Advertisement

'டவுட்' தனபாலு


'டவுட்' தனபாலு

சமாஜ்வாதி கட்சி தலைவர், அகிலேஷ் யாதவ்: தேர்தலின்போது, பா.ஜ., தலைவர்கள், பொறாமை, வெறுப்புணர்வை பரப்பி, ஆட்சியை பிடித்தனர். நல்ல உடை அணிந்து, பொய் சொல்பவர்களை, மக்களும் நம்பி விட்டனர்.


டவுட் தனபாலு: உங்களுக்கு ஓட்டுப் போடலை என்றதும், 'பொறாமை, வெறுப்புணர்வு எண்ணம் கொண்டோர்'னு, மக்களை சாடுவது சரியா... இவ்வளவு பட்டும், உடைகளைப் பற்றிய உங்களின் விமர்சனங்களை, ஓரங்கட்டி வைக்க மாட்டேங்குறீங்களே... ஆக்கப்பூர்வமாய் யோசித்து, மக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெறுவது எப்படி என்பதை, எப்போது முயற்சி செய்யப் போறீங்க என்பதுதான், என்னோட, 'டவுட்!'


புதிய நீதிக்கட்சி தலைவர், ஏ.சி.சண்முகம்:வேலுார் லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கே உண்மையான வெற்றி. தி.மு.க., தட்டுத் தடுமாறி வெற்றி பெற்றுள்ளது. 47 சதவீதம் ஓட்டுகளைப் பெற்று, அ.தி.மு.க., தன் ஓட்டு வங்கியை தக்கவைத்துள்ளது.


டவுட் தனபாலு: தோல்வியை ஒப்புக்கொள்ள மனமின்றி, அ.தி.மு.க.,வினர் புள்ளி விபரம் சொன்னால், அதுல, ஒரு, 'லாஜிக்' இருக்கு... அங்கு, அ.தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிட்ட நீங்க, அக்கட்சியின் ஓட்டு வங்கி குறித்து, எதற்கு இவ்வளவு பேசுறீங்க... கட்சியை இணைக்கத் தயாராகிட்டீங்களோ என்ற, 'டவுட்' வருதே...!


த.மா.கா., தலைவர், வாசன்:'உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்க வேண்டும்' என, முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்ததை வரவேற்கிறோம். உள்ளாட்சி தேர்தலை சந்திக்க, கட்சி நிர்வாகிகள், இப்போது இருந்தே தயாராக வேண்டும்.

டவுட் தனபாலு: உள்ளாட்சித் தேர்தலை தாமதிக்கணும்னு, என்றைக்குங்க முதல்வர் சொல்லி இருக்காரு... ஆர்வமாய் இருப்பதாகத் தானே, ஆண்டுக்கணக்கில் இழுத்தடிச்சுக்கிட்டு வருகிறார்... அதுசரி, அ.தி.மு.க.,வுடன் தான் கூட்டணி என்பதை உறுதி செய்துட்டீங்க... லோக்சபா தேர்தலை போல, பெயருக்கு கொடுக்குற இடத்தை பெற்றுக் கொள்வீங்களா... இல்லை, கறார் காட்டுவீங்களா என்பது தான், உங்க கட்சியினரின், 'டவுட்'டாக இருக்கு...!


அ.ம.மு.க., பொது செயலர், தினகரன்: ஓட்டுப்பதிவு இயந்திர குளறுபடியால், மோடி ஆட்சி மீண்டும் வந்து விட்டது. வரும் தேர்தலில், ஓட்டுச்சீட்டு மூலம் தேர்தல் நடைபெற வேண்டும். அப்போது தான், மோடியின் ஆட்சிக்கு முடிவு கட்ட முடியும்.

டவுட் தனபாலு: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவும், இ.வி.எம்., மூலமாக தானே நடந்தது... ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மீது உங்களுக்கு இவ்வளவு, 'டவுட்' இருந்தால், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்திட வேண்டியது தானே... அவ்வளவு சீக்கிரம், மோடியின் ஆட்சி முடியாது என்பதை தான், இப்படி சுத்திவளைச்சு, இட்டுக்கட்டி சொல்றீங்களோ என்ற, 'டவுட்' வருதே...!


பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன்: தமிழக பள்ளிகளில், ஜாதி, மத அடையாளங்களை காட்டும் வகையில், கயிறு கட்டும் பழக்கம், மாணவர்களிடம் இல்லை.


டவுட் தனபாலு: அப்படி ஒரு விஷயம் இல்லை என்றால், 'ஜாதி, மத அடையாளங்களுடன் வரும் மாணவர்களையும், அந்த பள்ளிகளையும் அடையாளம் கண்டுபிடித்து, அறிக்கை அனுப்ப வேண்டும்'னு, பள்ளிக்கல்வி இயக்குனர் எதற்கு, சுற்றறிக்கை வெளியிட்டார் என்பது தான், மக்களின், 'டவுட்'டாக இருக்கு...!


தி.மு.க., தலைவர், ஸ்டாலின்: நிவாரண பணிகளுக்கு, தி.மு.க., 10 கோடி ரூபாய் நிதி கொடுத்துள்ளது. தனிப்பட்ட முறையில், நான் கொடுக்கவில்லை. எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கொடுக்கப்படுகிறது. அரசின் சார்பில், அவர்கள் நிதி ஒதுக்கப் போகின்றனர். அதை, முதல்வர், தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுக்க போகிறாரா; மக்களின் வரிப்பணம் அது.


டவுட் தனபாலு: கனமழையால் பாதிக்கப்பட்ட, நீலகிரி மாவட்ட நிவாரணத்துக்கு, உதவுவது பாராட்டுக்கு உரியது தான்... அதேநேரத்தில், அரசு நிதி ஒதுக்குவது குறித்து, இவ்வளவு வில்லங்கமா கேள்வி கேட்கணுமா... 'எங்கு பார்த்தாலும், கருணாநிதியால் துவக்கப்பட்ட திட்டம்கற, கல்வெட்டு காணப்படுதே... எல்லாம், கட்சி காசில் செய்யப்பட்டதா... இல்லை, குடும்பச் சொத்தை விற்றுச் செய்ததா'ன்னு, பதிலுக்கு எவரும், 'டவுட்' எழுப்பிட போறாங்க...!

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Sundar - Chennai,இந்தியா

    குடும்பத்துக்கு ஏது சொத்து? எல்லாம் ஊரை அடிச்சு உலையில் போட்டதுதான்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement