Advertisement

சிறை போலீசார் இடமாறுதலில் விளையாடும் சில்லரை!

''போராட்டத்துக்கு தயாராகிட்டு இருக்காங்க பா...'' என்றபடியே, அரட்டையை ஆரம்பித்தார், அன்வர்பாய்.

''நம்ம ஊர்ல தான், பொழுதுக்கு ஒரு போராட்டம் நடக்குதே... நீங்க, யாரைச் சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''தமிழகத்துல, கூட்டுறவுத் துறையிடம், 23 ஆயிரம் ரேஷன் கடைகள் இருக்கு... இதன் ஊழியர்கள், ஊதிய உயர்வு கேட்டு, பல கட்ட போராட்டங்களை நடத்திட்டாங்க பா... ''இது சம்பந்தமா, அரசும், கூட்டுறவுத்துறை பதிவாளர் தலைமையில ஒரு கமிட்டி போட்டு, ஆய்வு பண்ணி, அந்த கமிட்டியின் அறிக்கையும் அரசுக்கு போயிடுச்சு... ''சமீபத்துல நடந்த மானியக் கோரிக்கையில, ஊதிய உயர்வு அறிவிப்பு வரும்னு, ஊழியர்கள் எதிர்பார்த்தாங்க... ஆனா, அமைச்சர் ராஜு கண்டுக்காம விட்டதால, ரேஷன் ஊழியர்கள் சங்கம் சார்புல, சீக்கிரமே பொதுக்குழுவை கூட்டி, அடுத்த கட்ட போராட்டம் பத்தி, அறிவிக்க போறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''தற்கொலை மிரட்டல் விடுத்தவரை, நைசா பேசி தடுத்துட்டாவல்லா...'' என, அடுத்த தகவலுக்கு தாவிய அண்ணாச்சியே, தொடர்ந்தார்... ''மதுரை தல்லாகுளம் பகுதியில, குற்றப்பிரிவு சிறப்பு, எஸ்.ஐ., ஒருத்தர், சமீபத்துல, வாகன சோதனையில ஈடுபட்டிருந்தாரு... அப்ப, அங்க வந்த உதவி கமிஷனர் ஒருத்தர், 'அடிக்கடி நகை பறிப்பு நடக்கு... அதனால, வாகன சோதனையில் மெத்தனமா இருக்காதீய'ன்னு சொல்லியிருக்காரு வே... ''எஸ்.ஐ.,யோ, 'கெடுபிடியா வாகன சோதனை நடத்தி, ஏதாவது ஏடாகூடமா ஆயிட்டா, என் வேலைல்ல போயிடும்'னு சொல்ல, கோபமான, ஏ.சி., எல்லார் முன்னாடியும், எஸ்.ஐ.,யை சத்தம் போட்டுட்டு போயிட்டாரு வே...

''விரக்தியான, எஸ்.ஐ., 'குடும்பத்துடன், போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல போய், தற்கொலை பண்ண போறேன்'னு மீடியாக்களுக்கு தகவல் குடுத்துட்டாரு... ''அதிர்ச்சியான உளவுப்பிரிவு போலீசார், கெஞ்சிக் கூத்தாடி, எஸ்.ஐ.,யை சமாதானப்படுத்தி, தடுத்துட்டாவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''இப்படி உட்காருங்கோ குமார்... ஆத்துல எல்லாரும் சவுக்கியமா...'' என, நண்பரிடம் நலம் விசாரித்தபடியே, ''டிரான்ஸ்பர்ல கல்லா கட்டிண்டு இருக்கா ஓய்...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார், குப்பண்ணா.

''எந்தத் துறையில வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''தமிழகத்துல, முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறைத்துறை போலீசாருக்கான பணியிட மாறுதல் நடந்துண்டு இருக்கு... விரும்பற இடங்களுக்கு போறதுக்கு, தலா, 2 - 3 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கறா ஓய்... ''சில ஊர்கள்ல, காலியிடங்களே இல்லாத நிலையிலயும், அந்த இடங்களுக்கும் வசூல் நடக்கறது... ''அந்த இடங்கள்ல வேலை பார்க்கறவாளை, வம்படியா வேற இடங்களுக்கு மாத்திட்டு, பணம் குடுக்கறவாளுக்கு, அந்த இடங்கள்ல, 'போஸ்டிங்' போடறதுக்கான ஏற்பாடுகள் நடக்கறது ஓய்...

''சென்னையில, ஏ.டி.ஜி.பி., அலுவலகத்துல இருக்கற பெண் உதவியாளருக்கு, இதுல, 'பெரும் பங்கு' இருக்குன்னு சொல்றா... 'சிறைத் துறை, ஏ.டி.ஜி.பி., ஆபாஷ்குமார், நேர்மையா டிரான்ஸ்பர் போடறதுக்கு ஏற்பாடு செய்யணும்'னு, பணம் குடுக்காதவாள்லாம் சொல்றா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

பெஞ்சில் மேலும் சிலர் இடம் பிடிக்க, பெரியவர்கள் கிளம்பினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    சிறைச்சாலைகளில் ஏன் கஞ்சாவும் கைபேசியும் நடமாடாது. இடமாற்றலுக்கு கொடுத்த பணத்தை அப்படித்தானே ஈடுகட்ட வேண்டும்? இந்த தகவல்களையும் என் ஐ ஏ கண்டுகொண்டால் நல்லது. ஏன்னென்றால் பல இடங்களில் நடக்கும் கலவரம், கொள்ளை, மற்றும் மத கலவரங்களுக்கு சிறை சாலைகளிலேயே திட்டம் தீட்டப்படுகிறது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement