Advertisement

கர்நாடக அரசியலில் வெற்றி பெற போவது யார்?

Share

எஸ். வரதராஜன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கர்நாடக மக்களை நினைத்தால், மிகவும் வருத்தமாக இருக்கிறது. குமாரசாமி எப்போது முதல்வராக பதவியேற்றாரோ, அன்று முதல், அரசு ஸ்தம்பித்து விட்டது. யார் கட்சி மாறுவர், யார் ராஜினாமா செய்வர், அவர்களை எப்படி சமாளிக்கலாம் என்றே, அனைவரும் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என, யாரும் சிந்திக்கவே இல்லை.

முதல்வர் முதல், அமைச்சர்கள் வரை, அனைத்து அரசியல்வாதிகளும், அரசு அலுவலங்களில் இருந்து செயல்படுவதாக தெரியவில்லை. அனைவரும், ஐந்து நட்சத்திர ஓட்டல்களில், அரசியல் சதுரங்கம் விளையாடுகின்றனர். ரிசார்ட், ஓட்டல்களில், எம்.எல்.ஏக்கள் சிலர், தஞ்சம் புகுந்து உள்ளனர். 'வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்ற பழமொழிக்கு ஏற்ப, இன்று கர்நாடக அரசியல் மாறி விட்டது. சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுக்கு மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும், 105 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

முன் ஆளும் கட்சியாக இருந்த, காங்கிரஸ், 69 இடங்களிலும், ஜனதா தளம், 34 இடங்களிலும் வெற்றி பெற்றன. 'பா.ஜ., ஆட்சிக்கு வரக்கூடாது' என்பதற்காக, 34 இடங்களில், வெற்றி பெற்ற, ஜனதா தளத்தின் குமாரசாமிக்கு, முதல்வர் பதவி காங்கிரசால் தரப்பட்டது. ஆட்சி பொறுப்பேற்ற சில நாட்களில், முதல்வர், குமாரசாமி, 'குதிரை பேரம் மூலம், எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கி, அரசை கவிழ்க்க, பா.ஜ.,வினர் முயற்சிக்கின்றனர்' என்றார். 'பணம் கொடுத்தால், எவருக்கும் சேவை செய்வேன்' என, பேசிய அடிமைகளை எல்லாம், சட்டசபை தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தியது, காங்கிரசின் குற்றம் தானே! இன்று, கர்நாடகாவில் அரசியல் வியாபாரமாகி விட்டது.


அரசியல்வாதிகள், மக்களைபணம் கொடுத்து விலைக்கு வாங்குகின்றனர். அதே அரசியல்வாதிகள் , மீண்டும் ஒரு நாள் அதிக பணத்துக்கு, இன்னொருவரிடம் விலை போகின்றனர்.
தற்போது, கர்நாடகாவில் நடந்த லோக்சபா தேர்தலில், மொத்த முடிவையும் தலைகீழாக போட்டு, காங்கிரசையும், மதசார்பற்ற ஜனதா தளத்தையும் மக்கள் தோற்கடித்து விட்டனர். பா.ஜ.,விற்கு மகத்தான வெற்றியை தந்து விட்டனர். குமாரசாமி ஆட்சி கவிழ்க்கப்பட்டவுடன்,
கர்நாடகத்தில், கவர்னர் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும். மீண்டும் ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும். மகத்தான வெற்றி பெறுவோரை ஆட்சியில் அமர்த்தினால், கர்நாடக மக்கள் இன்புறுவர்!


வி.ஏ.ஓ.,க்களை குறை சொல்லாதீர்கள்!
கே.சூர்யா, கோட்டூர், கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: எல்லா கிராம நிர்வாக அலுவலர்களுக்கும், கிராமங்களில் குடியிருப்புகள் கட்டப்படவில்லை. கட்டப்பட்ட குடியிருப்புகளில், அவர்கள் குடும்பத்துடன் தங்குவதற்குரிய அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதும் தெரியாது. வாடகைக்கு வீடு பார்ப்பதில், கிராமங்களில் நிலவும் சிக்கல், சிரமங்களை கவனிக்க வேண்டும். பெரும்பாலான கிராமங்களில், வாடகை வீடு தேடும்போது, மதமும், ஜாதியும் குறுக்கே வருகிறது.


இந்த நிலையில், 'கிராம நிர்வாக அலுவலர்கள், தாங்கள் பணியாற்றும் கிராமங்களிலேயே, தங்க வேண்டும்' என, வருவாய் நிர்வாக ஆணையர் சுற்றிக்கை அனுப்பியுள்ளார்; இந்த நடவடிக்கை, ஓரளவுக்கு சரி தான். இன்றைய சமூக அமைப்பில், பெரும்பாலான கிராமங்களில், வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை. கிராம நிர்வாக அலுவலர்கள், தாங்கள் பணியாற்றும் கிராமத்திலேயே தங்காமல், அருகில் உள்ள நகரில் குடியிருந்தாலும் தவறு இல்லை. அவர்கள், அலுவலகத்துக்கு, குறித்த நேரத்தில் வந்து பணிபுரிய வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகளை ஆய்வு செய்ய, வருவாய் ஆய்வாளர், துணை தாசில்தார், தாசில்தார், கலெக்டர் என, பல்வேறு உயர் அலுவலர்கள் உள்ளனர்.


கிராம நிர்வாக அலுவலர் பணிகளிலும், களப்பணிகளிலும் தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. அப்படி தவறு செய்வோர் மீது, கடுமையான நடவடிக்கைகளை தாராளமாக மேற்கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் நடக்கும், 'ஜமாபந்தி' நிகழ்ச்சியில், கிராம நிர்வாக அலுவலர் பணித்திறன், முழுமையாக ஆய்வு செய்யப்படுகிறது. தவறு செய்வோர் மீது, பொதுமக்கள் புகார் செய்ய வாய்ப்பும் உண்டு. ஒரு சில கிராம நிர்வாக அலுவலர்கள், லஞ்சம் வாங்குவதை வைத்து, ஒட்டுமொத்த கிராம நிர்வாக அலுவலர்களையும், குறை கூறுவது தவறு. அவர்கள் வாங்கும் லஞ்ச பணத்தில் பெரும் பகுதி, உயர் மட்டத்தில் எந்த அளவுக்கு, யார் வரை செல்கிறது என்பது, ஆண்டவனுக்கே வெளிச்சம்!


'கமிஷன்' அரங்கேற்றியது தி.மு.க., தான்!
எஸ்.ராமு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், 1967க்கு முன், காங்கிரஸ் ஆட்சியில், பொதுப்பணித் துறை மூலம், சென்னையில் கட்டப்பட்ட கட்டடங்கள், இன்னும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கின்றன. உதாரணமாக, சி.ஐ.டி.,காலனி, பட்டினப்பாக்கம், பீட்டர்ஸ் காலனி, லாயிட்ஸ் காலனி, தி.நகர், நந்தனம் உள்ளிட்ட இடங்களில் கட்டப்பட்ட கட்டடங்களை கூறலாம்.


தமிழகத்தில், 1967ல், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முதல்வராக, அண்ணாதுரை தலைமையில், தி.மு.க., ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. பொதுப் பணித்துறை அமைச்சராக, கருணாநிதி பதவி ஏற்றார். அதுவரை, தமிழக அரசின் பொதுப் பணித் துறை மூலம், கட்டடங்கள் பராமரிக்கப்பட்ட
நிலையை மாற்றி, 'டெண்டர்' மூலம், தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு, அப்பணியை கொடுத்தார், கருணாநிதி. அன்று முதல், 'கமிஷன்' பார்க்கும் அவலம், அரங்கேற ஆரம்பித்தது. தி.மு.க., ஆட்சியில், 'கமிஷனை' மட்டுமே பிரதானமாக்கி, கட்டப்பட்ட கட்டடங்கள் ஏராளம். அவை, மூன்றே ஆண்டுகளில் விரிசல் விட்டு, குடியிருப்போரை மிரட்டுகிறது. தமிழ்நாடு குடிசை மாற்று குடியிருப்புக்களும் கூட, 'டெண்டர்' விட்டு, 'கமிஷன்' வாங்கி, கட்டப்பட்டவை தான்.


தனியார் நிறுவனத்தால், சென்னை, மவுலிவாக்கத்தில் கட்டப்பட்ட, 11 மாடி கட்டடம், கட்டிக் கொண்டிருக்கும் போதே, நொறுங்கி விழுந்தது. இதை கட்ட, 'அப்ரூவ்' தந்த, சி.எம்.டி.ஏ., எனும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மீதான, விசாரணை, இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. தமிழக அரசு வீட்டு வசதி வாரியம் மற்றும் குடிசை மாற்று வாரியம், 'டெண்டர்' மூலம் கட்டி, விற்கப்படும் வீடுகளையும், அடுக்கு மாடி குடியிருப்புகளையும், மக்கள் வாங்காமல் தவிர்ப்பது நல்லது; இல்லாவிடில், மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு என்பது, கேள்விக்குறி!பாரதியார் கனவு நனவாகுமா?
எம்.கவிமதி, கடலுாரிலிருந்து எழுதுகிறார்: சில ஆண்டுகளுக்கு முன், காதல் எனும் திரைப்படம் வெளியானது. பள்ளிக்கூடம் படித்து வரும் தன் மகள், 'மெக்கானிக்' இளைஞனுடன் ஓடிப்போவாள். அதை பொறுக்க முடியாத பெண்ணின் தந்தை, அடாவடியாக அவளை மீட்டு வருவார்.
அந்த பெண்ணுக்கு வேறு ஒருவரை கட்டாய திருமணம் செய்து வைப்பார். காதலித்த பெண்ணை இழந்து, கடைசியில், அந்த இளைஞன் பைத்தியமாகி சாலையில் திரிவான். அவனை பார்க்கும் அந்தப் பெண், கதறி அழுவாள். படம் பார்த்தவர்களும் நிஜமாகவே கண்கலங்குவர். இந்தக் கதை,


தமிழகத்தில் தற்போது நிஜமாகி வருகிறது. கவுரவ கொலைகள் சர்வ சாதாரணமாய் நடந்து வருகின்றன. இதன் பின்னணியில், ஜாதி சார்ந்த அரசியல் கட்சிகள் இயங்கி வருகின்றன என்பது, அரசுகளுக்கு தெரியாமல் இல்லை. பெற்றோரின் விருப்பத்துக்கு எதிராக, குடும்பம் சார்ந்த ஜாதிக்கு எதிராக, வேறு ஜாதி இளைஞனை காதலித்து, திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு, அப்பெண்ணின் குடும்பத்தார் தரும் மரணதண்டனை தான், கவுரவ கொலை.
ஜாதி மாறி திருமணம் செய்து கொள்ளும், தன் பெண்ணை, கவுரவ கொலை செய்வதோடு, அவளை திருமணம் செய்ய துணிந்த இளைஞனையும் சேர்த்து, கொன்று போடுவது வழக்கமாகி வருகிறது.


காதலித்து திருமணம் செய்து கொள்ளும் ஒரு பெண்ணும், இளைஞனும், பாதுகாப்புடன் வாழ, அவர்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டிய கடமை, அரசுகளுக்கு உள்ளது. கவுரவ கொலை செய்வோரை, சட்டம் முன் நிறுத்தி, அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்காத வரை, இக்கொலைகள் தொடர்ந்து நடந்தபடி தான் இருக்கும். 'கவுரவ கொலைகளை தடுக்க தகுந்த சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டிய கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது' என, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை மதித்து, செயல்பட்டால் தான், 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்ற பாரதியாரின் கனவு நனவாகும்!


முன் உதாரணமாக இருங்களேன்!
வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் செயல்படும், 'டாஸ்மாக்'கில், 7,074 மேற்பார்வையாளர்கள், 15 ஆயிரத்து, 435 விற்பனையாளர்கள், 3,547 உதவி விற்பனையாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். மாநிலம் முழுவதும், 5,152 மதுக்கடைகள் செயல்படுகின்றன.'டாஸ்மாக்' மூலம், தமிழக அரசுக்கு, ஆண்டுக்கு, 31 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.


ஆனால், குறைவான மாத தொகுப்பூதியம் மட்டுமே, டாஸ்மாக் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. தங்களுக்கு ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன் வைத்தனர். இதை ஏற்று, 'டாஸ்மாக் பணியாளர்களுக்கு தொகுப்பூதியம், 2,000 ரூபாய் கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும்' என, தமிழக சட்டசபையில் தமிழக அரசு அறிவித்தது. 'அரசிடம், டாஸ்மாக் ஊழியர்கள் செலுத்தியுள்ள டெபாசிட் தொகைக்கு வட்டியும் வழங்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபாட்டில் விற்பனையின் போது, கூடுதல் விலை வைத்து ஊழியர்கள் விற்பதை, மாநிலம் முழுவதும் பார்க்க முடிகிறது. பாட்டில் விலையை விட, கூடுதல் விலைக்கு விற்று தொகையை பிரித்துக் கொள்கின்றனர். 'வெறும் தொகுப்பூதியத்தை வைத்து மட்டும் வளமாக வாழ முடியாது' என, ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

'நாட்டில் மது அருந்துவோர், 16 கோடிக்கும் மேற்பட்டோர்; கஞ்சாவை, 3.1 கோடி பேர் பயன்படுத்துகின்றனர்' என்கிறார், மத்திய அமைச்சர், தாவர்சந்த் கெலாட். டாஸ்மாக் மூலம், ஆயிரக்கணக்கான கோடிகளை வருவாயாக ஈட்டும் தமிழக அரசு, மறுவாழ்வு மையங்களுக்கு, 3.64 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது; இது, மிக சொற்ப தொகையே. மதுக்கடைகளை படிப்படியாக குறைத்து, ஊழியர்களின் கல்வித் தகுதியை கருத்திற்கொண்டு, சிறப்பு தேர்வு வாயிலாக, அரசு அலுவலகங்களில் நியமிக்க வேண்டும். மது இல்லா மாநிலமாக, தமிழகத்தை மாற்ற, டாஸ்மாக் பணியாளர்களே, முன் உதாரணமாக திகழ வேண்டும்!


வெங்காயங்களே... மனசாட்சி இல்லையா?

எம்.சாணக்கியன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேசதுரோகி என தண்டனை பெற்றவர், எம்.பி., ஆகிறார். எத்தனையோ கொலை, கொள்ளை வழக்குகளில் சிக்கி இருக்கும் நபர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களாக தேர்ந்து எடுக்கப்படுவதை, எந்த சட்டமும் தடுக்கவில்லை. கொள்ளை அடிப்பதும் ஒரு அருமையான கலை தான் எனக் கூறுபவர், கட்சி தலைவராக, முதல்வராக இருக்க முடிகிறதே? இப்படிப்பட்ட கேடு கெட்ட ஜனநாயகம், தேவை தானா?
ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியவர், கடுமையாக தண்டிக்கப்படுகிறார்.


கோடிக் கணக்கில் வங்கிகளில் கடன் வாங்கியவர், வெளிநாட்டிற்கு ஓடி, சொர்க்க வாழ்க்கை வாழ்கிறார். நம் நாட்டில், அயோக்கியர்களுக்கு தான், மாலை மரியாதை எல்லாம், தாராளமாக கிடைக்கிறது. சாதாரண பியூன் வேலைக்கு, ஆள் எடுப்பதாக இருந்தாலும், எத்தனையோ விதிமுறைகளை கடைப்பிடிக்கின்றனர். பியூன் வேலைக்கு விண்ணப்பித்தோருக்கு, மருத்துவ பரிசோதனை நடத்தி, அவர் பூரண உடல் தகுதி பெற்றவர் தானா என, சான்றிதழ் பெற வேண்டும். குறைந்த பட்ச கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். போலீஸ் ஸ்டேஷனில், அவரை பற்றி, எந்த தவறான தகவலும் இருக்கக்கூடாது. அவரது தேசப்பற்று, சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக
இருக்க வேண்டும்.


அவர் மீது, எந்த சிவில், கிரிமினல் வழக்கும், நிலுவையில் இருக்கக் கூடாது. அரசியல் கட்சி சாராதவராக இருக்க வேண்டும்; மது குடித்து விட்டு, ரோட்டில் மட்டையாக கிடக்கக்கூடாது. இப்படி எத்தனையோ கட்டுப்பாடுகள், அரசு ஊழியர்களாக தேர்ந்தெடுக்கப் படுவோருக்கு
விதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அரசு சம்பளம் மற்றும் இதர வசதிகளை அனுபவிக்கும், எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களுக்கு, இப்படி எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. இப்படிப்பட்ட ஜனநாயகம், நாட்டில் செழித்து வளர்கிறது எனக் கூறும் வெங்காயங்களே... உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா?

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா

    அது என்னங்க எம்.கவிமதி, உண்மையான காதல் ஒரு ஆணுக்கு அழகான பிச்சைக்காரியிடமும், பெண்ணுக்கு அழகான பிட்சைகாரனிடமும் வரமாட்டேங்குது, எப்பொழுதும் தம்மை விட உயர்ந்த இடத்தில்தான் வருது, அது ஜாதியாக இருக்கட்டும், பொருளாதாரமாக இருக்கட்டும், இந்த காதலை எல்லாம் நீங்கள் உண்மைக்காதல் என்று கூறவருகிறீர்களா ? படிக்கும்போது செய்வது எல்லாம் காதலே இல்லை. பெற்றோர்கள் சொல்படி கேட்கவேண்டும் என்று அறிவுரை கூறுவதை விட்டு இனபால் கவர்ச்சியில் வருவதை ஆராதிக்கறீர்களே... உங்கள் குழந்தைகள் இதையெல்லாம் செய்தால் ஒரு பெற்றோர் ஆக இதை அனுமதிப்பீர்களா என்று ஒரு பெற்றோராக மசாட்சி தொட்டு சொல்லுங்க....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement