Advertisement

மனசாட்சியை தொலைத்த வைகோ!

மனசாட்சியை தொலைத்த வைகோ!

ப.தே.கோகுலாச்சாரி, விழுப்புரத்திலிருந்து எழுதுகிறார்: தி.மு.க.,வின் முன்னாள் தலைவர், கருணாநிதியின் தயவில் அடையாளம் காணப்பட்டவர், வைகோ. தன்னை முழுமையாக நம்பிய, கருணாநிதிக்கு கூட தெரிவிக்காமல், இலங்கைக்கு கள்ளத் தோணியில் சென்று, விடுதலைப்புலிகளின் தலைவர், பிரபாகரனை சந்தித்தார். இது, கருணாநிதி - வைகோ உறவில் விரிசலை ஏற்படுத்தியது.பிரபாகரனால் அனுப்பப்பட்ட தாணு என்ற மனித வெடிகுண்டால், முன்னாள் பிரதமர் ராஜிவ் கொல்லப்பட்டார். அவருடன், 18 அப்பாவிகள் பலியாகினர். இதன் விளைவாக, 1991ல் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., படுதோல்வியை சந்தித்தது.'அரசியல் நலனுக்காக, விடுதலைப்புலிகளை ஏவி, என்னையும், என் மகன் ஸ்டாலினையும் கொல்ல திட்டம் தீட்டியிருக்கிறார்' என்ற பழியை சுமத்தி, 1993ல் வைகோவை, தி.மு.க.,வை விட்டு நீக்கினார், கருணாநிதி. தி.மு.க.,விலிருந்து, வைகோ நீக்கப்பட்டதை கண்டித்து, தொண்டர்கள் ஐந்து பேர் தீக்குளித்து மாண்டனர்.தி.மு.க.,வின் ஒன்பது மாவட்ட செயலர்கள், வைகோவிற்கு ஆதரவு அளித்தனர். பின், ம.தி.மு.க., என்ற கட்சியை துவக்கி, 1996ல் நடந்த சட்டசபை தேர்தலில், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட், ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்தார், வைகோ. அந்த கூட்டணி படுதோல்வியை தழுவியது; வைகோ கூட வெற்றி பெறவில்லை.கடந்த, 1998ல் நடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., கூட்டணியில், ம.தி.மு.க., இணைந்து மூன்று இடங்களை பெற்றது. 1999ல், தி.மு.க.,வுடன், ம.தி.மு.க., கூட்டணி அமைத்தது.'ஈழத் தமிழர்கள், 1.5 லட்சம் பேரை கொன்று குவித்த, சிங்கள ராணுவத்திற்கு துணைபுரிந்த, காங்கிரஸ் - தி.மு.க.,.வை அடியோடு, இம்மண்ணை விட்டு ஒழிக்கும் வரை, நான் ஓய மாட்டேன்' என, கர்ஜித்து, தி.மு.க.,வுடனான உறவை முறித்து, 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்து, 0.86 சதவீத ஓட்டுக்களை மட்டுமே பெற்றது, ம.தி.மு.க.,அதன் பின், 29 ஆண்டுகள் கழித்து, தான் பேசிய அனைத்தையும் மறந்து, மதியாதோர் வாசலை வலுக்கட்டாயமாக மிதித்து, தி.மு.க.,வில் ஐக்கியமானார், வைகோ. 2009ல் தேசதுரோக வழக்கு, வைகோ மீது தொடரப்பட்டது. 2019ல் தி.மு.க.,வில் கூட்டு சேர்ந்தவுடன், இந்த வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றார். அந்த தீர்ப்பை நீக்க வலியுறுத்தி, மேல்முறையீடு செய்துள்ளார், வைகோ.தேசதுரோக குற்றத்துடன், ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் பெற்றார். ஓர் நல்ல தலைவராக, வைகோ இருந்தால், 'இந்த வழக்கில் நிரபராதி என, தீர்ப்பு வரும் வரை எந்த பதவியும் எனக்கு தேவையில்லை. என் கட்சிகாரர் ஒருவருக்கு, அப்பதவியை தர வேண்டும்' என கேட்டிருக்க வேண்டும்.மாறாக, பெட்டி படுக்கையுடன் கிளம்பி விட்டார் டில்லிக்கு! மனசாட்சியை மட்டும், எங்கேயோ தொலைத்து விட்டார்; யாராவது தேடிக் கொடுங்களேன், ப்ளீஸ்!

ஜாதிகள்எப்படிஒழியும்?

எஸ்.அருள், சிவகாசி, விருதுநகர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: ஆணவக் கொலையில் பெரும்பாலும், ஆண் சார்ந்துள்ள கீழ் ஜாதியில் தான் நடக்கிறது. ஆனால், பெண், கீழ் ஜாதியாக இருந்தால் கண்டு கொள்வதில்லை. நகர மக்கள், ஜாதி துவேஷம் பார்ப்பதில்லை. அனைத்து சமூக மக்களும் சமமாக நடத்தப்படுகின்றனர். ஆனால், அனைவராலும் போற்றப்படும் கிராமங்களில் தான், இன்னமும் ஜாதி துவேசஷம் இன்னும் கொடி கட்டிப்பறக்கிறது.துாத்துக்குடி மாவட்டம், குளத்துாரில் காதல் திருமணம் செய்த ஜோடி, ஆணவக் கொலை செய்யப்பட்டனர். இதில் படுகொலை செய்யப்பட்ட பெண், இருமாத கர்ப்பிணி என்பது மிகவும் வேதனையானது. ஆணவக் கொலை செய்யப்பட்ட காதல் ஜோடி இருவரும், பட்டியல் இனத்தில், இரு பிரிவைச் சார்ந்தோர்.தாழ்த்தப்பட்ட மக்களுக்குள்ளாகவே, ஜாதி துவேஷம் ஒழியவில்லை எனில், மேல் ஜாதி, கீழ் ஜாதி என்பது, இந்த யுகத்தில் ஒழிய வாய்ப்பில்லை என தெரிகிறது.தாழ்த்தப்பட்ட மக்கள், கல்வி, பொருளாதாரம் இவற்றில் முன்னேற்றம் பெற்றால் தான், தீண்டாமை ஒழியும் என, அரசு கருதுகிறது. எனவே, வேலைவாய்ப்பில் அனைத்து பிரிவுகளுக்கும் இட ஒதுக்கீடு செய்து கொடுக்கிறது; பல விதமான சலுகைகளையும் கொடுத்து வருகிறது.இட ஒதுக்கீட்டின் பலன்களை அனுபவித்து வரும் இவர்கள், தங்களுக்குள்ளாகவே ஜாதி துவேஷத்தையும், ஏற்றத்தாழ்வையும் பின்பற்றுகின்றனர் என்பது, வருத்தமாக உள்ளது.ஒரு சில கிராமங்களில் ஓட்டல்களில், இவர்களுக்கு தனி டம்ளர் கொடுக்கப்படுகிறது. சில வகுப்புகளை சார்ந்தோர், சரிக்கு சமமாக அமர்ந்து உணவருந்த இயலாத நிலைமை, இன்றும் கூட, பல கிராமங்களில் இருக்கிறது.இப்படிப்பட்ட கொடுமைகளை அனுபவித்து வருவோர், தங்களுக்குள் ஜாதி துவேஷத்துடன் இருந்தால், மேல் ஜாதி, கீழ் ஜாதி என்பதை எப்படி ஒழிக்க முடியும்?

மாணவர்களைகேவலமாகநடத்த வேண்டாமே!

பொன்.கருணாநிதி, கோட்டூர், கோவையிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம், நீண்ட நாட்களாக செயல்பட்டு வருகிறது. கல்வி கற்கும் மாணவர்களுக்கு, அரசு வழங்கும் வரப்பிரசாதம், இது.அரசு பஸ்களில் பயணம் செய்யும் போது, அவர்கள், குறிப்பிட்ட பஸ்களில் மட்டுமே, பஸ் பாஸை பயன்படுத்த முடியும். பள்ளி, கல்லுாரி அமைந்துள்ள சாலை வழியே செல்லும், தொலைதுார பஸ்களை தவிர்த்து, மற்ற பஸ்களையும், மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளஅனுமதி வழங்க வேண்டும்.சில பஸ்களின் கண்டக்டர்கள், பஸ் பாஸ் வைத்து பயணம் செய்யும் மாணவர்கள் மீது, எரிந்து விழுகின்றனர்; கடுமையான சொற்களை பயன்படுத்துகின்றனர். இதைப் பார்க்கும் போது கஷ்டமாக உள்ளது.மக்களுக்காகத் தான், அரசு பஸ்கள் ஓடுகின்றன. மாணவர்களும், மக்களில் ஒரு அங்கம் தான். மாணவர்களை ஏளனமாகவோ, கேவலமாகவோ பேசும் போக்கை, கண்டக்டர்கள் கை விட வேண்டும்.இளம் பருவத்தில், மாணவர்களை இப்படி அசிங்கப்படுத்தினால், அவர்களது மனம் என்ன பாடுபடும். இதை எண்ணிப் பார்த்து, கண்டக்டர்கள் தங்களது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.மோசமாக நடந்து கொள்ளும் கண்டக்டர், டிரைவர் மீது, போக்குவரத்து துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இந்த 'பதவி மோகத்துக்கு' மட்டும் எந்தத் தலைவரும் விலக்கில்லை மகனுக்காக நேற்று தூற்றிய கட்சியில் ஒட்டிக்கொண்டவரோ, மகளின் அமைச்சர் பதவிக்காக வீல் சேரில் யாத்திரை போனவரோ, காசி யாத்திரை போனவரோ எல்லாரும் ஒரே குட்டை, மட்டை தான் உழைக்கப் பிறந்தவன், உயிர் கொடுக்கப் பிறந்தவன் மட்டும்தான் தொண்டன் இந்தக் கொள்கையில் மாறுபாடே கிடையாது

  • prem - Madurai ,இந்தியா

    நான் கண்டு மிகவும் மனம் நொந்த காட்சி... ஒரு பேருந்தில் மாணவர்களை அதன் நடத்துனர் மிகவும் வன்மமான முறையில் திட்டுவதும், பள்ளிப்பிள்ளைகளை அலட்சியமாக நடத்துவதும்,, மேலும் சில பேருந்து ஓட்டுனர்கள் பஸ் ஸ்டாப்பை விடுத்து அதிக தொலைவு கொண்டு பொய் வண்டியை நிறுத்துவதும் மாணவர்கள் தங்கள் சுமைகளோடு கும்பலாக ஓடிவருவதையும் அதில் சிலர் விழுந்து பின் எழுந்து ஓடி வருவதையும் பார்த்தல் மனம் மிகவும் பதைக்கிறது....அதிலும் பிஞ்சுகளின் நிலை மிகவும் பரிதாபம். .. அவர்களை பெற்ற மனம் எவ்வளவு வேதனைப்படும்....அந்த பெற்றோர்களின் வேதனையை என் மனதில் உணர்கிறேன். . பேருந்து ஓட்டுநர்களும் நடத்துனரும் கொஞ்சம் சமூக பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் ..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement