Advertisement

'டவுட்' தனபாலு

Share

உள்ளாட்சி துறை அமைச்சர், வேலுமணி: உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால், மத்திய அரசிடம் இருந்து, 2,128 கோடி ரூபாய் வர வேண்டி உள்ளது.

டவுட் தனபாலு: தமிழக அரசின், நிதிநிலை எப்படி இருக்குன்னு, உங்களுக்கு நல்லாவே தெரியும்... வர வேண்டிய, இவ்வளவு கோடி ரூபாய்க்கு, உள்ளாட்சித் தேர்தல் தான், முட்டுக்கட்டையாக இருக்கு என்றால், மாநில தேர்தல் கமிஷனுக்கு, பெருமளவு அழுத்தம் கொடுத்து, அதன் பணிகளை முடுக்கிவிட்டிருக்கலாமே... இதுதான், சாக்குன்னு, ஆண்டுக் கணக்கில், ஏன் அமைதி காத்தீங்க என்ற, 'டவுட்' வருதே...!


தி.மு.க., பொருளாளர், துரைமுருகன்: மத்தியில், இப்போது நிலையான ஆட்சி வந்திருக்கலாம். ஆனால், அது நிலையான ஆட்சி தானா என்பது, போகப் போகத்தான் தெரியும்.


டவுட் தனபாலு: 'தமிழக அரசு, ஊசலாட்டத்தில் இருக்கு... ஜூன், 3ல், ஸ்டாலின் முதல்வராவார்'னு, மேடையில் முழங்கினீங்க... இப்போ, அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை; இதைப் பற்றிப் பேசினால், மக்கள் சிரிச்சிடுவாங்கன்னு புரிஞ்சுக்கிட்டு, மத்திய அரசுக்கு, ஆருடம் பார்க்க
ஆரம்பிச்சுட்டீங்களோ என்ற, 'டவுட்' வருதே...!


முன்னாள் மத்திய அமைச்சர், சிதம்பரம்: கர்நாடகா மற்றும் கோவாவில், பா.ஜ.,வின் செயல்பாடுகள், ஜனநாயகத்தை கேவலப்படுத்தி உள்ளன. அந்த மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிலைமை, தங்கள் அரசியல் இலக்கை அடைய, பா.ஜ.,வுக்கு சாதகமாக இருக்கலாம். ஆனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும். இதை உணர்ந்து, மத்திய அரசு செயல்பட வேண்டும்.


டவுட் தனபாலு: காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்கள், கூண்டோடு, அணி தாவுவதை தடுக்க முடியலை... அடுத்த கட்சி ஆட்களை சேர்ப்பது தவறுன்னு, சொல்லவும் முடியலை... அதனால், பொருளாதார வளர்ச்சி குறித்து, பயம் காட்டினாலாவது, ஏதாவது பலன் கிடைக்குமான்னு பார்க்குறீங்களோ என்ற, 'டவுட்' வருதே...!


காங்., மூத்த தலைவர், திக்விஜய் சிங்: பண மதிப்பிழப்பு நடவடிக்கை காலத்தில், கோடிக்கணக்கான ரூபாய், பா.ஜ.,வினர் சம்பாதித்தனர். அந்த பணத்தை வைத்து தான், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், எம்.எல்,.ஏ.,க்களுடன், பா.ஜ., குதிரை பேரம் நடத்தி வருகிறது.


டவுட் தனபாலு: பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம், யாரெல்லாம் எவ்வளவு சம்பாதித்தாங்க என்ற விபரம் இருந்தால், அதை பகிரங்கப்படுத்த வேண்டியது தானே... ஏன் பொத்தாம் பொதுவாய் குற்றம்சாட்டுறீங்க... 'ஆட்சியில், ஊழல் செய்த பணத்தில், குதிரை பேரம் நடக்குது'ன்னு, ஒரு பேச்சுக்கு கூட சொல்ல முடியாத அளவுக்குத் தான், பா.ஜ.,வின் நிர்வாகம் இருக்குன்னு ஒப்புக் கொண்டீங்களே... அதை, எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்பதில், 'டவுட்'டே இல்லை...!


-காங்.,- - எம்.பி., சசிதரூர்: தொகுதிக்கு, நான் செய்த பணிகளால் தான், என் மீது, மக்கள் நம்பிக்கை வைத்து, மூன்றாவது முறையாக, வெற்றி பெற செய்துள்ளனர். தொகுதிக்கு எந்த பணியும் செய்யாத, எம்.பி.,க்கள், மக்களை சந்திப்பது மிகவும் கடினம்.


டவுட் தனபாலு: எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும், உங்களை அறியாமல், அவ்வப்போது, பல உண்மைகளை உளறிடுறீங்க... 'ராகுலால், நான்காவது முறையாக, அமேதியில் வெற்றி பெற முடியாததற்கு காரணமும், இது தான்; மக்களுக்கு செய்த பணிகளாலேயே, பா.ஜ., மீண்டும்
ஆட்சியை பிடித்தது' என்பதை பகிரங்கமாகச் சொல்ல, எதற்கு பயப்படுறீங்க என்ற, 'டவுட்' வருதே...!


கொங்கு இளைஞர் பேரவையைச் சேர்ந்த, எம்.எல்.ஏ., தனியரசு: மதுக்கடைகளில், கூட்டம் அலைமோதுகிறது. கிராமங்களில், பல, கி.மீ., பயணித்து, மதுவை வாங்க வேண்டி உள்ளது. எனவே, நடமாடும் மதுக்கடைகளை திறக்க வேண்டும்.


டவுட் தனபாலு: நாட்டுல, இது ஒண்ணு தான் பிரச்னையா... ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த மக்களின் குறைகளைப் பற்றிப் பேசாமல், சட்டசபையில், இதை எல்லாம் எழுப்புறீங்களே... விட்டால், வீடு தேடி, 'டோர் டெலிவரி' செய்யணும்னு கோரிக்கை வைப்பீங்களோ என்ற, 'டவுட்' ஏற்படுதே...!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • theruvasagan -

    மத்திய ஆட்சி நிலையான ஆட்சியா இல்லையான்னு போகப் போக தெரியுமாம். அது நிரந்தரமான ஆட்சியா மாறி சில பேருக்கு உக்காரவும் முடியாம நிக்கவும் முடியாம போய்கிட்டே இருக்குற மாதிரி செய்யத்தான் போகுது.

  • Nagarajan Duraisamy - Fremont,California,யூ.எஸ்.ஏ

    தனியரசு கொங்கு மண்டலத்துக்கு ஒரு கேடு.. ஏன் அப்படியே நடமாடும் ஒரு வண்டியை அவர் வீட்டுக்கு முன்னர் நிறுத்தி வியாபாரம் செய்யலாமே? அவர் குடும்பம் குழந்தைகள் எல்லாம் பயன் பெற்று வாழ்வாங்கு வாழட்டும்.

  • முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா

    Tasmac Sooper scheme

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement