Advertisement

இவரு துாத்துக்குடி வந்திருக்க முடியுமா?

Share

'இங்கும் பா.ஜ., ஆட்சி வந்தா லஞ்சம் ஒழியுமே!'
பா.ஜ.,வின் பெருங்கோட்ட நிர்வாகிகள் கூட்டம், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்த, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர், இல.கணேசன், நிருபர்களிடம் கூறுகையில், 'இந்த ஆண்டுக்குள், பா.ஜ., கட்சியில் அனைத்து பொறுப்புகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்படுவர். டிசம்பர், 15க்குள், உட்கட்சி தேர்தல் நடத்தி, தமிழக தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தியாவிலேயே அதிக உறுப்பினர்கள் உடைய கட்சியாக, பா.ஜ., உருவெடுக்கும்.'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற கொள்கையில், வெற்றி பெறுவோம். ஐந்து ஆண்டுகளுக்கு முன் கொடுத்த உறுதிமொழிப்படி, ஊழலை ஒழித்து விட்டோம். தமிழகத்தில் ஊழல்வாதிகளை ஒழிக்கும்முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்' என்றார்.பா.ஜ., பிரமுகர் ஒருவர் கூறுகையில்,'இல.கணேசன், தாலுகா அலுவலகம் பக்கம் போயிருக்க மாட்டாரு போல... அங்கு கேட்கும் லஞ்சத்தை பார்த்திருக்க மாட்டாரு போல' எனக்கூற, மற்றவர்கள், 'தமிழகத்தில எப்ப, பா.ஜ., ஆட்சி வருமோ,லஞ்சம் எப்ப ஒழியுமோ' என்றபடி கலைந்தனர்.


இவரு துாத்துக்குடி வந்திருக்க முடியுமா?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், மாநில மாநாட்டிற்கு, மாநில செயலர், முத்தரசன் துாத்துக்குடிக்கு வந்தார். அப்போது, நிருபர்களிடம் அவர், 'இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்திருக்கும் மோடி, மிகப்பெரும் பலத்தோடும், அதிகாரத்தோடும் இருக்கும் காரணத்தால், ஆர்.எஸ்.எஸ்., கொள்கையை செயல்படுத்த தீவிரம் காட்டி வருகிறார். பல்வேறு சட்டங்களை, அவரது அரசு நிறைவேற்றி வருகிறது. மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. அதற்கு துணை போவது போல, இங்கு இருக்கக்கூடிய மாநில அரசு செயல்படுகிறது.'எந்த உரிமைகள் பறிக்கப்பட்டாலும், அதை பற்றி கடுகளவும் கவலைப்படாமல், தமிழக அரசு உள்ளது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து இருக்கிறது. எந்த ஒரு மனிதனினும் அச்சமின்றி நடமாட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'சட்டம் - ஒழுங்கு சரியில்லை என சொல்லும் முத்தரசன், இங்கு வந்திருக்க முடியுமா? எனக்கூற, மற்ற நிருபர்கள், 'சரியா சொன்னீங்களே' என்றபடி நடையை கட்டினர்.


'அரசை கண்டிச்சாமாதிரி ஆகிடுமே...!'

மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில், ரிசர்வ் லைன், ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா நடந்தது. தேசிய கொடியேற்றிய கலெக்டர் ராஜசேகர், காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின், பள்ளி மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சி துவங்கிய போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, சில பள்ளிகளை சேர்ந்த தொடக்க பள்ளி மாணவர்கள் பலர், காலில் செருப்பு அணியவில்லை. இதனால், வெயிலில்அவதிப்பட்டனர்.இதை கவனித்த, கலெக்டர் ராஜசேகர், மாணவர்களிடம் சென்று, அவர்களை மேடைக்கு அழைத்து வந்தார். ஆசிரியர்களிடம், 'ஏன் குழந்தைகளுக்கு செருப்பு அணிவிக்காமல் அழைத்து வந்தீர்கள்' என, கடிந்தார். செருப்பு அணியாத மாணவர்களை காக்க வைக்காமல், அவர்களின் நிகழ்ச்சியை, முதலில் நடத்த உத்தரவிட்டார்.இதை கவனித்த நிருபர்கள், 'மாணவர்களிடம் கலெக்டர் காட்டிய கருணை வரவேற்கத்தக்கது. ஆனால், கல்வித் துறையில், மாணவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்களில், இலவச காலணியும் இடம் பெற்றுள்ளது. அவர்களுக்கு ஏன் காலணிகள் வழங்கவில்லை' எனக்கூற, மற்ற நிருபர்கள், 'திட்டத்தை கலெக்டர் கண்டிச்சா, அரசை கண்டிச்சா மாதிரி ஆகிடுமே' என்று கூறி நடையை கட்டினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement