Advertisement

'டவுட்' தனபாலு

தி.மு.க., தலைவர், ஸ்டாலின்: நீலகிரியில், ஐந்து நாட்களாக கனமழை பெய்து, கூடலுார் சட்டசபை தொகுதியே காணாமல் போயிருக்கிறது. இங்கு ஒரு பேரழிவு, பேராபத்து ஏற்பட்டிருக்கிறது. ஆனால், முதல்வர் இதுவரை, சென்று பார்க்கவில்லை.


டவுட் தனபாலு: பணிகள் முக்கியமா, பார்வையிடல் முக்கியமா... முதல்வர் நேரில் சென்று மக்களை சந்தித்தால், 'நிவாரண பணிகளுக்கு இடையூறு; மேலோட்டமான ஆய்வு'ன்னு, அதிலும், ஆயிரத்தெட்டு குறைகளை சொல்ல மாட்டீங்க என்பதற்கு, என்ன உத்தரவாதம் என்பது தான், மக்களின், 'டவுட்!'


****


காங்.,கை சேர்ந்த, புதுச்சேரி முதல்வர், நாராயணசாமி: பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., ஆட்சியில், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், தொழிற்சாலைகள் மூடல் போன்றவற்றுடன் எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டுவது, வருமான வரித்துறை வாயிலாக தொல்லை கொடுப்பது போன்றவையும் நடக்கிறது.


டவுட் தனபாலு: நீங்க சொல்லும் இந்த விஷயங்களில், ஏதாவது ஒன்று பாதித்து இருந்தாலும், மக்கள் இதற்கு எதிராக குரல் எழுப்பி இருப்பாங்களே... இல்லாததையும் பொல்லாததையும் பேசிப் பேசி, இருக்குற செல்வாக்கையும் இழந்திட போறீங்க... அது சரி, ஆளும்கட்சி மிரட்டலுக்கு பயப்படும் அளவுக்கு, எதிர்க்கட்சிகள் அப்படி என்னென்ன தவறுகளை செய்திருக்கீங்களோ என்ற, 'டவுட்' வருதே...!


****


காங்., - எம்.பி., ராகுல்: எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் சிலருடன், ஜம்மு- - காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிக்கு செல்வேன். எங்களுக்கு, எந்தவிதமான விமான சேவையும் தேவை இல்லை. ஆனால், சுதந்திரமாக பயணித்து, மக்கள் மற்றும் ராணுவ வீரர்களை சந்திக்க, அனுமதிக்க வேண்டும்.


டவுட் தனபாலு: சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் வாயிலாக, இதுவரை இல்லாத என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை, அந்த மக்கள் உணர்ந்திருந்தால், அதில் ஏதாவது சொல்லி, கொளுத்தி போட நினைக்குறீங்க... சும்மாவே, போராட்ட களத்தில் தீவிரம் காட்டும் மக்களிடம், எதற்கு இந்த துாபம் என்பது தான், என்னோட, 'டவுட்!'

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement