Advertisement

தூண்டி விடும் போக்கு மாறணும்!

வி.நாகராஜன், நிர்வாக பொறியாளர், என்.எல்.சி., (பணி நிறைவு), சென்னையிலிருந்து எழுதுகிறார்: நான், தமிழக மின் வாரியத்தில், 1961ல் பணியில் சேர்ந்தேன். அங்கு எனக்கு, 110 கே.வி., மின் கோபுரங்களுக்கு இடையே, மின் கம்பியை இழுக்கும் பணி, ஒதுக்கப்பட்டது; அது, மிகவும் கடினமான வேலை. பணி நடக்கும் இடத்திற்கு, ஊர் எல்லையில், காடு, மேடு, வயல் வரப்புகளை தாண்டி தான் செல்ல வேண்டும். அங்கு, உணவு, குடிநீர் சரிவர கிடைக்காது.

ராஜபாளையத்தில் வேலை செய்த போது, குளிப்பதற்கு, தண்ணீர் கிடைக்காது. ஒரு வாரத்துக்கு ஒரு முறை தான் குளிப்பேன். ஆனால், பணி தொடர்ந்து இருக்கும். தமிழகம் முழுவதும், மின் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, ஊழியர்கள் எண்ணற்ற துயர்களை கடந்து உழைக்கின்றனர். உயர் அழுத்த மின் கம்பியை, கோபுரம் வழியாகத் தான் எடுத்து செல்ல முடியும். அதுவும், ஊர் எல்லையில் தான், கோபுரம் அமைப்பர். ஊருக்கு நடுவில் அமைக்க முடியாது. இதை, மக்களுக்கு புரியும் படி எடுத்துக் கூற வேண்டும்.

தற்போது, உயர் அழுத்த மின் கோபுரங்களுக்கு எதிராக, சிலர் போராடி வருகின்றனர். மின் உற்பத்தி நிலையம், உயர் அழுத்த கம்பி, மின் கோபுரங்கள் என, எதுவும் அமைக்கக் கூடாது; ஆனால், மின்சாரம் கடைகோடி மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்றால், அது முட்டாள்தனமான கருத்து அல்லவா! எதையும் சரியாக புரிந்து கொள்ளாமல், அரசியல்வாதிகளின் சுயநலத்திற்காக துாண்டி விடப்படும் போராட்டங்களில், மக்களும், கொடி பிடித்து, சாலையில் இறங்கி விடுகின்றனர். இந்த நிலை, தமிழகத்தில் மாறியே தீர வேண்டும்!

***

ஒற்றை தலைமை: அ.தி.மு.க.,வில் மீண்டும் சர்ச்சை!சொ.செல்வராஜ், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் (பணி நிறைவு), சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' எனும் சொலவடைக்கேற்ப, ஒற்றை தலைமை பிரச்னை, அ.தி.மு.க.,வில் விஸ்வரூபம் எடுக்க துவங்கியுள்ளது. முதல்வர், இ.பி.எஸ்., - துணை முதல்வர், ஓ.பி.எஸ்., தலைமையில் கூடிய கூட்டத்தில், 'உட்கட்சிப் பிரச்னைகளை யாரும் வெளியில் பேசக் கூடாது; தங்கள் கருத்துகளை கட்சிக் கூட்டத்தில் தான் பதிவிட வேண்டும்' எனக்கூறி, ஒற்றை தலைமை பிரச்னைக்கு, தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

ஜெயலலிதா மரணத்திற்கு பின், கோஷ்டி பூசலால், ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., ஆதரவாளர்கள் என, தனி ஆவர்த்தனங்கள் அரங்கேற்றுகின்றன. ஒற்றை தலைமை எனும் நிலை மாறி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரான, ஓ.பி.எஸ்., மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான, இ.பி.எஸ்.,சும் இணைந்து, கட்சியையும், ஆட்சியையும் நடத்தி வருகின்றனர். லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., படுதோல்வியை சந்தித்தது. ஜெயலலிதா கட்டிக் காத்த கட்சிக்கு, களங்கம் ஏற்பட்டுள்ளதை எண்ணி, தொண்டர்கள் குமுறி வருகின்றனர்.

முதன் முதலில், இரட்டை தலைமை என, வெளிப்படையாக தெரிவித்தவர், அ.தி.மு.க.,வின், மதுரை மாவட்ட செயலரும், எம்.எல்.ஏ.,வுமான, ராஜன் செல்லப்பா. சென்னை கூட்டத்தில், இது பற்றி பேசப் போவதாக அறிவித்தார். ஆனால், பேசவில்லை. துணை முதல்வர், ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள், 'ஆட்சி இ.பி.எஸ்.,சிடம் இருப்பது போல, கட்சியின் முழுக் கட்டுப்பாடு, ஓ.பி.எஸ்., வசம் இருக்க வேண்டும்' என, நினைக்கின்றனர். லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., சார்பில், ஓ.பி.எஸ்., மகன் ஒருவர் மட்டுமே, வெற்றி பெற்றார். மத்திய அமைச்சரவையில், பங்கு பெற இயலாமல் போனதற்கு, இ.பி.எஸ்.,சும் சில அமைச்சர்களுமே, முட்டுக்கட்டை போட்டதாக பரவலான கருத்து நிலவுகிறது.

ஜெயலலிதா இருந்த போது, அ.தி.மு.க.,வை ராணுவக் கட்டுப்பாடுடன், தொண்டர்களை கட்டுக்கோப்புடன் வழி நடத்தி, கட்சியை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தார். ஆனால், 22 சட்டசபை தொகுதிகளுக்கான, இடைத்தேர்தலில், ஒன்பது தொகுதிகளை மட்டும், அ.தி.மு.க., கைப்பற்றி, எஞ்சிய, ௧௩ தொகுதிகளை, தி.மு.க.,விடம் தாரை வார்க்க நேர்ந்தது. இரட்டை தலைமை தான், அ.தி.மு.க.,வின் தோல்விக்கு காரணம்; தற்போதைய சூழ்நிலையில், ஒற்றை தலைமையே தேவை என்ற கருத்து, அக்கட்சிக்குள் பலரிடையே இருக்கிறது. அடுத்து வர இருக்கும் உள்ளாட்சித் தேர்தலின்போது, ஒற்றை தலைமை பற்றி வலியுறுத்தும் சூழ்நிலை உருவாகலாம்!

***

அ.ம.மு.க., காணாமல் போய் விடும்!எம்.ஜெயமதி, கடலுாரிலிருந்து எழுதுகிறார்: 'அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு, அங்கீகாரம் பெற்று, நிலையான சின்னத்தை பெற்ற பிறகு, விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடுவோம்' என்கிறார், தினகரன். அப்படி எனில், அ.தி.மு.க.,வை கைப்பற்றுவது, இரட்டை இலையை மீட்பது ஆகிய திட்டங்கள் கைவிடப்பட்டு விட்டனவா? 'இதற்காகவா உங்களோடு கை கோர்த்தோம்' என, கேள்வி மேல் கேள்வி கேட்கும், அ.ம.மு.க., தொண்டனுக்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள்?

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், சீமானும், கமலும், உங்கள் கட்சியை பின்னுக்கு தள்ளி விட்டனரே... வெறும், 6 சதவீத ஓட்டுகளை பெற்று, 21 சட்டசபை இடைத்தேர்தலிலும், மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டீரே. இது எல்லாம், மறந்து விட்ட கதையாய் ஆகிவிடப் போகிறது, தினகரன்! 'தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட, வேலுார் லோக்சபா தொகுதி தேர்தலில், அ.ம.மு.க., போட்டியிடாது' என, தினகரன் கூறியுள்ளார். இப்படி அவர் கூறியிருப்பது, அ.ம.மு.க.,வின், 'ஒன்றரை கோடி' தொண்டர்களுக்கும், பெருத்த அவமானமாகி விட போகிறது.

'அ.ம.மு.க.,விலிருந்து நிர்வாகிகள் விலகுவது, அவர்களின் சுயநலம்; அதனால், எந்த பாதிப்பும் இல்லை' என, தினகரன், 'பல்டி' அடித்துள்ளார். அ.தி.மு.க.,விலிருந்து பிரிந்து, இவரிடம் வந்தோர் சுயநலம் கருதி வந்தவர்களா... இப்படியே சிக்கொண்டிருந்தால், அ.ம.மு.க.,வில் இருக்கும், ஒரு சில தொண்டர்களையும் இழந்து, வெறும் ஆளாய் நிற்க வேண்டி வரும். தினகரன் ஆட்டம் போட்டால், இருந்த இடம் தெரியாமல், அ.ம.மு.க., காணாமல் போய் விடும்!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement