதையில் தடுமாறாமல் தடம் மாறாமல் வாழ்வதே அழகானது.வாழ்க்கை ஒன்று; பார்வைகள் பல விதமாக இருக்கிறது. வாழ்க்கையை அதன் இயல்பிலேயே ஏற்றுக் கொள்ள வேண்டும். சுற்றுலா செல்லும் மனிதர்களில் சிலரைக் கவனித்திருப்பீர்கள். பயணத்துடனே தங்கள் வீட்டுச் சிந்தனைகளையும் சுமந்து கொண்டே வருவார்கள். சுமைகளோடே தான் மனிதர்கள் பயணிக்கிறார்கள். அதை இறக்கி வைப்பதற்குத் தயாராக இல்லை எவரும்.அந்த சுமையை ஏற்பதற்கும் யாரும் தயாராக இல்லை. இறுதிப் பயணத்தில் தன்னை சுமக்கும் நாள் வரை இது தொடரும் போது வாழ்க்கை உற்சாகமாக இல்லாமல் கடினமானதாக இருக்கிறது. உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இறுக்கமான முகத்தோடும் மனதோடும் வாழும் வாழ்க்கையில் என்ன இன்பம் இருந்து விடப் போகிறது? பதற்றத்தோடும் குழப்பத்தோடும் வாழ்க்கையின் பெரும்பான்மை கழிந்து விடுகிறது. குழந்தையின் மன நிலையில் இருந்தாலே போதும். வாழ்க்கை ரசனையாகும். இன்முகத்தோடு இதயத்தின் கதவுகளைத் திறப்போம். ஒரே ஒரு நாள் பிறருக்காக சிறு உதவி செய்து பாருங்களேன். வாழ்க்கை எத்தனை அர்த்தமுள்ளது எனப் புரியும்.
புன்னகை முகம்
நல்ல சிந்தனைகளே இல்லாமல் ஆலய வழிபாடு செய்து பயன் ஏதும் இல்லை. எளியவர்க்கு இரங்கும் போது நமது பிரார்த்தனை தானாகவே நிறைவேறுகிறது. மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாம் உதவி செய்யும் போது வாழ்க்கை நம் தேவைகளை தானாகவே நிறைவேற்றி விடும்.சிடு மூஞ்சித்தனமாக இருப்பவர்களை யாருக்கும் பிடிப்பதில்லை. புன்னகைக்க விலை ஏதுமில்லை தானே? உள்ளத்தில் அன்பு மலரும் போது தான் புன்னகை முகத்தில் மலரும். கிடைத்த வாழ்க்கையை அழகாக வாழாமல் வெற்றுப் புலம்பல்களோடே வாழ்வதல்ல வாழ்க்கை.பழைய நினைவலைகளை யோசிக்கும் போது அதில் உள்ள சோகங்களை மட்டுமே அசை போடாமல் நல்ல நிகழ்வுகளையும் அசை போடுங்கள்.இன்முகத்துடன் ரசித்து ருசித்து வாழ்வதே சிறப்பு. ஒரு நாள் தான் வாழ்க்கை என்று தெரிந்த போதும் மலரும் பூக்கள் போல சிரித்துக் கொண்டே வாழலாம். சிறிய செயல்களையும் சிறப்பாகச்செய்ய வேண்டும் என்ற ஆர்வமிருந்தாலே போதும் ஆத்மார்த்தமான ஈடுபாடு அச்செயலை அழகாக்கும்.
பாராட்டுங்கள்
பாராட்டுங்கள்... பாராட்டப்படுவீர்கள். நல்ல மனுஷன்.... இருக்கற வரை எல்லோருக்கும் நல்லது பண்ணிட்டுப் போயிட்டாரு..'இறந்து போன மனிதரின் ஊர்வலத்தில் பேசிக் கொண்டே செல்லும் மனிதர்கள்...இந்த வார்த்தைகளை அவர் இருக்கும் போதே பாராட்டியிருக்கலாமே? உள்ளுக்குள் பூட்டி வைக்கும் வார்த்தைகளை யார் அறிவது? மனதை இலகுவாக்கும் நட்புகளை நாடாமல் உரையாடல்களற்ற இணையங்களுக்குள் இணைந்து கொள்கிறோம். வார்த்தைகளே இல்லாமல் போகும் போது வாக்கியங்களை உருவாக்குவது சாத்தியமாகாது. எங்கும் மவுனமும் வெறுமையும் நிரம்பிக் கிடக்கிறது. பாட்டியைப் பார்ப்பதற்காக கிராமத்திற்குப் போன குடும்பம் பாட்டியை நடுவில் உட்கார வைத்து விட்டு அலை பேசியில் மூழ்கிக் கிடக்கும் தலைமுறையை உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம். நம் சக்தியைத் தேவையில்லாமல் வீணடிக்கும் விஷயங்களில் நம்மைத் தொலைக்க வேண்டாம்.வாழ்க்கை ஒரு திரு விழா. அதை உற்சாகமாக கொண்டாடுவோம். வாழ்தலை அழகாக்குவோம்.
-ம.ஜெயமேரி ஆசிரியை ஊ.ஒ.தொ.பள்ளிக.மடத்துப்பட்டி.bharathisanthya10@gmail.com

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement