dinamalar telegram
Advertisement

இது உங்கள் இடம்

Share

சொரணை அற்றவர்கள் நாம்!

என்.கந்தசாமி, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னையில், கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய்களை, துார்வாரி பாதுகாக்க தவறிய, தமிழக அரசுக்கு, 100 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது, பசுமை தீர்ப்பாயம். அ.தி.மு.க., ஆட்சியின் அலங்கோலத்திற்கு, இதை விட, என்ன சான்று வேண்டும்!பிரதமர், மோடிக்கு, அதிதீவிர விசுவாசியாக இருந்து, ஆட்சியை தக்க வைப்பதில், அ.தி.மு.க., தலைவர்களின் கவனம் இருக்கிறது. தமிழகத்தில், அணைகள், ஏரிகள் நாசமாக போவதை பற்றி, அரசியல்வாதிகள் கவலைப்பட மாட்டார்கள்.தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே, வைகை அணை மட்டும் தான், இந்த அளவுக்கு நாறிப் போய் இருக்கிறது என, யாரும் நினைக்க வேண்டாம்.காமராஜர் ஆட்சி காலத்தில், 1958ல் கட்டப்பட்ட வைகை அணையில், தண்ணீருக்கு பதிலாக, சேறும், மணலும், கற்களும் நிறைந்து இருக்கிறது. 71 அடி உயரமுள்ள வைகை அணையில், 22 அடி உயரத்திற்கு, வண்டல் மண், கற்கள் படிந்திருக்கின்றன.நீண்ட காலமாக, அதை துார்வாராததால், இன்னும் கொஞ்ச காலத்தில் அணையில் தண்ணீருக்கு பதிலாக, மண்ணும், கற்களும் மட்டுமே, நிறைந்து இருக்கும்.அரசு ஒதுக்கிய நிதி, 220 கோடி ரூபாய், கமிஷனுக்கே போய் விட்டதால், துார்வாரும் பணியை சரிவர செய்யாமல், ஒப்பந்தக்காரர்கள் பின்வாங்கி விட்டனர்.கிணறு வெட்ட, 60 ஆயிரம் கொடுத்ததில், அதிகாரிகள், கமிஷனாக, 45 ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டனர். கிணறு வெட்டாமல், அதை வெட்டியதாக போலி ரசீதையும் காட்டுகின்றனர்.தமிழகத்தில், அத்தனை அணைகளின் கதியும், இப்படி தான் இருக்கின்றன. தலைவர்களுக்கு, சிலைகள் வைப்பதிலும், சமாதிகள், நினைவாலயங்கள் அமைப்பதிலும், அக்கறை காட்டிய திராவிட தலைவர்கள், நீர்நிலைகள், ஏரிகள், குளங்களை பாதுகாக்கும் விஷயத்தில், அசட்டையாக இருந்து விட்டனர்.'கோடி கோடியாக, கொள்ளை அடிப்பதே, எங்கள் லட்சியம்' என, வாழும் கொள்கை உடையோர் கையில், மாறி மாறி, தமிழகம் சீரழிந்து கொண்டிருக்கிறது.சொரணை அற்றவர்களாக நாம் இருப்பது நீடித்தால், தமிழகம் தண்ணீரின்றி பாலைவனமாக மாறி விடும்!


வாய்ச்சவடால்கூட்டத்திற்கு எப்போது முடிவு?

கோ.வெங்கடேசன், திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்ய, லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருகின்றனர். பல லட்சம் அய்யப்ப பக்தர்கள், விரதமிருந்து சபரிமலைக்கு செல்கின்றனர்.சிதம்பரம் நடராஜர் தேரோட்டத்தில், பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி, தேர் இழுத்து பக்தி பரவசப்படுகின்றனர். கும்பகோணம் மகாமக காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். புஷ்கரணி விழாக்களில் கூடும் கூட்டம் கொஞ்சமா!தமிழகத்தின், அறுபடை வீடுகளில் கூடும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. 40 ஆண்டுகளில், ஹிந்து கோவில்களுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை, பன்மடங்கு அதிகரித்துள்ளது.தி.க., தலைவர் வீரமணி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம், 'இது, ஈ.வெ.ரா.,வின் பகுத்தறிவு பூமி; ஈ.வெ.ரா., - அண்ணா துரை மண்' என, தம்பட்டம் அடித்து கொள்கின்றனர்; இது, அவர்கள் தொடர் வழக்கம். அதாவது, கடவுள் மறுப்பு என்பது, இம்மண்ணிற்கே உரித்தானது என்பது, அவர்களின் வாதம்!இது, 'ஈ.வெ.ரா., வின் மண்' என உண்மையிலேயே, தி.க., - தி.மு.க.,வினர் நம்பினால், தேர்தல் காலங்களில், 'கடவுள் நம்பிக்கை உள்ளோர், எங்களுக்கு ஓட்டளிக்க தேவையில்லை' என, கொள்கை பிரகடனம் செய்யுங்கள். ஹிந்து ஓட்டுகள் இல்லையென்றால், உங்களால் வெற்றி பெற முடியுமா?தி.மு.க., மற்றும் தி.க.வினரே... நீங்கள் பெறும் தேர்தல் வெற்றிகள், நாத்திக ஹிந்து மத எதிர்ப்பு கோஷங்களுக்காக அல்ல. உங்களை எதிர்கொள்ள, காமராஜர் போன்ற நேர்மையான, நாணயமான தேசிய தலைவர் ஒருவர் இல்லாததே காரணம்!அப்படி ஒருவர் தோன்றும் போது, மொழி வெறி, இனவெறி போன்றவற்றின் துணையோடு, வாய்ச்சவடால் அடிக்கும் கூட்டத்தின், ஆட்டம் முடிவுக்கு வரும்!

பொறுப்புள்ளஅதிகாரிகளுக்குபாதுகாப்பு தேவை!

ஏ.எம்.ஏ.ராஜேந்திரன், காளையார்கோவில், சிவகங்கை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: மக்களுக்கான திட்டங்களை, அறிவிக்க தான் முடியும்; ஏன், ஆய்வு செய்யக் கூட முடியும்!ஆனால், அறிவித்த திட்டங்களை, மக்களிடம் கொண்டு சேர்க்கும், மிகப்பெரிய பொறுப்பும், கடமையும், அமைச்சர்களுக்கு கிடையாது. அந்த பொறுப்பு, அரசு அதிகாரிகளுக்கு தான் உண்டு.மத்திய அரசின் திட்டங்களையும், மாநில அரசின் திட்டங்களையும், முழுமையாக செயல்படுத்த, கூடிய அதிகாரம் அவர்களை சார்ந்தது.மத்திய பிரதேச மாநிலத்தில், ஆக்கிரமிப்பை அகற்றச், சென்ற அதிகாரியை, கிரிக்கெட் மட்டையால் தாக்கியுள்ளார், பா.ஜ., சட்டசபை உறுப்பினர் ஒருவர்; இதை, சமூக வலைதளங்கள் பரப்பின.இதேபோல், உ.பி., யில், ஒரு பா.ஜ., சட்டசபை உறுப்பினர், அரசு அதிகாரி ஒருவரை, கடமையை செய்ய விடாமல் தாக்கியுள்ளார்.இந்த செயல்களில் ஈடுபட்டோரை, பிரதமர் மோடி வன்மையாக கண்டித்து, 'அதிகாரம் கையில் உள்ளது என்பதற்காக, அகந்தையுடன், பா.ஜ., தலைவர்கள் நடந்து கொள்ளக் கூடாது' என்றும் கூறி உள்ளார்.இதுபோல், நாட்டின் பல, பகுதிகளில், பா.ஜ., தொண்டர்கள், எல்லை மீறி செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஒவ்வொரு சம்பவமும், 'வாட்ஸ் ஆப் - டிவி' செய்திகள் மூலம் மக்களுக்கு தெரிந்து விடுகிறது. அதனால் தான் பிரதமர் எச்சரித்துள்ளார்.தமிழகத்திலும், இதுபோல், அதிகாரிகளை மிரட்டும் செயல்கள் நடந்துள்ளன. இதில் ஈடுபடுவோரை, முதல்வர், இ.பி.எஸ்., கண்டிக்க வேண்டும்.ஆட்சியை, மாற்றக் கூடிய சக்தி, மக்களிடம் உள்ளது. அதிகாரிகளை, மாற்றக் கூடிய அதிகாரம், அரசிடம் உள்ளது. அதிகார வர்க்கம் என்பதும், அதிகாரிகள் வர்க்கம் என்பதும் வேறு.எனவே, அரசின் திட்டங்களை செயல்படுத்த, அதிகாரிகளுக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அரசு, அதிகாரிகளின் ஊழல், மெத்தனத்துக்கு நீதிமன்றம் அபராதம் விதித்தால், சம்பந்தப்பட்டவர்களே காட்டட்டும் இவர்களை கொண்டு போய் உட்கார்த்திவிட்ட மக்கள் ஏன் தண்டம் bஅழ வேண்டும்? கோர்ட் அதைத் தெளிவாகக் கூறாததால், குஷாலாக வரிப்பணத்தில் கட்டிவிடுவார்கள். இப்படி நாலு முறைக்கு கைக்காசைப் போட வேண்டுமென்று வந்தால், தானே ஒழுங்காக வேலை நடக்குமே

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement