Advertisement

பெரிய ஏமாற்றம்

Share

எஸ்.ராதாகிருஷ்ணன், தாசில்தார் (பணி நிறைவு) பாபநாசம், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 1980க்கு முன், கிராம முன்சீப், கர்ணம் என்ற பதவியில் இருந்த அலுவலர்கள், கிராமங்களில் அவசியம் தங்க வேண்டும் என்ற விதிமுறை அமல்படுத்தப்பட்டது. இதனால், கிராமங்களில் சட்டம் - ஒழுங்கு, சமுதாய நல்லிணக்கம் பேணப்பட்டு வந்தது. அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்புக்குள்ளாவது, முற்றிலும் தடுக்கப்பட்டது. குளம், ஏரி, வாய்க்கால் போன்ற நீர்நிலைகள் பாதுகாக்கப்பட்டு, குடி மராமத்து பணிகளும் நடந்து வந்தன.


எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது, கிராம முன்சீப், கர்ணம் பதவிகள், 1980, நவ., 14ல் அவசர சட்டம் வாயிலாக ஒழிக்கப்பட்டன. நீதிமன்றங்கள் போல் செயல்பட்டு வந்த, 'ரெவின்யு போர்டு' என்ற வருவாய் வாரியமும், ஆளும் கட்சிக்கு இணக்கமாக செயல்படாத காரணத்தால், கலைக்கப்பட்டது. சகல அதிகாரங்களையும், அரசே கையகப்படுத்திக் கொண்டது. அதன்பின், கிராம நிர்வாக அலுவலர் என்ற பதவி உருவாக்கப்பட்டது.


கிராம நிர்வாக அலுவலர்கள், அவர்களுக்கு பணிக்கப்பட்ட கிராமங்களில் சொந்த செலவில் வாடகைக்கு குடியிருந்தனர். காலப்போக்கில், அரசு இவர்களுக்கு குடியிருப்பு வசதிகள் செய்து கொடுத்தது. ஆனால், கிராம நிர்வாக அலுவலர் சிலர், இப்போது, அந்த குடியிருப்பை உள்வாடகைக்கு விட்டு, நகர்ப்புறங்களில் வசித்து வருகின்றனர்.

காவல் துறை, நீதித் துறை அலுவலர்களை தவிர, மற்ற துறை அலுவலர்கள் யாரும், பணிபுரியும் ஊரில் வசிப்பதில்லை. 'தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் வட்டம், மேலையூரில், கிராம நிர்வாக அலுவலர் சரிவர பணிக்கு வருவதில்லை' என, விவசாயி ஒருவர், கலெக்டருக்கு புகார் அனுப்பினார்; எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக, மதுரை உயர் நீதிமன்ற கிளையை நாடி உள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'கிராம நிர்வாக அலுவலர் மீதான புகாரை விசாரிக்க, அதிகாரிகள் குழு அமைக்க வேண்டும்' என, உத்தரவிட்டது.


கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, வீட்டு படி வழங்குவதே, அவர்கள் பணிபுரியும் ஊரில் வசிக்க வேண்டும் என்பதற்காக தான். ஆனால், 80 சதவீத பணியாளர்கள் வெளியூர்களில் தான் வசிக்கின்றனர். கிராம நிர்வாக அலுவலர்கள், தாங்கள் பணிபுரியும் கிராமங்களில் வசிக்க வேண்டும் என்ற விதியை, நீதிமன்றங்கள் அமல்படுத்த வேண்டும். இதில், உறுதியான உத்தரவு பிறப்பிக்காதது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது!

சுதாரிப்பது நல்லது!சொ.இந்திரா, சென்னையிலிருந்து எழுதுகிறார்: வாஜ்பாய் தலைமையிலான, பா.ஜ., 1௯௮௪ லோக்சபா தேர்தலில், இரண்டு இடங்களை மட்டுமே பெற்று, படுதோல்வியை சந்தித்தது. அப்போது, பா.ஜ., வின் தலைவர்கள் எவரும், ராஜினாமா செய்யவில்லை. தொண்டர்களின் சோர்வை நீக்கி, உற்சாகமூட்டி, கூட்டணி அமைத்து, அடுத்த சில ஆண்டுகளில், மத்தியில் ஆட்சியை பிடித்தனர். அதுபோல, தமிழகத்திலும் இருபெரும் திராவிட கட்சிகளான, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வும், மாறி மாறி படுதோல்விகளை சந்தித்தன. இதற்காக, கருணாநிதியும், ஜெயலலிதாவும், ராஜினாமா செய்யவில்லை. இருபெரும் தலைவர்கள் இறந்த பின்னும், கட்சியும், ஆட்சியும், அவர்கள் பெயரைச் சொல்லியே, இன்னும் மிளிர்கின்றன.


இந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ், ௫௨ இடங்களை மட்டுமே, பெற்று, படுதோல்வி அடைந்ததால், நிலை குலைந்து விட்டது. 'காங்கிரசுக்கு நான் தலைவர் இல்லை; எங்கள் குடும்பம் அல்லாது, வெளியிலிருந்து தலைவரை தேர்வு செய்யுங்கள்' என, ராகுல் உறுதியாக கூறி விட்டார்; இது, காங்கிரஸ் தொண்டர்கள் மனதை, நோகடித்து உள்ளது. கடந்த, ௪௧ ஆண்டுகளில், ௩௪ ஆண்டுகள், இந்திரா குடும்பத்தினரே, காங்கிரசின் தலைவர்களாக இருந்துள்ளனர். காங்கிரசின் படுதோல்வியால், இனி அந்த கட்சிக்கு எதிர்காலமே இல்லை என்ற முடிவுக்கு, ராகுல் வந்து விட்டாரோ? தோல்வியில் சோர்ந்து இருக்கும் தொண்டர்களையும், கட்சி நிர்வாகிகளையும் அனுசரித்தும், அரவணைத்தும், கட்சியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும்.


அதை விடுத்து, ராகுல் ராஜினாமா செய்யும் முடிவால், எவருக்கும் எவ்வித பயனுமில்லை. 'காங்கிரசின் தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும்' என, கட்சியினரால் நிர்ப்பந்தம் செய்வதற்கு முன், தாமாகவே காங்கிரசின் தலைமை பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் உள்ளார், ராகுல்' என, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மத்தியில், காங்கிரசின் கதி, தற்போதைய தமிழக காங்கிரசைப் போல ஆவதற்குள், கட்சியை வழி நடத்துபவர்கள், சுதாரிப்பது நல்லது!

எதுவுமே பிரயோஜனம் இல்லை சாமி!எம்.முகம்மது சித்திக், திருவாரூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை இடைத் தேர்தலின் போது, பணப் பட்டுவாடா நடந்ததை காரணம் காட்டி, தேர்தல் ஒத்தி வைக்கப் பட்டது. பின், சில மாதங்கள் கழித்து, மீண்டும் நடைபெற்றது. யார் பணப் பட்டுவாடா செய்ததாக சந்தேகப்பட்டு, தேர்தலை நிறுத்தியதோ, அதே வேட்பாளர் மீண்டும் போட்டியிட அனுமதி அளித்ததோடு, மேற்படி நபர் வெற்றி பெற, வழியும் வகுத்துக் கொடுத்தது, தேர்தல் கமிஷன். அதே வேட்பாளர் தினகரன், 20 ரூபாய் நோட்டை, 'டோக்கன்' ஆக, கொடுத்து, வெற்றி பெற்றார். மீதி தொகையை தேர்தல் முடிந்த பிறகு தருவதாக கூறி, வாக்காளர்களை ஏமாற்றினார்.


பணப் பட்டுவாடாவை காரணம் காட்டித் தான், வேலுார் லோக்சபா தொகுதி தேர்தல் மட்டும், நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் அங்கு தேர்தலை நடத்த, கமிஷன் நாள் குறித்துள்ளது. ஒத்தி வைக்கப்பட்ட தேர்தலில், எந்தெந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனரோ, அதே வேட்பாளர்கள் தான் மீண்டும் போட்டியிட உள்ளனர். பணப் பட்டுவாடாவும் கன கச்சிதமாக நிகழும். 'வெற்றி பெற்றே தீர வேண்டும்' என்ற ஒரே குறிக்கோளில், அ.தி.மு.க., - தி.மு.க., ஆகிய இரண்டும், கரன்சியை வாரி வாரி இறைக்கும். பணப் பட்டுவாடா செய்த வேட்பாளர் மீண்டும் போட்டியிடுவதை தடுக்கவோ அதிகாரம் இல்லாத, தேர்தல் கமிஷன், ஏன் தேர்தலை ஒத்தி வைத்து, வேடிக்கை காட்ட வேண்டும்? எதுவுமே பிரயோஜனம் இல்லை சாமி!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • prem TRUTH - Madurai ,இந்தியா

    சுதாரிப்பது நல்லது... திருமதி இந்திரா அவர்களுக்கு தாங்கள் காங்கிரஸ் கட்சியை பற்றி கூறியது எப்படி உள்ளது என்றால்.... உதாரணத்திற்கு.... ஒரு நிறுவனத்திற்கு அதாவது பணம் அதிகமாக கையாளும் நிறுவனத்துக்கு பொறுப்பான வேலைக்கு ஒரு புதியவர் வருகிறார் அதன் முதலாளி இவர் எப்படிப்பட்டவரோ என்று பொறுப்பை ஒப்படைக்க தயங்குகிறார்... சிறிது காலம் பார்க்கலாம் என்று என்னும் அதே வேளையில் ஏற்கனவே இருந்த ஒரு பணியாள் நிறுவனத்தின் பணத்தையெல்லாம் கையாடி கொள்ளை அடித்து அது கண்டுபிடித்ததால் விரட்டப்பட்டவனை போன்றதே .... காங்கிரஸ் கம்பெனியின் நிலை... அதனால் உங்களை போன்றோர் திரும்பவும் இந்த தேசத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டு வரும் என்று மனப்பால் குடிக்க வேண்டாம்.... ஒன்றல்ல இரண்டல்ல பத்து முறைக்கு மேல் ஆட்சிஅமைத்து நாட்டை சீர்குலைத்து கொள்ளையடித்த களவாணியை மக்கள் கண்டறிந்து இரண்டு முறை சொல்லிவைத்தார் போன்று எதிர்க்கட்சியாக கூட மறுத்து வாக்களித்து உள்ளனர்... இந்த நிலையில் அக்கட்சி மீண்டெழுவது கனவிலும் நடக்காத ஒன்று...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement