Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

Share

காங்கிரசை சேர்ந்த, முன்னாள் மத்திய நிதியமைச்சர், சிதம்பரம் பேட்டி: தபால் துறை தேர்வில், தமிழ் மொழி நீக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. ஹிந்தி திணிப்புக்கு, ஒவ்வொரு வாரமும், புது முயற்சி எடுக்கப்படுகிறது. தபால் துறையில், ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியில் தான் தேர்வு எழுத வேண்டும் என்றால், ஹிந்தி மொழி பேசும் மக்களுக்கு, ஒரு அசாத்தியமான வாய்ப்பு கிடைக்கிறது. கிராமப்புற மாணவர்களுக்கு, என்ன வாய்ப்பு கிடைக்கும். இந்த முயற்சி, ஹிந்தியை திணிக்க, அரசு மேற்கொள்ளும் மறைமுக நடவடிக்கை.

பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் அறிக்கை: உயர்நீதிமன்ற தீர்ப்புகள், மாநில மொழிகளில் வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஜனாதிபதியும், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியும், நமக்கு கிடைத்திருக்கின்றனர் என்பது, 13 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள, வரவேற்கத்தக்க மாற்றம். இத்தகைய வாய்ப்பு அமைவது மிகவும் அதிசயம். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் பிரதிகளும், தமிழில் வழங்க வேண்டும் என்ற, தமிழகத்தின் கோரிக்கை, அரசியல் சட்டப்படி வழங்கப்பட வேண்டிய உரிமை.

பா.ஜ.,வை சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி: தமிழகத்தில், இந்த ஆண்டு முதல், ஹிந்தி கற்றுக் கொடுக்கும் பள்ளிகளை மூட முடியுமா... இலங்கை தமிழர் பிரச்னையில், ப.சிதம்பரம் என்ன செய்தார்; நிதித்துறை அமைச்சராக இருந்த அவர், தமிழகத்திற்கு, ஒன்றும் செய்யவில்லை. கடித போக்குவரத்துக்கு வசதியாக, ஆங்கிலத்தில் தேர்வு நடைபெறுகிறது.

இந்திய கம்யூ., மாநில செயலர், முத்தரசன் பேட்டி: ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்பது, காவி கொள்கை. பா.ஜ., அரசு ஹிந்தியையும், சமஸ்கிருதத்தையும் நாடு முழுவதும் திணிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு முன், தபால் துறையின் தேர்வுகள், அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்பட்டு வந்தன. தற்போது, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்படுவது கடும் கண்டனத்துக்குரியது. உடனடியாக, அந்தந்த மாநில மொழிகளில் எழுத உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

ரஜினி மீது பயமா, பாசமா என கேட்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., தலைவர், கே.எஸ்.அழகிரி பேட்டி: ரஜினி ரசிகர்கள் வேலுாருக்கு செல்லட்டும். அங்கு சினிமா தியேட்டர்கள் அதிகம் உள்ளன. ரஜினி படத்தை திரையிட்டு பார்க்கட்டும். தேர்தலை பொறுத்தவரை, ரஜினி ரசிகர்களால் ஒன்றும் நடந்து விடப் போவதில்லை. சினிமா வேறு, அரசியல் வேறு என்பதை, முதலில் ரஜினி புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் என்ற வீண் முயற்சியில், ரஜினி ஈடுபட வேண்டாம். இதை, நான் அவருடைய ரசிகனாக கேட்டுக்கொள்கிறேன்.

'நீங்கள் மட்டும் எந்த நம்பிக்கையில், முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறீர்கள்' என்று கேட்கத் தோன்றும் வகையில், கர்நாடக மாநில, பா.ஜ., மூத்த தலைவர், எடியூரப்பா பேட்டி:நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தினால், முழு ஒத்துழைப்பு கொடுப்போம். ஓட்டெடுப்பின் இறுதியில், கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பது, நிரூபிக்கப்பட்டால், குமாரசாமி முதல்வர் பதவியை விட்டு விலக வேண்டும்; புதிய அரசு பதவியேற்க வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். கூட்டணி அரசு நிலைப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லாத சூழலில், முதல்வர், குமாரசாமி தன் பதவியை ராஜினாமா செய்வதை தவிர வேறு வழி இல்லை.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement