Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'நீங்க சொல்றது, நுாற்றுக்கு நுாறு சரி' என்பது போல, நடிகர் சூர்யா பேச்சு: புதிய கல்விக் கொள்கை பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு இல்லாமல், பலரும் உள்ளனர். கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, இந்த கல்விக் கொள்கை சரியாக போய் சேரவில்லை.
எல்லாருடைய அச்சம், கோபம் என்னவென்றால், தகுதி தேர்வு, நுழைவு தேர்வு போன்றவற்றில் இருக்கிற கவனம், தரமான, சமமான கல்வியை கொடுப்பதில் இல்லை. தரமான கல்வியை கொடுக்காமல், எப்படி தகுதியான மாணவர்களை எதிர்பார்க்க முடியும்.


'மாஜி' மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேச்சு: ஜனநாயகத்திற்கு பேராபத்து வந்துள்ளது. மாநிலங்களில், பா.ஜ., அல்லாத ஆட்சியை கலைக்க, கர்நாடகாவில் துவங்கி, பல மாநிலங்களில் முயற்சி நடக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கட்சி, ஒரே வேட்பாளர் என, உலகின் பல நாடுகள், சர்வாதிகாரத்தை நோக்கி அடியெடுத்து வைக்கின்றன. அதை, பா.ஜ., பின்பற்றி வருகிறது.


வி.சி., தலைவர் திருமாவளவன் பேட்டி: அ.தி.மு.க., ஆட்சியில் தான், ஆணவ படுகொலைகள் நடக்கின்றன என, குற்றம் சுமத்தவில்லை. மேலும், தமிழகத்தில் மட்டும், இது, நடக்கிறது என்றும் கூறவில்லை. அனைத்து மாநிலங்களிலும், ஆணவ படுகொலைகள் நடக்கும் சூழலில், அதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பது தான், எங்களின் கோரிக்கை. ஜாதிய, மதவாத சக்திகளால், ஆணவ படுகொலைகள் அதிகரிக்கின்றன.


தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர், விக்கிரமராஜா அறிக்கை: நீர் ஆதாரமே, வாழ்வாதாரத்தின் அடிப்படை என்பதை கவனத்தில் வைத்து, மத்திய அரசின், ஜலசக்தி இயக்கத்தை, ஒரு மாபெரும் ஜனசக்தி இயக்கமாக மாற்ற வேண்டும். மழைநீர் சேகரிப்பு இயக்கத்தை, மாநிலம் தழுவிய, ஒரு மாபெரும் இயக்கத்திற்கான விழிப்புணர்வாக உருவாக்கும் வகையில், பெரியதொரு இயக்கமாக வளர்த்து எடுக்க முன்வருமாறு, அனைவரையும் கரம் கூப்பி வேண்டுகிறோம்.


'ஹிந்தி திணிப்புக்கு எதிராகவே அவதாரம் எடுத்தவர் மாதிரி பேசுறீங்களே... ஹிந்தி திணிப்பின் பிதாமகனே, காங்கிரஸ் தானே... தெரியாட்டி, நீங்க கூட்டணி வச்சிருக்கிற, தி.மு.க.,விடம் கேளுங்க... கதை கதையா சொல்வாங்களே' எனச் சொல்ல தோன்றும் வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி அறிக்கை : ஹிந்தி மொழியை, ஹிந்தி பேசாத மாநில மக்கள் மீது திணிப்பது, ஆட்சி மொழிகள் சட்ட திருத்தத்திற்கு விரோதமானது. தமிழக மக்கள் மீது, ஹிந்தி மொழியை திணிக்கிற உரிமை, மத்திய அரசுக்கு இல்லை. இதை மீறி, திணிக்க முயன்றால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement