Advertisement

தே.மு.தி.க.,வை கழற்றி விட அ.தி.மு.க., திட்டம்!

Share

''அ.தி.மு.க., அலுவலக ஊழியர்களின் ஆசையை, பிரதமர் நிறைவேத்தியிருக்கார் ஓய்,'' என்றபடியே, டீயை உறிஞ்சினார் குப்பண்ணா.


''விளக்கமா சொல்லும் வே...'' என்றார், அண்ணாச்சி.


''அ.தி.மு.க., ராஜ்யசபா, எம்.பி., மைத்ரேயன் பதவி காலம், இந்த மாசத்தோட முடியுது... சமீபத்துல அவர், பார்லிமென்ட் வளாகத்துல, பிரதமரை சந்திச்சு பேசிண்டு இருந்தார் ஓய்...


''அப்ப, 'லோக்சபா, அ.தி.மு.க., அலுவலகத்துல, 35 வருஷங்களா வேலை பார்க்கற சந்திரசேகரன், 20 வருஷமா இருக்கற பாண்டியன் ஆகியோர், உங்க கூட, போட்டோ எடுத்துக்க பிரியப்படறா'ன்னு சொல்லிருக்கார் ஓய்...


''உடனே பிரதமரும், 'பேஷா எடுத்துடலாம்... அவாளை வர சொல்லுங்கோ'ன்னதும், ரெண்டு பேரும் சேர்ந்து, பிரதமருடன் போட்டோ எடுத்திருக்கா... அவாளுக்கு, ஒரே சந்தோஷம்... இதை, மைத்ரேயனும். 'பேஸ்புக்'குல, ரொம்ப பெருமையா சொல்லிருக்கார் ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.


''ஆணையத்தை ஆளப்போவது, இன்ஜினியரா, ஐ.ஏ.எஸ்., அதிகாரியான்னு விவாதம் நடக்குது பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அன்வர் பாய்.


''எந்த ஆணையத்தைச் சொல்றீங்க...'' எனக் கேட்டார்,அந்தோணிசாமி.


''மின் கட்டணத்தை நிர்ணயம் பண்றது, வாரியம் மற்றும் மின் நிறுவனங்கள் இடையில எழும் பிரச்னைகளை விசாரிக்கிறது போன்ற பணிகளை, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொள்ளுது... ஆணையம், ஒரு தலைவர், ரெண்டு உறுப்பினர்களுடன் செயல்படுது பா...


''இதுல, தலைவர் பதவி, காலியா இருக்கு... ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், மாவட்ட நீதிபதியும், உறுப்பினர்களா இருக்குறாங்க...


''அதனால, தலைவர் பதவிக்கு, தொழில்நுட்ப வல்லுனரை தான் நியமிக்க போறாங்கன்னு நினைச்சு, ஓய்வு பெற்ற மின் வாரிய இன்ஜினியர்கள், விண்ணப்பங்களை அனுப்பிட்டு இருக்காங்க பா...


''அதே சமயம், ஓய்வு பெற்ற, பெண், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவரை, தலைவரா நியமிக்க போறாங்கன்னு தகவல் வருது... இதனால, ஆணையத்தை ஆளப்போவது, ஐ.ஏ.எஸ்., அதிகாரியா, இன்ஜினியராங்கிற விவாதம், மின் வாரியத்துல காரசாரமா நடக்குது பா...'' என விளக்கினார், அன்வர்பாய்.


''ஓடுற குதிரைக்கு தான், மவுசு அதிகமுங்க...'' என, கடைசி தகவலுக்கு வந்தார், அந்தோணிசாமி.


''ஏதாவது ரேஸ் சமாச்சாரமா ஓய்...'' என, விசாரித்தார் குப்பண்ணா.


''இல்லை... முற்பட்ட சமுதாய மக்களுக்கு, 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குறது தொடர்பா, தலைமை செயலகத்துல நடந்த, அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டத்துல, மக்கள் நீதி மையம் கட்சிக்கும் அழைப்பு விடுத்து, அதன் தலைவர், கமலும் கலந்துக்கிட்டாருங்க...


''விஷயம் என்னன்னா, இப்ப, அ.தி.மு.க., கூட்டணியில இருக்கிற, தே.மு.தி.க.,வால, பெரிய லாபம் இல்லை... அதனால, அந்தக் கட்சிக்கு பதிலா, மக்கள் நீதி மையம் கட்சியை, கூட்டணியில சேர்த்துக்கலாம்ன்னு, அ.தி.மு.க., மேலிடம் விரும்புதுங்க... இதனால, தே.மு.தி.க., கடுப்புல இருக்குங்க...'' என முடித்தார்,அந்தோணிசாமி.


அரட்டை முடிய, பெஞ்ச் அமைதியானது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    ம. நீ. மய்யம் ஏதோ நாலு பேருக்கு நல்லதாக மழை நீர் சேமிப்பு, கிராம மக்களுடன் தொடர்புன்னு பேர் சொல்ல ஆரம்பித்திருக்கிறது. உங்கள் பக்கம் இழுத்து, அந்த 'குட்டை- மட்டை' கூட்டத்தில் ஒன்றாக்க முயற்சிக்கிறீர்களா? இரண்டு போதாதா தமிழ் நாட்டுக்கு?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement