Advertisement

'டவுட்' தனபாலு

ம.ஜ.த., தேசிய தலைவர், தேவகவுடா: வருங்காலத்தில் நடக்கும் எந்த தேர்தலிலும், காங்கிரஸ் உட்பட, எந்த கட்சியுடனும், கூட்டணி அமைக்க மாட்டோம்.

டவுட் தனபாலு: கூட்டணி குறித்த அரசியல்வாதிகளின் உறுதிமொழியை, பிறந்த குழந்தை கூட நம்பத் தயாராக இல்லை... நீங்களே, இது மாதிரி எத்தனை அளந்து விட்டிருப்பீங்க... இதுமட்டும், எத்தனை காலத்துக்கு... உங்க மகன் குமாரசாமிக்கு, பதவி கிடைக்கும் என்றால், யாருடனும் கூட்டணி வைப்பீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை...! இதற்கு முன், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைச்சப்ப, பா.ஜ.,வின் காலை வாரி விட்டீங்களே... அதையும் மக்கள், 'டவுட்'டே இல்லாமல், நினைவில் வச்சிருக்காங்க!

***

தமிழக, காங்., மூத்த தலைவர், பீட்டர் அல்போன்ஸ்: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு, ராகுலுக்கு மட்டுமே தகுதி உள்ளது. ஆனால், பதவியில் நீடிக்க முடியாது என, அவர் திட்டவட்டமாக கூறி விட்டார்.

டவுட் தனபாலு: 'தகுதி படைத்த, ராகுல் தலைமை வகித்த போதே, காங்கிரசால் எதுவும் சாதிக்க முடியலை... வேறுவழியின்றி தேர்வு செய்யப்படும் தலைவரால், காங்., என்ன சாதிச்சிடப் போகிறது... இருக்குற கொஞ்ச நஞ்ச செல்வாக்கையும், கூடிய விரைவில் இழக்கப் போகுது'ன்னு எடுத்துக்கலாமா என்ற, 'டவுட்' வருதே...!

***

துணை முதல்வர், பன்னீர்செல்வம்: எந்த தேர்தலிலும், அ.தி.மு.க., தோற்றால், அதற்கு அடுத்த தேர்தலில், நிச்சயம் வெற்றி பெறும். அது தான், இதுவரை நடந்திருக்கிறது. எனவே, வேலுார் லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., வெற்றி பெறுவது உறுதி.

டவுட் தனபாலு: வெறுமனே இந்த, 'சென்டிமென்டை' நம்பித்தான், வேலுார் தேர்தல் களத்தில் நிற்குறீங்களா... இல்லை, 'லோக்சபா தேர்தலின்போது, ஆட்சி, அதிகார மமதையில், 'அசால்ட்' ஆக இருந்து விட்டோம்... அதனால் தான் தோல்வி... தோற்றால் தான், எங்களுக்கு உத்வேகம் பிறகும்; ஒழுங்காக வேலை செய்வோம்... இங்கு வெற்றி பெறுவோம்'னு, சொல்ல வர்றீங்களோ என்ற, 'டவுட்' எழுதே...!

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அப்படி எங்க கூட்டணிக்காரர் வெற்றி பெற்று என் மகனுக்குப் போட்டியா உட்காராமல் இருக்கணும் என்பதுதான் என் உள்மனத்தின் ஆசை

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement