Advertisement

'டவுட்' தனபாலு

Share

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., செம்மலை: முன்பெல்லாம், சட்டசபையில், தி.மு.க.,வின் போக்கு, சண்டைக்கோழி போலத்தான் இருக்கும். ஆனால், ஜெ., -கருணாநிதி மறைந்த பின், ஜனநாயக வழியில், கட்சி வேறுபாடின்றி, நாங்கள் பழகுகிறோம்.

டவுட் தனபாலு: இரு பெரும் தலைவர்கள் மறைவுக்குப் பிறகு தான், தமிழக அரசியலில், ஜனநாயகம் தழைத்து, பாகுபாடு களைந்து, நாகரிகமான நட்பு உருவாகி இருப்பதாக, மக்களுக்குச் சொல்றீங்களா... இல்லை, மத்திய அரசை வழிநடத்தும் கட்சிக்குச் சொல்றீங்களா என்ற, 'டவுட்' ஏற்படுதே...!

***

இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர், செ.கு. தமிழரசன்: தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் அதிகம் பணிபுரியும் ரயில்வே, பி.எஸ்.என்.எல்., தபால் துறை போன்றவற்றை, தனியார் மயமாக்கும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

டவுட் தனபாலு: பொதுத் துறை நிறுவனங்களை, தனியார் மயமாக்கக் கூடாதுன்னு சொன்னால், அதுல ஒரு நியாயம் இருக்கு... இப்படி, ஜாதிய கண்ணோட்டத்தோடு, இந்த விஷயங்களைப் பேசினால், தனியார் மயமாக்கலுக்கு எதிரான நிலைப்பாடு சிதறி போயிடும்கற, 'டவுட்' வரலையா...!

***

தி.மு.க., தலைவர், ஸ்டாலின்: பொதுத் தேர்தலில், படுதோல்வி அடைந்த, மத்திய - மாநில ஆட்சியாளர்கள், அதே கூட்டணியுடன், வேலுார் தேர்தலில், அதிகாரத்தை பயன்படுத்தி, வெற்றியை அபகரிக்க முடியுமா என, ஆலோசித்து வருகின்றனர்.

டவுட் தனபாலு: நீங்க பெற்றால், அது, ஜனநாயக முறைப்படி பெற்ற வெற்றி... அடுத்தவர்கள் அதற்கு முயற்சித்தால், அது, அதிகார துஷ்பிரயோகமா... அது சரி, இவ்வளவு பேசுறீங்களே, வேலுார் லோக்சபா தொகுதி தேர்தல், எதனால் ரத்து செய்யப்பட்டது என்ற விபரம் தெரியாதா... நீங்க, இதைப் பற்றிப் பேசலாமான்னு, யாரும், 'டவுட்' எழுப்பிடப் போறாங்க...!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement